டெல்லி: வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் தங்களுடைய மின்சார இருசக்கர வாகனத்தை தயாரித்து விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது. இதற்காக இந்த நிறுவனம் ஒரு கூட்டாளியை தேடி வருவது தெரியவந்துள்ளது. அண்மையில் டெல்லியில் நடைபெற்ற வாகன கண்காட்சியில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தங்களின் மின்சார கார்கள் மற்றும் மின்சார இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்தியது. உலக அளவில் மின்சார வாகன உற்பத்தியில் டெஸ்லா நிறுவனத்திற்கு கடும் போட்டியாக இருக்கிறது வின்ஃபாஸ்ட் நிறுவனம்.
இந்திய சந்தையில் தங்களுடைய மின்சார இருசக்கர வாகனங்களை விற்பனை செய்ய வேண்டும் என்பதில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தீவிரமாக இருக்கிறது. இதற்காக இந்தியாவை சேர்ந்த நிறுவனத்திடம் கூட்டு ஒப்பந்தம் மேற்கொள்ள தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது.

இந்தியாவை சேர்ந்த நிறுவனங்களோடு கூட்டு நிறுவனத்தை ஏற்படுத்தி மின்சார இரு சக்கர வாகனங்களை தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி நாம்சௌ தெரிவித்துள்ளார்.
இந்தியாவை சேர்ந்த பல்வேறு இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களிடமும் இது தொடர்பாக தங்கள் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அவர் கூறியுள்ளார். இருசக்கர வாகன சந்தையில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
வியட்நாமில் எங்கள் நிறுவனம் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது, தற்போது நாங்கள் இந்திய சந்தையிலும் கால் பதிக்க விரும்புகிறோம். இந்திய சந்தைக்கு தேவையான இருசக்கர வாகனங்களை இந்தியாவிலேயே தயாரித்து விற்பனை செய்ய வேண்டும் என விரும்புகிறோம் என அவர் கூறியுள்ளார்.
ஏற்கனவே இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் மின்சார கார் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது. VF6 மற்றும் VF7 ஆகிய இரண்டு மின்சார எஸ்யூவி மாடல் கார்களை தூத்துக்குடியில் அமைய இருக்கும் ஆலையில் தயாரித்து விற்பனை செய்ய இருப்பதாக வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தூத்துக்குடியில் தயாரிக்கப்படும் கார்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யும் திட்டம் இருப்பதாக கூறியுள்ளது. இந்தியாவில் தற்போது மின்சார இருசக்கர வாகன சந்தை போட்டி மிகுந்த சந்தையாக மாறி இருக்கிறது. ஓலா எலெக்ட்ரிக் மற்றும் ஏதர் ஆகிய நிறுவனங்கள் முன்னிலையில் இருக்கின்றன.
எனவே மற்ற நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புதிதாக மின்சார இரு சக்கர வாகனங்களை அறிமுகம் செய்த வண்ணம் இருக்கின்றன. இந்தியாவில் அதி வேகத்தில் இயங்கக்கூடிய மின்சார இருசக்கர வாகனங்களின் விற்பனை 2024 ஆம் ஆண்டின் 11, 48,000 என உயர்ந்துள்ளது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் நிறுவ இருக்கும் கார் உற்பத்தி ஆலையில் ஆண்டுக்கு 50,000 மின்சார கார்களை தயாரிக்க முடியும் என தெரிவித்துள்ளது. தூத்துக்குடி ஆலையிலேயே கூட இருசக்கர வாகனத்தை தயாரிப்பதற்கான அமைப்புகளை வின்ஃபாஸ்ட் நிறுவனம் கொண்டு வர வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications