சென்னை: வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் உலக அளவில் மின்சார கார்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் முன்னணி நிறுவனமாக வளர்ந்து வருகிறது. இந்த நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டத்தில் உற்பத்தி ஆலையை நிறுவி வருகிறது.
வின்ஃபாஸ்ட் ஆட்டோ இந்தியா என்ற பெயரில் இந்தியாவில் தன்னுடைய கார் உற்பத்தி நிறுவனத்தை தொடங்கி இருக்கும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய முதல் கார் விற்பனை நிலையத்தையும் தமிழ்நாட்டில் தான் திறந்து இருக்கிறது. சென்னை மவுண்ட் ரோடில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தன்னுடைய முதல் கார் விற்பனை நிலையத்தை தொடங்கியுள்ளது. கூடிய விரைவில் ஃவின்பாஸ்ட் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வரவிருக்கும் மின்சார கார்களின் மாடல்கள் இந்த ஷோருமில் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.

வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை பொருத்தவரை தூத்துக்குடியில் இருக்கும் தன்னுடைய கார் உற்பத்தி ஆலை பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. முதல்கட்டமாக VF 6 மற்றும் VF 7 என இரண்டு எஸ்யூவி ரக கார்களை வின்ஃபாஸ்ட் நிறுவனம் தூத்துக்குடி ஆலையில் உற்பத்தி செய்ய இருக்கிறது. இந்த கார்கள் தான் முதலில் இந்திய சந்தையில் விற்பனைக்கு வர உள்ளன.
முன்னதாக கார்கள் விற்பனைக்கு பிந்தைய சேவைகளை வழங்க வேண்டும் என்பதற்காக வின்ஃபாஸ்ட் நிறுவனம் மைடிவிஎஸ் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. வின்ஃபாஸ்ட் நிறுவன கார்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைக்கு பிந்தைய அனைத்து சேவைகளையும் மைடிவிஎஸ் வழங்க உள்ளது. அதே போல மின்சார கார்களுக்கான சார்ஜிங் வசதிகளை வழங்குவதற்காக ரோடு கிரேட் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது.

கடந்த 10ஆம் தேதி தான் தூத்துக்குடி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள தங்களுடைய கார் உற்பத்தி ஆலையில் உள்ளூரை சேர்ந்த 200 தொழில் நிபுணர்களுக்கு வின்ஃபாஸ்ட் நிறுவனம் வேலை வாய்ப்பு வழங்கியது. அடுத்த ஐந்து ஆண்டுகளுக்குள் இந்த ஆலையில் மட்டும் 3500 பேருக்கு படிப்படியாக வேலை வாய்ப்பு வழங்கப்படும் என்றும் இந்த உற்பத்தி ஆலையில் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்றும் வின்ஃபாஸ்ட் நிறுவனம் தெரிவித்து இருக்கிறது.
வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாடு அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு திட்டங்களில் இணைந்து பயிற்சி பெற்ற இளைஞர்களை வேலைவாய்ப்புக்கு தேர்ந்தெடுத்து இருப்பது மற்றொரு முக்கியமான விஷயமாகும். வின்ஃபாஸ்ட் நிறுவனத்தை பொறுத்தவரை இந்தியாவில் முதலில் இரண்டு எஸ்யூவி ரக மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டு இருக்கிறது. தூத்துக்குடி ஆலையில் ஒரு ஆண்டுக்கு 1.5 லட்சம் மின்சார கார்களை உற்பத்தி செய்வதற்கு இலக்கு நிர்ணயம் செய்துள்ளது.


Click it and Unblock the Notifications