டெல்லி: ஏதேனும் ஒரு விஷயம், பிற நாடுகளை விட நம்முடைய நாட்டில் வேகமாகவும் எளிதில் கிடைக்கிறது என்று சொன்னால் அதில் நமக்கு சந்தோஷம் தானே! பாஸ்போர்ட் வாங்குவது என்ற செயல்முறை பலருக்கும் சிக்கலானதாகவும், நேரம் எடுப்பதாகவும் தோன்றலாம். ஆனால், உண்மை என்ன தெரியுமா? இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது மிகவும் எளிதானது மற்றும் வேகமானது என்று கூறப்படுகிறது. இதனை நிரூபிக்கும் ஒரு சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது.
நாட்டில் பாஸ்போர்ட் வழங்கும் செயல்பாடு குறித்து எழுத்தாளரும் தொகுப்பாளருமான வீர் சங்வி பாராட்டு தெரிவித்துள்ளார். விண்ணப்பித்த 24 மணி நேரங்களுக்குள் அவரது பாஸ்போர்ட் அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. இது இந்தியாவில் பாஸ்போர்ட் பெறுவது எவ்வளவு வேகமாக செயல்முறை என்பதற்கு ஒரு சிறந்த உதாரணம்.

உலகிலேயே மிகவும் சிறந்த பாஸ்போர்ட் வழங்கும் செயல்முறைகளில் ஒன்றை இந்தியா கொண்டிருக்கிறது என்று எழுத்தாளர் வீர் சங்வி தனது அதிகாரப்பூர்வ X பிளாட்பார்மில் குறிப்பிட்டுள்ளார். வெளிநாடு செல்ல விண்ணப்பித்த சில நாட்களிலேயே புதிய பாஸ்போர்ட்டைப் பெற முடியாத பல நாடுகள் உள்ளன. குறிப்பாக டெல்லியில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகங்கள் மக்கள் நலன் சார்ந்த அணுகுமுறையைக் கொண்டுள்ளன என்றும் அவர் கூறியுள்ளார். எனது பாஸ்போர்ட் 24 மணிநேரத்திற்குள் ஸ்பீட் போஸ்ட் மூலம் வீட்டிற்கு வந்து சேர்ந்தது, என்றும் சங்வி மற்றொரு பதிவில் கூறியுள்ளார்.

பல X (முன்னதாக ட்விட்டர்) பயனாளர்கள் இந்த பதிவினை ஆதரித்தும், தங்களின் இதே போன்ற அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டுள்ளனர். சித் துபே (ChitDubey) என்ற X பயனர், "தட்கல் திட்டத்தின் கீழ் என் தாயாருக்கு விண்ணப்பித்தேன். சனிக்கிழமையில், 24 மணிநேரத்திற்குள் ஒரு காவல் துறை அதிகாரி எங்கள் வீட்டிற்கு வந்து விசாரணை நடத்தினார். 5 வேலை நாட்களுக்குள் பாஸ்போர்ட் கிடைத்தது. கடந்த சில ஆண்டுகளில் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.
மற்றொரு பயனரான அரவிந்த் (@aravind) தனது பதிவில், "முதியோருக்கான விரைவான சேவைக் காரணமாக, அன்றே அவர்களுக்கு பாஸ்போர்ட் கிடைத்ததாக நண்பர் மூலம் கேள்விப்பட்டேன். 2016ஆம் ஆண்டு முதல், அரசாங்கம் பாஸ்போர்ட் மையங்கள் மற்றும் செயல்முறைகளை மேம்படுத்தத் தொடங்கியதில் இருந்து, பிரச்சனைகள் குறைவாகவே உள்ளன. இந்திய பாஸ்போர்ட் அலுவலகங்கள் உலகில் பிறவற்றை விட சிறந்தவை. சில இந்தியர்களுக்கு இது தெரியாது. இதை நீங்கள் வெளிப்படுத்தி இருக்கிறீர்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இவரது பதிவு, மூத்த குடிமக்களுக்கான விரைவு சேவையையும், 2016 முதல் செயல்படுத்தப்பட்ட சீர்திருத்தங்களால் குறைந்துள்ள இடைத்தரகர்கள் மற்றும் லஞ்சப் பிரச்சனைகளையும் சுட்டிக்காட்டுகிறது.
கடந்த ஆண்டு, வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர், பாஸ்போர்ட்டை வழங்க எடுக்கும் சராசரி நேரம் 7-10 நாட்கள் என்று மக்களவையில் தெரிவித்திருந்தார். தட்கலைத் தேர்வு செய்பவர்கள் 1-3 நாட்களில் தங்களின் பாஸ்போர்ட்டைப் பெறுவார்கள். பாஸ்போர்ட்களை வழங்குவதற்கான சராசரி நேரம், சாதாரண பாஸ்போர்ட்டுகளுக்கு 7-10 நாட்கள் மற்றும் தட்கல் பாஸ்போர்ட்டுகளுக்கு 1-3 நாட்கள் ஆகும் என்று அமைச்சர் கூறினார்.


Click it and Unblock the Notifications