ஹைதராபாத்: விராட் கோலி தனக்கு சொந்தமான ஒன்8 பிராண்டின் பெயரில் ஹைதராபாத்தில் புதிதாக ஒரு உணவகத்தை திறந்து இருக்கிறார. புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான விராட் கோலி கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமல்ல பல்வேறு தொழில்களிலும் கால் பதித்து மிக வெற்றிகரமாக அவற்றை செயல்படுத்தி வருகிறார்.
விராட் கோலியின் ஜெர்சி எண்ணை கவுரவிக்கும் வகையில் ஒன்8 என்ற பிராண்டின் கீழ் ஆடைகள், உணவகங்கள் என பல்வேறு தொழில்களை நடத்தி வருகிறார். விராட்டின் சகோதரர் விகாஸ் கோலி இவற்றுக்கு தலைமையேற்று தொழில்களை அடுத்தடுத்த கட்டங்களுக்கு கொண்டு செல்கிறார்.

விராட் கோலியின் ஒன்8 பிராண்டில் புகழ்பெற்றது அவரது ஒன்8 கம்யூன் உணவகங்கள். இந்த பெயரின் கீழ் இந்தியாவின் முக்கிய நகரங்களில் உணவகங்களை நடத்தி வருகிறார். இந்த உணவகங்களுக்கு வாடிக்கையாளர்களிடையே வரவேற்பு அதிகரித்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவின் ஹைடெக் நகரமான ஹைதராபாத்தில் விராட் கோலி தன்னுடைய உணவகத்தை தொடங்கி இருக்கிறார்.
ஹைதராபாத்தில் பஞ்சாரா ஹில்ஸ் மற்றும் ஜூப்ளி ஹில்ஸ் பகுதிகளுக்கு இடைப்பட்ட இடத்தில் உணவகமானது நிறுவப்பட்டுள்ளது. இது தொடர்பாக தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவு செய்துள்ள விராட் கோலி " இந்த உணவகத்தின் முதல் பார்வை இதோ உங்களுக்காக, இது மிகவும் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்கிறது ஹைதராபாத் நகரம் எப்பொழுதும் அனைவரையும் வரவேற்கக் கூடிய ஒரு நகரம் இங்கே எங்களது உணவகத்தை நிறுவுவதற்கு நீண்ட காலமாக நான் காத்திருந்தேன் தற்போது ஹைதராபாத் நகருக்கு வந்து விட்டது ஒன்8 கம்யூன், சிறந்த உணவக அனுபவத்தை நீங்கள் இங்கே பெறலாம்" என பதிவிட்டுள்ளார்.
ஆடம்பரம் மற்றும் பாரம்பரியம் ஆகிய இரண்டையும் கலந்த வகையில் உணவகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. புகழ்பெற்ற கட்டட வடிவமைப்பாளர் சஞ்சித் அரோரா இதனை வடிவமைத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த உணவகத்தின் உள் வடிவமைப்புகளை ரசிப்பதற்காகவே பொதுமக்கள் வந்து செல்வார்கள் எனக் கூறும் அளவிற்கு ட்ரெண்டிங்காக இருக்கிறது.
ஹைதராபாத்திற்கே உரிய சிறப்பு உணவுகளும் பல சர்வதேச உணவுகளும் இங்கே கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை விராட் கோலிக்கு சொந்தமான ஒன் 8 கம்யூன் உணவகங்கள் பெங்களூரு ,டெல்லி , கொல்கத்தா, புனே தற்போது ஹைதராபாத் ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டுள்ளது.
தற்போது உணவக தொழில் மூலம் ஆண்டுக்கு 100 கோடி ரூபாய் வருவாய் கிடைப்பதாக தெரிகிறது. இதனை 200 கோடி ரூபாயாக உயர்த்துவதை இலக்காக கொண்டு கூடுதலாக உணவகங்களை திறக்க ஒன்8 கம்யூன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
Story written by: Devika


Click it and Unblock the Notifications