விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியா இடையேயான இணைப்பு இறுதிக் கட்டத்தை நெருங்கி வருகிறது. இதற்காக விஸ்தாரா விமான நிறுவனம் நவம்பர் 11-ஆம் தேதி முதல் தனது செயல்பாடுகளை நிறுத்தவுள்ளது. சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்-இன் ரூ. 2,058.5 கோடி அன்னிய நேரடி முதலீட்டுக்கு இந்திய அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது.
டாடா குழுமம் அதற்கு சொந்தமான ஏர் இந்தியா மற்றும் விஸ்தாரா விமான நிறுவனங்களை ஒன்றாக இணைக்க இருப்பதாக கடந்த 2022-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அறிவித்தது.

ஏர் இந்தியாவுடன் விஸ்தாராவின் இணைப்பு டாடா குழுமத்தின் விமானப் போக்குவரத்துத் துறையில் ஒரு முக்கிய நடவடிக்கையாக எடுக்கப்பட உள்ளது. முதலில் டாடா குழுமம் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் இடையே கூட்டு முயற்சியாக நிறுவப்பட்ட விஸ்தாரா, இப்போது டாடாவுக்குச் சொந்தமான மற்றொரு விமான நிறுவனமான ஏர் இந்தியாவுடன் ஒருங்கிணைக்கப்படவுள்ளது.
ஏர் இந்தியா விஸ்தாரா இணைப்பு வாடிக்கையாளர்களை எவ்வாறு பாதிக்கும்?: செப்டம்பர் 3, 2024 முதல் நவம்பர் 12, 2024 வரை வாடிக்கையாளர்கள் படிப்படியாக தங்கள் பயணத்திற்கு விஸ்தாராவுடன் முன்பதிவு செய்ய முடியாது என்று விஸ்தாரா நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவித்துள்ளது. அதன்பின் அனைத்து விஸ்தாரா விமானங்களும் ஏர் இந்தியாவால் இயக்கப்படும் மற்றும் முன்பதிவுகள் ஏர் இந்தியாவின் இணையதளத்திற்கு திருப்பி விடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நவம்பர் 11, 2024 வரை, விஸ்தாரா அதன் இயல்பான செயல்பாடுகளை பராமரிக்கும். இந்த மாறுதல் காலத்தில் பயணிகள் வழக்கம் போல் விஸ்தாராவில் முன்பதிவு செய்து பயணிக்கலாம்.
ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கு என்ன நடக்கும்?: ஏற்கனவே விஸ்தாரா விமான நிறுவனத்தில் முன்பதிவு செய்துள்ள பயணிகள் நவம்பர் 11 வரை வழக்கம் போல் பயணம் செய்யலாம். நவம்பர் 11-ஆம் தேதிக்கு பிறகு விஸ்தாரா நிறுவனத்தில் முன்பதிவு செய்து டிக்கெட்களை வைத்திருக்கும் பயணிகளுக்கு தடையற்ற மாற்று விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது. அவர்களின் முன்பதிவுகள் தானாகவே ஏர் இந்தியா விமானங்களுக்கு மாற்றப்படும்.
முன்பதிவு குறித்த புதுப்பிக்கப்பட்ட தகவல்கள் வாடிக்கையாளருக்கு ஏர் இந்திய விமான நிறுவனத்தின் மூலம் தனித்தனியாகப் பகிரப்படும்.
கிளப் விஸ்தாரா லாயல்டி திட்டத்திற்கு என்ன நடக்கும்?: விஸ்தாரா மற்றும் ஏர் இந்தியாவின் முழு ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து, அந்தந்த விமான நிறுவனங்களின் லாயல்டி திட்டங்களும் ஒன்றிணைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளப் விஸ்தாரா உறுப்பினர்கள் தங்கள் கணக்குகளை ஏர் இந்தியாவின் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸ் திட்டத்தில் ஒருங்கிணைக்கலாம். இது வேண்டாமென்றால் அதிலிருந்து விலகுவதையும் உறுப்பினர்கள் தேர்வு செய்யலாம்.
கிளப் விஸ்டாரா மற்றும் ஃப்ளையிங் ரிட்டர்ன்ஸ் ஆகிய இரண்டிலும் உறுப்பினர்களாக உள்ள வாடிக்கையாளர்கள் தங்கள் கணக்குகளை இணைக்க விருப்பம் உள்ளது. இரண்டு கணக்குகளிலும் உள்ள முக்கிய விவரங்கள் பொதுவானதாக இருந்தால், ஆட்டோமேட்டிக் முறையில் இந்த ஒருங்கிணைப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணைப்புச் செயல்பாட்டின் காரணமாகக் கூடுதல் தகவல்களைப் பெற பயணிகளுக்கு உதவும் வகையில் அடிக்கடி கேட்கப்படும் கேள்விகளின் (FAQs) தொகுப்பும் தயார் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே விஸ்தாராவின் ஏர் இந்தியா உடனான இணைப்புக்கு முன்பு டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கான விவரங்கள் அந்தந்த பயணிகளுக்கு அனுப்பப்படும். ஆதலால் இந்த மாறுதல் குறித்து பயணிகள் எந்தக் கவலையும் படத் தேவையில்லை. சுமூகமான மாறுதலுக்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications