விடாமுயற்சியினாலும் கடுமையான உழைப்பினாலும் ஒரு பார்வையற்ற மனிதர் இன்றைக்கு ரூ.350 கோடி மதிப்புள்ள நிறுவனத்துக்குச் சொந்தக்காரர் ஆகியுள்ளார். ஒரு சாதாரண கிராமத்தில் பிறந்தவர் பவேஷ் பாட்டியா. அவருக்கு 23 வயது இருக்கும்போது கண்ணில் ஏற்பட்ட கோளாறு காரணமாக பார்வையை இழந்தார்.
இருப்பினும் தனது வாழ்க்கையில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் மனம் தளராமல் உழைத்தார். டெக்னாலஜி மற்றும் தொழில்துறையில் அவருக்கு மிகுந்த ஆர்வம் இருந்தது. இந்த நிலையில் முதுகலை பட்டப்படிப்பை முடித்த பவேஷ் பாட்டியா பார்வையில்லாததால் எந்த வேலையும் கிடைக்காமல் தவித்தார்.

அந்த நேரத்தில் பாட்டியாவுக்கு அவரது தாயார் ஆறுதலாக இருந்தார். அதேநேரத்தில் திருமணமான பாட்டியாவின் மனைவிக்கு உடல்நலம் குன்றியதால் தான் வைத்திருந்த சேமிப்பு பணத்தை முழுவதும் மனைவியின் சிகிச்சைக்காக செலவழித்தார்.
இதனிடையே 1999 ஆம் ஆண்டில் அவர் நேஷனல் அசோசியேஷன் ஃபார் தி பிலைண்டு ஸ்கூலில் சேர்ந்து மெழுகுவர்த்தி தயாரிக்கும் தொழிலைக் கற்றுத் தேர்ந்தார். இதையடுத்து ஒரு நண்பரின் தள்ளுவண்டியை தினமும் ரூ.50க்கு வாடகைக்கு எடுத்து மகாபலேஷ்வரில் உள்ள சந்தையில் மெழுகுவர்த்திகளை விற்று வந்தார்.
விற்ற பணத்தில் மூலப் பொருட்களை வாங்குவதற்காக ரூ.25ஐ சேமித்து வைப்பார். அவரது வாடிக்கையாளராக வந்த நீத்தா என்ற பெண்ணை திருமணம் செய்தார். நீத்தா வந்தபின் அவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனை ஏற்பட்டது. மெழுகுவர்த்திகளை விற்பதற்கும் தயாரிப்பதற்கும் பாட்டியாவுக்கு நீத்தா உதவி செய்தார்.
இந்த நிலையில் சதாரா வங்கியில் இருந்து அவருக்கு ரூ.15000 கடன் கிடைத்தது. இதை வைத்து 15 கிலோ மெழுகு, இரண்டு டைகள், ஒரு தள்ளுவண்டியை வாங்கினார். படிப்படியாக வியாபாரத்தை பெருக்கிய பாட்டியா இன்றைக்கு பல கோடிகளுக்கு அதிபராக மாறியுள்ளார். அவரது கம்பெனி இப்போது ஆண்டுக்கு ரூ.350 கோடி வருவாய் பெறுகிறது.
அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாடிக்கையாளர்கள் குவிந்து வருகின்றனர். வழக்கமான மெழுகுவர்த்தி, நறுமண மெழுகுவர்த்தி, மதக்கும் மெழுகுவர்த்தி போன்ற வகைவகையான மெழுகுவர்த்திகளை தயாரித்து விற்றார். தனது நிறுவனத்தில் 9000 பார்வையற்றவர்களை வேலைக்கு எடுத்து மெழுகுவர்த்தி தயாரிக்கும் பயிற்சியை அளித்தார். அதை அவரது மனைவி நீத்தா மேற்பார்வையிட்டார்.
இன்றைக்கு 12,000 வெவ்வேறு விதமான மெழுகுவர்த்திகளை தயாரித்து உலகம் முழுவதும் உள்ள 1000 கார்ப்பரேஷன்களுக்கு விற்கிறார். அவரது திறமையை பிரபல தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பாராட்டியுள்ளார். தனது சோசியல் மீடியா பக்கத்தில் பாட்டியாவின் வெற்றிக்கதையை பகிர்ந்துள்ளார்.
கடும் சிரமத்துக்கு இடையே தனது கனவை நனவாக்கியதாக பாட்டியா தெரிவிக்கின்றார். ஆரம்பத்தில் பலராலும் புறக்கணிக்கப்பட்ட பின்னர் தன்னால் இந்த நிலையை எட்ட முடிந்தது என்கிறார்.


Click it and Unblock the Notifications