ஒரு காலத்தில் ஊருக்கு ஒரு இன்ஜினியர், டாக்டர் இருந்த காலம் மாறி தற்போது தெருவுக்கு பல டாக்டர்கள், இன்ஜினியர்கள் என நிலைமை மாறியுள்ளது. இதேபோல் பெங்களூர், சான் பிரான்சிஸ்கோ போன்ற ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் நிறைந்திருக்கும் நகரங்களில் தெருவுக்கு ஒரு ஸ்டார்ட்அப் நிறுவனம் இருக்கும் நிலைக்கு வந்துள்ளது.
ஆனால் இங்கு ஒரு படிக்கு மேலே சென்று ஒரு குடும்பமே ஸ்டார்ட்அப் நிறுவனர்கள், சிஇஓ-வாக உள்ளனர். தப்பி தவறி கூட குடும்பமாக சேர்ந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்களை துவங்கியுள்ளார்கள் என நினைக்க வேண்டாம் குடும்பத்தில் ஒவ்வொருவரும் ஒரு நிறுவனத்தை துவங்கி சிஇஓ-வாக உள்ளனர்.

அமெரிக்காவில் இந்திய குடும்பம் எப்படியிருக்கும் என நினைக்கிறோமோ, அதை விட பல மடங்கு, கடுமையாக உழைக்கும், ரிஸ்க்-ஐ ரஸ்க் மாதிரி சாப்பிடும் குடும்பம் தான் விஸ்வநாதன் குடும்பம்.
33 வயதான தாரா விஸ்வநாதன் Rupa Health நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக உள்ளார். அமெரிக்காவில் ஹெல்த்கேர் சேவையில் அசத்தி வரும் இந்நிறுவனத்தின் மதிப்பு மார்ச் 2022ல் 80 முதல் 120 மில்லியன் டாலர் என மதிப்பிடப்பட்டது. ஆகஸ்ட் மாதம் 18.5 மில்லியன் டாலர் முதலீட்டை திரட்டியது, இதன் மூலம் தற்போது 200 முதல் 250 மில்லியன் டாலர் வரையில் மதிப்பிடப்படலாம்.
35 வயதான நிகில் விஸ்வநாதன் Alchemy என்னும் பிளாக்செயின் ஸ்டார்ட்அப் நிறுவனத்தில் நிறுவனர் மற்றும் சிஇஓ-வாக உள்ளார். இவருடைய ஸ்டார்ட்அப் நிறுவனம் சுமார் 10 பில்லியன் டாலர் மதிப்பீடு உடனும், நிகில் விஸ்வநாதன் 1.8 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் போர்ப்ஸ் பணக்காரர்கள் பட்டியலில் இடம்பெற்றார்.
அண்ணன், தங்கையான தாரா விஸ்வநாதன் மற்றும் நிகில் விஸ்வநாதன் இருவரும் ஸ்டான்போர்ட் பல்கலைகழகத்தில் படித்து பட்டம் பெற்றவர்கள். இவர்களே இப்படின்னா, இவர்களுடைய பெற்றோர்கள் எப்படி..? சொல்லப்போனால் ரிஸ்க் எடுத்து ஸ்டார்ட்அப் நிறுவனத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தாரா விஸ்வநாதன் மற்றும் நிகில் விஸ்வநாதனுக்கு வந்தது அவர்களின் பெற்றோர்கள் வாயிலாக தான்.
இவர்களின் தந்தை பாலு விஸ்வநாதன் அமெரிக்காவில் கிரிட்டிக்கல் கேர் பரிவில் மருத்துவராக இருந்தவர், தாய் உஷா அக்கவுண்டென்ட். இவரும் கைநிறைய சம்பளத்துடன் பாதுகாப்பான வாழ்க்கையை வாழ்ந்துக்கொண்டு வந்தனர். ஆனால் பெரும் கனவுகளை உடைய பாலு மற்றும் உஷா ரிஸ்க் எடுக்க முடிவு செய்தனர்.
தாரா மற்றும் நிகில் பள்ளியில் படித்துக்கொண்டு இருந்த போது பாலு மற்றும் உஷா ஆகியோர் தங்களது பணியை விடுத்து கன்சல்டன்சி வர்த்தகத்தை துவங்கினர். இது மட்டும் அல்லாமல் உஷா கல்லூரிக்கு சென்று இன்பர்மேஷன் சிஸ்டம் மேனேஜ்மென்ட் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றார்.
1990களில் இன்டர்நெட் பூம் நேரத்தில் பல லட்சம் இந்தியர்களின் கனவுகளை நினைவாக சொந்தமாக நிறுவனங்களை துவங்கியவர்களில் பாலு மற்றும் உஷா-ம் ஒருவர். இவர்கள் உருவாக்கிய Starnik Systems கிளவுட் அடிப்படையில் இயங்கும் ஒரு யுடிலிட்டி பில்லிங் சாப்ட்வேர் நிறுவனம். தற்போது Starnik Systems அமெரிக்க விமான படை முதல் பல முன்னணி யூடிலிட்டி நிறுவனங்களுக்கும் சேவை அளிக்கிறது.
Starnik Systems சுமார் 4 பில்லியன் டாலர் மதிப்பிலான வர்த்தகத்திற்கான பில்லிங்-ஐ நிர்வாகம் செய்கிறது. இதன் மூலம் அமெரிக்காவில் வாழும் இந்தியர்களுக்கு விஸ்வநாதன் குடும்பம் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன் ஆக உள்ளனர்.


Click it and Unblock the Notifications