இந்திய ஸ்மார்ட்போன் சந்தையைக் கட்டியாளும் சீன நிறுவனங்கள் அடுத்தடுத்து வர்த்தக மோசடிகள், பண மோசடிகளில் சிக்கி வருகிறது. தற்போது விவோ மிகப்பெரிய தொகையை மோசடி செய்து அமலாக்க துறையிடம் மாட்டியுள்ளது.
மத்திய அமலாக்க துறை செவ்வாய் மற்றும் புதன்கிழமை மட்டும் சுமார் 22 மாநிலங்களில் Vivo நிறுவனத்தின் வளாகங்கள் மற்றும் தொடர்புடைய 44 இடங்களில் சோதனை நடத்தியது. இந்தச் சோதனையில் விவோ நிறுவனத்தின் பண மோசடி செய்ய அடித்தளமிட்டது யார் என்பது உட்படப் பல விஷயங்கள் வெளியாகியுள்ளது.
இதேவேளையில் இந்தியாவில் வரி எய்ப்புச் செய்யப் பெரும் தொகையைக் கணக்கில் காட்டாமலேயே சீனாவிற்குத் திருப்பியுள்ளது தெரிய வந்துள்ளது.
62,476 கோடி ரூபாய் அபேஸ்
சீன ஸ்மார்ட்போன் தயாரிப்பு மற்றும் விற்பனை நிறுவனமான விவோ-வின் இந்தியப் பிரிவு அதன் மொத்த விற்றுமுதல் அதாவது Turnover-ல் கிட்டத்தட்ட 50 சதவீத பணத்தைச் சுமார் 62,476 கோடி ரூபாயை இந்தியாவில் வரி செலுத்துவதைத் தவிர்ப்பதற்காகவே திட்டமிட்டு சீனா-வுக்கு அனுப்பியுள்ளது என அமலாக்கத் துறை வியாழக்கிழமை (இன்று) கூறியுள்ளது.
அமலாக்க துறை சோதனை
அமலாக்க துறை விவோ நிறுவனம் மற்றும் அதன் தொடர்புடைய 23 நிறுவனங்களுக்குச் சொந்தமான 44 இடங்களில் செய்த சோதனையில் பல்வேறு நிறுவனங்களுக்குச் சொந்தமான 119 வங்கிக் கணக்குகளில் வைக்கப்பட்டிருந்த ரூ.465 கோடி மதிப்புள்ள பணம், ரூ.73 லட்சம் ரொக்கம் மற்றும் 2 கிலோ தங்கக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
பின் லுவோ
இதே வேளையில் விவோ இந்தியாவில் வர்த்தகத்தைத் துவங்கவும், விரிவாக்கம் செய்யவும் சூத்திரதாரியாக இருந்தது பின் லுவோ என்ற நபர் தற்போது நாட்டை விட்டே வெளியேறியதாக அறிவித்துள்ளது அமலாக்க துறை.
23 நிறுவனங்கள்
மேலும் இந்தியாவில் விவோ போன்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள சுமார் 23 நிறுவனங்களில் பொதுவான இயக்குநராகவும் உள்ளார் பின் லுவோ. இதன் மூலம் இவரது தலைமையில் தான் மொத்த பண மோசடியும் நடந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
தோண்ட தோண்ட மோசடி
அமலாக்க துறையின் சோதனையில் விவோ மிகப்பெரிய அளவில் சிக்கியுள்ளது மட்டும் அல்லாமல் பல முறைகேடுகள் செய்துள்ளதையும் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் தோண்ட தோண்ட மிகப்பெரிய விஷயங்கள் அடுத்தடுத்து வெளியாகி வருகிறது.


Click it and Unblock the Notifications