ரஷ்யாவின் முன்னணி எண்ணெய் நிறுவனமான ரோஸ்நெஃப்ட், இந்தியாவில் இதுவரையில் 20 பில்லியன் டாலர் முதலீடு செய்ய உள்ளதாக ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் தெரிவித்துள்ளார். இது இந்தியா மற்றும் ரஷ்யா இடையேயான எண்ணெய் துறை வர்த்தக கூட்டாணியை பெரிய அளவில் வலுப்படுத்தும் முக்கியமான படியாகப் பார்க்கப்படுகிறது.
ரஷ்யா - உக்ரைன் போருக்குப் பின்பு இந்தியா - ரஷ்யா மத்தியிலான வர்த்தகம் மிகப்பெரிய அளவில் வளர்ச்சி அடைந்துள்ளது. குறிப்பாக கச்சா எண்ணெய் வர்த்தகத்தில் வரலாறு காணாத ரீதியான மாற்றம் நடந்துள்ளது, இந்தியாவுக்கு எப்போதும் முன்னணி எண்ணெய் சப்ளையராக இருக்கும் சவுதி, ஈரான், வளைகுடா நாடுகள் போன்றவற்றை ஓரம்கட்டிவிட்டு முதல் இடத்தில் கடந்த 2 வருடமாக இருந்து வருகிறது.

ஆனால் இந்தியாவில் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் பயணம் இதற்கு முன்னரே துவங்கியுள்ளது. 2017 ஆம் ஆண்டில் ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் எசார் ஆயில் நிறுவனத்தை 12.9 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது. இதன் மூலம், இந்தியாவின் எரிபொருள் சில்லறை சந்தையில் ரோஸ்நெஃப்ட், Nayara Energy பெயரில் பெட்ரோல் டீசலை விற்பனை செய்து வருகிறது.
Nayara Energy நிறுவனத்தின் ரஷ்யாவின் ரோஸ்நெஃப்ட் 49.13 சதவீத பங்குகளையும், கேசானி எண்டர்பிரைசர்ஸ் மற்றும் யூனிடெட் கேப்பிடல் ஆகியவை இணைந்து 19.13 சதவீத பங்குகளை கொண்டுள்ளது. இதன் சிஇஓ-வாக Alessandro Des Dorides உள்ளார்.
இந்தியாவில் தனது செயல்பாடுகளை மேலும் விரிவுபடுத்த, ரோஸ்நெஃப்ட் உற்பத்தி மற்றும் மார்கெட்டிங் துறைகளில் இந்திய நிறுவனங்களுடன் இணைந்து செயல்படத் திட்டமிட்டுள்ளது. இந்தியாவின் வளர்ந்து வரும் பொருளாதாரம் மற்றும் அதிகரித்து வரும் எரிபொருள் தேவை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் முதலீடு செய்வது லாபகரமானதாக ரோஸ்நெஃப்ட் கருதுகிறது என விளாடிமிர் புதின் 15th VTB Russia Calling Investment Forum கூட்டத்தில் பேசியுள்ளார்.
ரோஸ்நெஃப்ட், இந்தியாவின் எசார் ஆயில் நிறுவனத்தை 12.9 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியது மூலம் இந்தியா போன்ற மாபெரும் சந்தையில் நேரடியாக வர்த்தகம் செய்யும் வாய்ப்பை பெற்றுள்ளதை மறுக்க முடியாது.
தற்போது விளாடிமிர் புதின் நேரடியாக இந்தியாவில் முதலீடு செய்வதில் பச்சை கொடி காட்டியிருக்கும் வேளையில், அடுத்தடுத்த முதலீடுகள் எண்ணெய் உற்பத்தியிலும், விற்பனையிலும் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications