இந்திய டெலிகாம் சந்தையில் ஒரு காலத்தில் மிகப்பெரிய மதிப்புடன் வலம் வந்த பிரிட்டன் நாட்டின் வோடபோன் நிறுவனம் அதிகப்படியான நிலுவை தொகையால் மாட்டிக்கொண்டது, இதற்கு மத்தியில் ரிலையன்ஸ் ஜியோ-வின் பிரம்மாண்ட 4ஜி சேவை அறிமுகத்தால் பெரும் பாதிப்பை எதிர்கொண்டது.
ஜியோ-வை சமாளிக்கும் வகையில் வோடபோன் நிறுவனம் இந்தியாவின் ஐடியா செல்லுலார் நிறுவனத்துடன் இணைந்து சில மாதங்கள் இந்தியாவில் அதிக டெலிகாம் வாடிக்கையாளர்களை கொண்ட நிறுவனமாக வலம் வந்தது.

ஆனால் அதிகப்படியான நிலுவை தொகையாலும், வர்த்தகத்தையும் வாடிக்கையாளர்களையும் விரிவாக்கம் செய்ய முடியாத காரணத்தாலும் இந்தியாவில் கடந்த ஒரு வருடமாக தொடர்ந்து வர்த்தகத்தை இழந்து வருகிறது.
இந்தியாவில் தான் இப்படியென்றால் அதன் தலைமையிடமான பிரிட்டன் நாட்டிலும் கிட்டத்தட்ட இதே நிலை தான். சமீபத்தில் பிரிட்டன் வோடாபோன் குழுமத்தின் சிஇஓ-வாக Margherita Della Valle நியமிக்கப்பட்டார்.
இவர் தலைமையிலான நிர்வாகம் பல முக்கிய முடிவுகளை எடுத்து வரும் வேளையில் நடப்பு நிதியாண்டில் நிறுவனத்தின் வருவாய் மற்றும் லாப வளர்ச்சி மிகவும் குறைவாகவோ அல்லது ஜீரோ-வாக இருக்கலாம் என கணித்துள்ளது. இதனால் நிறுவனத்தை சிறியதாகவும், எளிமையானதாகவும் மாற்ற முடிவு செய்துள்ளார்.
இது கிட்டத்தட்ட கூகுள், மைக்ரோசாப்ட், மெட்டா, அமேசான் போன்ற நிறுவனங்களின் செலவின குறைப்பு போலவே வோடாபோனும் லாபத்தை தக்க வைக்க ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. டெக் துறை, வங்கி, கன்சல்டிங் துறையை தான் இந்த பணிநீக்கம் என்ற விஷ பூச்சி கடித்து வந்தது என்றால் தற்போது டெலிகாம் நிறுவனங்களையும் கடிக்க துவங்கியுள்ளது.
ரெசிஷன் அச்சம் உலகம் முழுவதும் அதிகரித்து வரும் வேளையில் பிரிட்டன் நாட்டின் பொருளாதாரம் வல்லரசு நாடுகள் மத்தியில் மிகவும் மோசமாக உள்ளது. இந்த நிலையில் வோடபோன் அறிவிப்பு அந்நாட்டு மக்கள் மத்தியிலும், வோடபோன் ஊழியர்கள் மத்தியிலும் எதிர்பார்த்த ஒன்று தான்.
இந்த நிலையில் வோடாபோன் சிஇஓ Margherita Della Valle அறிவிப்பின் படி அடுத்த 3 வருடத்தில் 11000 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளார். இந்த பணிநீக்கம் பிரிட்டன், ஜெர்மனி, ஸ்பெயின் நாட்டு ஊழியர்களை அதிகளவில் பாதிக்கும்.


Click it and Unblock the Notifications