இந்திய டெலிகாம் சந்தையில் வர்த்தகம், வாடிக்கையாளர்களைத் தொடர்ந்து இழந்து வருவது மட்டும் அல்லாமல் மத்திய அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையின் அளவு அதிகரித்துக்கொண்டே வருகிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் வோடபோன் ஐடியா தனது வர்த்தகத்தை எலான் மஸ்க்-ன் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்திற்கு விற்பதாகத் தகவல் வெளியானது.
இந்தக் குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை வோடபோன் ஐடியா, எலான் மஸ்க்-ன் ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்குப் பங்குகள் விற்பனை செய்வது குறித்து எவ்விதமான ஆலோசனைனையும் நடக்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, வோடபோன் ஐடியா நிறுவனத்தில் மத்திய அரசு தனது 33 சதவீத பங்குகளை எலான் மஸ்க்கிற்கு விற்கலாம் என்று தகவல் வெளியானது.
இந்தியாவில் ஸ்டார்லிங்க் சேவையை அறிமுகம் செய்வதில் பல தடைகளை எதிர்கொண்டு இருக்கும் எலான் மஸ்க் நிறுவனத்திற்கு வோடபோன் பங்குகளைக் கைப்பற்றுவது மூலம் ஸ்பேஸ்எக்ஸ் இந்திய கிளை டெலிகாம் நிறுவனமாக மாறலாம். இதன் மூலம் எலான் மஸ்க் தனது ஸ்டார்லிங்க் தேவையை மிகவும் எளிதாக அறிமுகப்படுத்த முடியும்.
இந்தியாவில் ஏர்டெல், ஜியோ, ஸ்பேஸ்எக்ஸ் ஆகியவற்றில் யார் முதலில் செயற்கைக்கோள் வாயிலாகப் பிராண்ட்பேன்ட் சேவையை அறிமுகம் செய்வதில் பெரும் போட்டி நிலவுகிறது. இதனால் எலான் மஸ்க், திவாலாகும் நிலையில் இருக்கும் வோடாபோன் ஐடியா நிறுவனத்தை கைப்பற்ற வாய்ப்புள்ளது என அனைவரும் நம்பினர்.
ஆனால் வோடபோன் ஐடியா செவ்வாய்க்கிழமை அறிக்கையில், நிறுவனம் செபி விதிமுறைகளை முழுமையாகக் கடைப்பிடிக்கும் காரணத்தால், முக்கிய நிதி சார்ந்த முடிவுகளைக் கட்டாயம் செபியிடம் முன்கூட்டியே அறிவிக்கும் என வோடபோன் ஐடியா தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
வோடபோன் ஐடியா நிறுவனத்தில் மத்திய அரசு தனது 33 சதவீத பங்குகளை எலான் மஸ்க்கிற்கு விற்கலாம் என்று தகவல் வெளியானதில் இருந்து கடந்த ஐந்து வர்த்தக நாளில் இந்நிறுவன பங்குகள் சுமார் 20 சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளன. கடந்த 12 மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் இருமடங்காக அதாவது ரூ.16 ஆக இருமடங்காக உயர்ந்துள்ளது.
செவ்வாய்க்கிழமை வோடபோன் ஐடியா அறிக்கை வெளியான பின்பு இதன் பங்குகள் 6 சதவீதம் வரையில் சரிந்துள்ளது.


Click it and Unblock the Notifications