சென்னை: ஐரோப்பாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமும், உலகளவில் மிகவும் புகழ்பெற்ற கார் பிராண்டான வோக்ஸ்வாகன் மோசமான நிலையை எதிர்கொண்டு வருகிறது. இந்த நிலையைச் சமாளிக்க நிறுவனத்தில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்ய முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வோக்ஸ்வாகன் நிர்வாகத்தின் தற்போதைய முடிவின் படி குறைந்தது மூன்று தொழிற்சாலைகளை மூடவும், பல ஆயிரக்கணக்கான பணியாளர்களை பணிநீக்கம் செய்யவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது.

வோக்ஸ்வாகன் கார்களுக்கு சீனா மற்றும் ஐரோப்பியச் சந்தையில் நாளுக்கு நாள் டிமாண்ட் குறைந்து வரும் வேளையில், செலவுகளைக் குறைத்து, திறம்பட கார்களை தயாரித்து மலிவு விலையில் விற்பனை செய்யும் திட்டத்துடன் இந்த முடிவுகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்த முடிவுகளை நிறைவேற்றுவதற்காக வோக்ஸ்வாகன் நிர்வாகம் கடந்த சில வாரங்களாக வோக்ஸ்வாகன் தொழிற்சங்கங்களுடன் தீவிர பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது. வோக்ஸ்வாகன் முதல் முறையாக ஜெர்மனியில் உள்ள உற்பத்தி தொழிற்சாலை மூடுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்துவது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது.
வோக்ஸ்வாகனின் தொழிலாளர் சங்கத் தலைவர் டானியேலா கவால்லோ இதுகுறித்து கூறுகையில், 3 தொழிற்சாலை மூடுவது, பல்லாயிரம் ஊழியர்களை பணிநீக்கம் செய்வது குறித்து நிர்வாகம் தீவிரமாக உள்ளதை உறுதிப்படுத்தினார். இது வெறும் பேச்சுவார்த்தை தந்திரம் அல்ல என்றும் அவர் வலியுறுத்தினார். வோக்ஸ்வாகன் முடிவு ஜெர்மன் தொழில்துறையின் கடுமையான சரிவைத் தூண்டும் என்று அவர் கவலை தெரிவித்தார்.
ஜெர்மனியில் வோக்ஸ்வாகன் குரூப்-ல் மட்டும் சுமார் 300,000 தொழிலாளர்களைப் பணியாற்றி வருகின்றனர். இதில் எத்தனை பேர் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்பது உறுதிப்படுத்த முடியவில்லை.
இதன் ஒருபகுதியாகத் தான் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனம் தனது 50 சதவீத பங்குகளை மஹிந்திரா குழுமத்துடன் விற்பனை செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
வோக்ஸ்வாகன் மட்டும் அல்லாமல் உலகில் பல முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனங்கள் எலக்ட்ரிக் வாகன மாற்றத்தின் சவால்கள் மற்றும் சீன கார் தயாரிப்பாளர்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டியுடன் போராடி வருகிறது.
ஐரோப்பிய யூனியன் சீனா கார்கள் மீது அதிகப்படியான வரியை விதித்து வந்தது குறிப்பிடத்தக்கது. இதேவேளையில் ஐரோப்பிய யூனியனின் மத்திய வங்கி பொருளாதாரத்தை மேம்படுத்த வட்டி விகிதங்களைத் தொடர்ந்து குறைத்து வருகிறது, ஆயினும் இது வோக்ஸ்வாகன் வர்த்தகத்தை மேம்படுத்தவில்லை என்பதே சோகமான விஷயம்.


Click it and Unblock the Notifications