ஸ்வீடன் நாட்டை சேர்ந்த லாரி மற்றும் பேருந்து தயாரிப்பு நிறுவனமான வோல்வோ (volvo) குழுமம் கர்நாடக மாநிலத்தில் 1400 கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக கர்நாடக மாநில அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திட்டு உள்ளது.
ஸ்வீடனை தலைமையிடமாக கொண்டு வோல்வோ குழுமம் செயல்பட்டு வருகிறது. 14 பிராண்டுகளின் கீழ் இந்த நிறுவனம் லாரிகள், பேருந்துகள் மற்றும் பிற வாகனங்கள் உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இந்த நிறுவனம் 1927 ஆம் ஆண்டிலிருந்து செயல்பட்டு வருகிறது. வோல்வோ குழுமம் இந்தியாவில் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. கிட்டத்தட்ட 25 ஆண்டுகளாக வெற்றிகரமாக இந்த நிறுவனம் இந்தியாவில் பேருந்து ,லாரி உள்ளிட்டவற்றை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
இந்தியாவில் மூன்று இடங்களில் இந்த நிறுவனம் உற்பத்தி ஆலைகளையும் நிறுவி இருக்கிறது. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் தன்னுடைய நான்காவது சர்வதேச உற்பத்தி ஆலையை நிறுவுவதற்கு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
இது தொடர்பாக கர்நாடக மாநில அரசுக்கும் வோல்வோ குழுமத்திற்கும் இடையே 1400 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தம் கையெழுத்து ஆகி உள்ளது. இதன் மூலம் பெங்களூரு அருகில் இருக்கக்கூடிய ஓசாகோட்டே பகுதியில் தன்னுடைய உற்பத்தி ஆலையை இந்த நிறுவனம் அமைக்க இருக்கிறது.
முதலமைச்சர் சித்தராமையாவின் அதிகாரப்பூர்வ இல்லமான காவிரியில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது. இந்த நிகழ்வின் போது கர்நாடக மாநில தொழில்துறை அமைச்சர் எம் பி பாட்டில் உடன் இருந்தார். மேலும் தொழில்துறை தலைமை செயலாளர் செல்வகுமார், வோல்வோ இந்தியா குழுமத்தின் மேலாண் இயக்குனர் கமல் பாலி ஆகியோரும் உடன் இருந்தனர்.
இது தொடர்பாக வோல்வோ நிறுவனம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் இந்த புதிய உற்பத்தி ஆலை மூலம் நேரடியாக 2000 வேலைவாய்ப்புகள் கர்நாடகாவில் உருவாகும் என கூறியுள்ளது. ஓசாகோட்டில் அமைக்கப்படும் தங்களுடைய உற்பத்தி ஆலை மூலம் ஆண்டுதோறும் தங்கள் நிறுவனம் 20000 லாரிகள் மற்றும் பேருந்துகளை தயாரிக்கும் திறன் கொண்டதாக மாறும் என்றும் தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் இந்த ஆலையில் தயாரிக்கப்படும் வாகனங்கள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இந்த நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் சித்தராமையா வோல்வோ குழுமம் 25 ஆண்டு காலமாக கர்நாடகாவில் வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது என்றார்.
இந்த புதிய ஆலைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் தன்னுடைய அரசு வழங்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். புதிய உற்பத்தி ஆலை மூலம் கர்நாடகாவில் வேலை வாய்ப்பு உருவாகும் என்றும் மாநிலத்தின் பொருளாதாரம் உயரும் என்றும் கூறினார்.


Click it and Unblock the Notifications