பெங்களூரு: ஊழியர்களின் பணிநேரம் தொடர்பாக நிறுவனங்களின் தலைவர்கள் வெளியிடும் கருத்துகள் பெரும் விவாதத்தை ஏற்படுத்துகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டு இன்போசிஸ் நிறுவனர் நாராயணமூர்த்தி இந்திய இளைஞர்கள் வாரத்திற்கு 70 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் எனக் கூறியிருந்தார்.
அவரது கருத்து நாட்டு மக்கள் மத்தியில் பெரும் விவாதத்திற்கு வித்திட்டது. நாராயண மூர்த்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்களது கருத்துக்களை முன்வைத்தனர்.வாரத்திற்கு 70 மணி நேரம் பணி என்பது சாத்தியமில்லை, இது முதலாளித்துவ மனநிலை என பலதரப்பட்ட கருத்துகள் வெளியாகின.

இந்த நிலையில் பெங்களூருவை சேர்ந்த ஒரு நிறுவனம் நாராயண மூர்த்தியின் பரிந்துரையில் சிறிது மாற்றத்தை ஏற்படுத்தி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதள வாசிகளின் வரவேற்பை பெற்றுள்ளது.
பெங்களூருவை சேர்ந்த மெத்தை மற்றும் வீட்டு உபயோக மரச்சாமான்களுக்கான ஸ்டார்ட்அப் நிறுவனம் வேக்ஃபிட். இதன் நிறுவனரான சைத்தன்யா ராமலிங்கே கவுடா, தன்னுடைய லிங்கிடுஇன் பக்கத்தில் ஒரு வீடியோவுடன் கூடிய பதிவை வெளியிட்டுள்ளார்.
அதில், நாராயணமூர்த்தியின் பரிந்துரையை சற்றே மாற்றி, அனைவரும் வாரத்திற்கு 70 மணி நேரம் நிச்சயம் உறங்க வேண்டும் என தெரிவித்துள்ளார். வேலைக்கு செல்வோர் வாரத்திற்கு 70 மணி நேரம் ஓய்வெடுப்பதில் கவனம் செலுத்த வேண்டும் என கூறியுள்ளார். இது தொடர்பாக நிறுவன ஊழியர்களிடம் பேசுவது போன்ற வீடியோவை அவர் வெளியிட்டிருக்கிறார்.
இந்த வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி உள்ளது. 70 மணி நேர ஓய்வு குறித்து நாங்கள் நீண்ட நாட்களாக ஆலோசனை நடத்தி வருகிறோம், புது நிதி ஆண்டு தொடங்கி இருக்கிறது ஊதிய உயர்வுக்கான பேச்சுகள் தொடங்கியுள்ளன, இந்த சமயத்தில் இதை பற்றி பேசுவதும் முக்கியம் என குறிப்பிட்டுள்ளார்.
இந்தியாவை போன்ற ஒரு வளரும் பொருளாதாரம் கொண்ட நாட்டில் 70 மணி நேரம் ஓய்வு என்பது அவசியம், இது ஊழியர்கள் பணி நேரத்தில் முழு கவனத்துடன் செயல்பட்டு உற்பத்தியை அதிகரிக்க உதவும் என கூறியுள்ளார். முறையான ஓய்வு, வேலையிடத்தில் ஏற்படும் அழுத்தங்களை கையாள உதவும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஓய்வின் அவசியத்தோடு வேக்ஃபிட் பிராண்டுக்கான விளம்பரமாகவும் இந்த வீடியோ இருக்கிறது என சிலர் கருத்து தெரிவித்துள்ளனர். நிறுவனங்கள் ஊழியர்களின் ஓய்வு குறித்து யோசிப்பது அரிதினும் அரிது, இது வரவேற்கத் தக்கது என சிலர் கூறியுள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications