அமெரிக்க பங்குச் சந்தை வியாழக்கிழமை மீண்டும் சரிவை சந்தித்தது. முதலீட்டாளர்கள் ரிஸ்க்-ஆஃப் (risk-off) நிலைக்கு மாறியதால் ஆபத்தில் இருக்கும் தொழில்நுட்ப நிறுவன பங்குகள் மற்றும் பிட்காயின் போன்றவற்றை முதலீட்டாளர்கள் அதிகமாக விற்பனை செய்த காரணத்தால் 3வது நாளாக டெக் பங்குகளும், 2வது நாளாக அமெரிக்க பங்குச்சந்தையும் கடுமையான சரிவை சந்தித்துள்ளது.
அமெரிக்க பங்குச்சந்தை குறியீடுகள்
இன்றைய வர்த்தகத்தில் டவ் ஜோன்ஸ் இன்டஸ்ட்ரியல் அவரேஜ் 647 புள்ளிகள் குறைந்து 1.3 சதவீதம் சரிவை பதிவு செய்தது. எஸ்&பி 500 1.5 சதவீதமும், நாஸ்டாக் காம்போசிட் 1.8 சதவீதமும் இழந்தன. இதனால் நாஸ்டாக் குறியீடு ஏப்ரல் 21, 2025க்குப் பிறகு மிகப்பெரிய மூன்று நாள் சரிவை பதிவு செய்துள்ளது.

ஆல்ஃபாபெட் காலாண்டு முடிவுகள்
Claude அறிமுகம் செய்த 11 பிளகின் பாதிப்பு இன்னும் குறையாத நிலையில், ஆல்ஃபாபெட் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகள் ஒட்டுமொத்த டெக் மற்றும் ஏஐ நிறுவன பங்குகளை மீண்டும் தலைகீழாக புரட்டிப்போட்டு உள்ளது.
கூகுள் தாய் நிறுவனமான ஆல்ஃபாபெட் இக்காலாண்டு அறிக்கையில் 2026ஆம் ஆண்டுக்கு AI செலவு 185 பில்லியன் டாலர் வரை உயரும் என்று தெரிவித்தது. இது டெக் துறை முதலீட்டாளர்களை பயமுறுத்தியது. ஆல்ஃபாபெட் பங்கு 5 சதவீதம் சரிந்தது. ஆனால் ப்ராட்காம் பங்கு 2 சதவீதம் உயர்ந்தது. குவால்காம் பங்கு 7 சதவீதம் சரிந்தது.
பிட்காயின் சரிவு
இதேபோல் கிரிப்டோகரன்சி சந்தையில் பிட்காயின் 70,000 டாலருக்கு கீழே சென்றது. இதனால் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்துள்ள டெக் நிறுவனங்கள், நிதி நிறுவனங்கள் என அனைத்தும் பாதித்தது.
பிட்காயின் இன்றைய வர்த்தகத்தில் 67,000 டாலருக்குக்கு கீழே இறங்கியது. இது முக்கிய ஆதரவு நிலையாக கருதப்படுகிறது.
டெக் குறியீடுகள்
அமெரிக்க பங்குச் சந்தையில் தொழில்நுட்ப பங்குகள் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. அமெரிக்க நேரப்படி பிப்.5 காலை 10.37 மணிக்கு டவ் ஜோன்ஸ் யுஎஸ் டெக்னாலஜி இன்டெக்ஸ் 8,410.16 புள்ளிகளில் முடிந்தது. 394.33 புள்ளிகள் (4.48 சதவீதம்) சரிந்தது. இது கடந்த சில நாட்களில் கண்ட மிகப்பெரிய இழப்புகளில் ஒன்று.
இதை தொடர்ந்து நாஸ்டாக்-100 குறியீடு 24,690.23 புள்ளிகளில் முடிந்தது. 201.01 புள்ளிகள் (0.81 சதவீதம்) குறைந்தது. நாஸ்டாக்-100 டெக்னாலஜி செக்டார் 12,168.92 புள்ளிகளுக்கு சரிந்தது. 669.89 புள்ளிகள் (5.22 சதவீதம்) இழந்தது.
எஸ்&பி 500 இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி செக்டார் 5,359.78 புள்ளிகளுக்கு சரிந்தது. 327 புள்ளிகள் (5.75 சதவீதம்) சரிந்தது. இது டெக் துறையில் ஏற்பட்ட பெரும் அழுத்தத்தை காட்டுகிறது.
வான்கார்ட் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி இன்டெக்ஸ் ஃபண்ட் ETF $716.93க்கு வர்த்தகமாகியது. $4.82 இழப்பு ஏற்பட்டது. இந்த சரிவு AI தொழில்நுட்பம் தொடர்பான புதிய அறிவிப்புகள் மற்றும் சந்தை அச்சம் காரணமாக ஏற்பட்டது என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
தங்கம், வெள்ளி விலை நிலவரம்
இதேபோல் வெள்ளி விலை மீண்டும் அழுத்தத்தை சந்தித்தது. இரண்டு நாள் மீட்சிக்குப் பிறகு 16 சதவீதம் வரை சரிந்தது 72 டாலருக்கு குறைந்தது. இதேபோல் தங்கம் விலை 3 சதவீதம் வரையில் சரிந்து 4,790.01 டாலருக்கு குறைந்தது.
ஏஐ தாக்கம்
சாஃப்ட்வேர் மற்றும் சிப் பங்குகளில் ஏற்பட்ட விற்பனை அழுத்தம் அமெரிக்க முதலீட்டு சந்தையை மொத்தமாக பாதித்ததுள்ளது. AI தொழில்துறையில் ஏற்படும் இடையூறு காரணமாக முதலீட்டாளர்கள் டெக் பங்குகளை விட்டு விலகி வருகின்றனர்.
முதலீட்டாளர்களுக்கு எச்சரிக்கை
அமெரிக்க சந்தை சரிவு இந்திய ஐடி நிறுவனங்களையும் பாதிக்கலாம். AI தொழில்நுட்பம் தொடர்பான புதிய அறிவிப்புகள் சந்தையை பாதிக்கின்றன. பிட்காயின் மற்றும் வெள்ளி போன்ற சொத்துகளில் முதலீடு செய்தவர்கள் கவனமாக இருக்க வேண்டும்.
சந்தை ஏற்ற இறக்கம் தொடரலாம் என்பதால் குறுகிய காலத்தில் இழப்பு ஏற்படலாம். நீண்டகால முதலீட்டாளர்கள் பொறுமையுடன் இருப்பது நல்லது. AI செலவு அதிகரிப்பு சில நிறுவனங்களுக்கு நன்மை தரலாம். ஆனால் மற்றவற்றுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தும்.


Click it and Unblock the Notifications