உலகின் முன்னணி சில்லறை விற்பனை நிறுவனமான வால்மார்ட் உலகில் பல நாடுகளில் வர்த்தகம் செய்து வரும் நிலையில், தனது ஜப்பான் கிளை நிறுவனமான செய்யூ நிறுவனத்தில் சுமார் 85 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளது.
கொரோனா காலத்தில் அமேசான் மற்றும் வால்மார்ட் போட்டிப்போட்டு தங்கள் வர்த்தகத்தை விரிவாக்கம் செய்து வரும் நிலையில், வால்மார்ட் அமெரிக்கா முழுவதும் Brick and Mortar கடைகளை அதிகமாக வைத்திருக்கும் காரணத்தால் வாடிக்கையாளர்கள் வருகையின் எண்ணிக்கை சரிந்துள்ளது.
இந்த இக்கட்டான நிலையில் வால்மார்ட், ஜப்பான் வர்த்தகத்தில் இருந்து கிட்டதட்ட வெளியேறும் முக்கியமான முடிவை வால்மார்ட் நிர்வாகம் எடுத்துள்ளது இந்நிறுவன முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

செய்யூ
வால்மார்ட் நிறுவனத்தின் ஜப்பான் கிளை நிறுவனமான செய்யூ நிறுவனத்தில் சுமார் 85 சதவீத பங்குகளை, உலகின் முன்னணி பங்கு முதலீட்டு நிறுவனமான கேகேஆர் & கோ-க்கு 65 சதவீத பங்குகளும், ஜப்பான் நாட்டின் முன்னணி ஆன்லைன் ரீடைல் நிறுவனமான Rakuten நிறுவனத்திற்கு 20 சதவீத பங்குகளையும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது.
மேலும் செய்யூ நிறுவனத்தில் மீதமுள்ள 15 சதவீத பங்குகளை வால்மார்ட் தொடர்ந்து தக்க வைத்துக்கொண்டு நிர்வாகக் குழுவில் இடம்பெற முடிவு செய்துள்ளது.

1.6 பில்லியன் டாலர்
வால்மார்ட் இந்த 85 சதவீத பங்குகளைச் சுமார் 1.6 பில்லியன் டாலர் மதிப்பிற்கு விற்பனை செய்ய உள்ளது. மேலும் செய்யூ நிறுவனத்தின் தலைவர் Lionel Desclee நிர்வாகம் கைமாறும் வரை இதேபதவியில் வகிப்பார் என்றும், நிர்வாகம் முழுமையாகக் கைமாறிய பின்பு வால்மார்ட் நிறுவனத்தில் பணியாற்ற உள்ளதாகவும் வால்மார்ட் தெரிவித்துள்ளது.
மேலும் செய்யூ நிறுவனத்திற்கு அடுத்த சில நாட்களில் கேகேஆர் & கோ, Rakuten மற்றும் வால்மார்ட் நிறுவனங்கள் அடங்கிய நிர்வாகக் குழு அமைக்கப்பட உள்ளது.

டிஜிட்டல் வர்த்தகம்
செய்யூ நிறுவனத்தைக் கேகேஆர் & கோ, Rakuten கைப்பற்றியதன் மூலம் ஈகாமர்ஸ் மற்றும் டிஜிட்டல் வர்த்தகத்தில் மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் செய்யூ இனி ஜப்பான் மக்களுக்குச் சிறப்பான டிஜிட்டல் வர்த்தகச் சேவையை அளிக்க உள்ளது.

வால்மார்ட்
ஜப்பான் சந்தையை விட்டு வால்மார்ட் முழுமையாக வெளியேறவில்லை என்றாலும், கிட்டதட்ட தனது ஆதிக்கத்தை இழந்துவிட்டது என்று தான் சொல்ல வேண்டும்.
ஜப்பான் சந்தையைப் போலவே இந்தியாவில் வால்மார்ட் பிளிப்கார்ட் நிறுவனத்தைக் கைப்பற்றியதன் மூலம் தனது வர்த்தகத்தை விரிவாக்கம் செய்துள்ளது. இந்தியாவில் இதுநாள் வரையில் வால்மார்ட் உடன் போட்டிப் போட்டு வந்த நிலையில், தற்போது ரிலையன்ஸ் மற்றும் டாடா குழுமம் பெரிய அளவிலான போட்டியை எதிர்கொண்டு வருகிறது.