அமெரிக்கா - சீனா மத்தியிலான பிரச்சனை பல நாடுகளுக்குப் பெரும் வாய்ப்பை தேடிக்கொடுத்துள்ளது என்றால் மிகையில்லை, அதிலும் குறிப்பாக இந்தியாவுக்குப் பல வகையில் நன்மை அளித்துள்ளது. எலக்ட்ரானிக்ஸ், பார்மா, நுகர்வோர் பொருட்கள் எனப் பல துறையில் சீனாவின் வர்த்தகம் இந்தியாவுக்குக் கிடைத்துள்ளது. இதில் வால்மார்ட்-ம் ஒன்று.
வால்மார்ட் இந்தியாவிலிருந்து அமெரிக்காவிற்கு அதிகமான பொருட்களை இறக்குமதி செய்துள்ளதோடு, சீனாவை நம்பியிருப்பதைக் குறைக்க முடிவு செய்துள்ளது. பொதுவாக அமெரிக்காவில் நுகர்வோர் சந்தையில் இருக்கும் பெரும்பாலான பொருட்கள் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டது தான்.

இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், சர்வதேச சந்தையில் சீனாவின் ஆதிக்கத்தைக் குறைக்க வேண்டும் என்ற நோக்குடன் அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் ஆட்சி காலத்தில் இருந்த சீனா மீது பல வர்த்தகத் தடைகளும், கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து ஆப்பிள் முதல் வால்மார்ட் வரையில் தனது சப்ளை செயினில் சீனாவின் பங்கீட்டை தொடர்ந்து குறைத்து வருகிறது. இதன் வாயிலாகத் தான் வால்மார்ட் கடந்த 5 வருடத்தில் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களைக் குறைத்துவிட்டு இந்தியாவில் இருந்து வாங்கும் பொருட்களைப் பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
வால்மார்ட் தனது சப்ளை செயினில் செலவுகளைக் குறைக்கவும், சீனாவை மட்டும் அதிகமாக நம்பியிருப்பதைத் தவிர்க்கும் முயற்சியில் இறக்குமதியை பல நாடுகளுக்குப் பகிரவும் இந்த முடிவை எடுத்துள்ளது என்று ராய்ட்டர்ஸ் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய சில்லறை விற்பனையாளரான வால்மார்ட், இந்த ஆண்டு ஜனவரி - ஆகஸ்ட் மாதங்களில் அதன் மொத்த இறக்குமதியில் சுமார் 25 சதவீதத்தை இந்தியாவிலிருந்து பெற்றுள்ளது. இது 2018 இல் வெறும் 2% இருந்தது எனத் தரவு நிறுவனமான இம்போர்ட் எட்டி தனது ஆய்வுகளை வெளியிட்டு உள்ளது.
இதேபோல் வால்மார்ட் மொத்த இறக்குமதியில் சுமார் 60 சதவீத பொருட்களைச் சீனாவில் இருந்து இறக்குமதி செய்திருந்தாலும், 2018 இதன் அளவு 80 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. எப்படிப் பார்த்தாலும் வால்மார்ட் சீனா பொருட்களை நம்பி தான் இயங்கி வருகிறது, ஆனால் இது அடுத்த 5 வருடத்தில் சீனா 2வது அல்லது 3வது இடத்திற்குத் தள்ளப்பட்டு இந்தியா முதல் இடத்தைப் பிடிக்க வாய்ப்புகள் உள்ளது.
வால்மார்ட்டை பொருத்த வரையில் எந்த நாட்டில் இருந்து மலிவான விலையில் தரமான பொருட்களை வாங்க முடிகிறதோ, பொருட்களை வாங்குவோம் என இந்நிறுவனத்தின் நிர்வாக துணை தலைவர் Andrea Albright தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications