பெங்களூரு: பிரபல அமெரிக்க ரீடெய்ல் நிறுவனமான வால்மார்ட் பெங்களூருவில் தன்னுடைய ஜிசிசி (GCC) மையத்தை அமைக்க இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு வெளிநாட்டு நிறுவனங்களும் தங்களுடைய குளோபல் கெப்பாபிலிட்டி சென்டர்களை (global capability centre) இந்தியாவில் அமைக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
அந்த வகையில் வால்மார்ட் நிறுவனம் தன்னுடைய ஜிசிசி மையத்தை பெங்களூருவில் அமைக்க இருக்கிறது.
இதற்காக பெங்களூருவை சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனமான பிரஸ்டீஜ் உடன் வால்மார்ட் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. பெங்களூருவில் பிரெஸ்டிஜ் நிறுவனம் வால்மார்ட் நிறுவனத்திற்கு தேவையான அலுவலக இடத்தை ஏற்படுத்தி தர இருக்கிறது. ஒரு மில்லியன் சதுர அடிக்கு இந்த அலுவலகம் இருக்கும் என சொல்லப்படுகிறது.

வால்மார்ட் நிறுவனம் இதற்காக பிரஸ்டீஜ் நிறுவனத்திற்கு ஒரு சதுர அடிக்கு 95 ரூபாய் என்ற அளவில் வாடகை செலுத்தும். அதாவது ஆண்டுக்கு 108 கோடி ரூபாயை இந்த அலுவலக இடத்திற்காக வால்மார்ட் நிறுவனம் கட்டணமாக செலுத்த இருக்கிறது.
செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலேயே வால்மார்ட் மற்றும் பிரஸ்டீஜ் நிறுவனங்களுக்கு இடையே இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. இதன்படி மூன்று ஆண்டுகளுக்கு இந்த ஒப்பந்தம் நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வால்மார்ட் நிறுவனம் தங்களுடைய சேவைகளை விரிவுபடுத்துவதற்கு முடிவு செய்திருப்பது தெரிய வந்துள்ளது.
நடப்பு ஆண்டினை பொருத்தவரை பிரஸ்டீஜ் குழுமத்திற்கு லாபகரமான ஆண்டாக அமைந்திருக்கிறது என அதன் தலைவரான ஜகி மர்வாஹா தெரிவித்துள்ளார்.
நடப்பாண்டு இறுதிக்குள் 50 லட்சம் சதுர அடி அளவிலான புதிய ஒப்பந்தங்களை கையெழுத்திடுவதே தங்களின் நோக்கம் எனக் கூறியுள்ளார்.
கடந்த 9 மாதத்தில் மட்டும் பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்ட பிரெஸ்டீஜ் நிறுவனம் 5 மில்லியன் சதுர அடி அளவிலான அலுவலக இடங்களை லீசுக்கு விடுத்திருக்கிறது. இதில் பெங்களூர் மட்டுமல்லாமல் டெல்லி, சென்னை, ஹைதராபாத் ஆகிய நகரங்களும் அடங்கும்.
இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக அலுவலக இடங்களை தேடி வரும் நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. எனவே ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் இடங்களை வாங்கி அலுவலகங்களாக மாற்றி லீசுக்கு விடுக்கின்றன.
2024-ஆம் ஆண்டின் முதல் 9 மாதத்தில் மட்டும் இந்தியாவில் அலுவலக தேவை அதிகம் இருக்கும் துறைகளில் தொழில்நுட்பத்துறை முதலிடத்தில் இருக்கிறது. அடுத்ததாக வங்கி, நிதி சேவைகள் மற்றும் காப்பீடு வேலை அலுவலக இடங்களை தேடி பெற்றுள்ளன. குறிப்பாக பெங்களூரு நகரில் தான் அதிக அளவிலான அலுவலகம் லீசுக்கு எடுக்கப்பட்டுள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications