பெட்ரோல், டீசல் விற்பனையில் இதுவரை இல்லாத ஒரு அதிரடி மாற்றத்தை, இந்தியாவின் முன்னணி எண்ணெய் நிறுவனங்களான IOCL, BPCL மற்றும் HPCL கையில் எடுத்துள்ளன. முதலில் பணம், பிறகுதான் எண்ணெய் என்ற Advance Payment Only என கறாரான விதியை டீலர்களுக்கு அமல்படுத்தியுள்ளன.
மத்திய கிழக்கு பகுதிகளில் கொழுந்துவிட்டு எரியும் போர் சூழலால் கச்சா எண்ணெய் விநியோகம் பெரும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. உலக சந்தையில் நிலவும் இந்த இக்கட்டான சூழலை சமாளிக்கவும், பணப்புழக்கத்தை தக்கவைக்கவும் இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் இந்த ப்ரீபெய்ட் முறையை தீவிரப்படுத்தியுள்ளன.

சர்வதேச அளவில் நிலவி வரும் போர் பதற்றத்தால் இந்திய பெட்ரோல் பங்க் உரிமையாளர்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடி என்ன? இது சாமானிய மக்களை பாதிக்குமா? போர் மேகங்கள் இந்திய எண்ணெய் சந்தையை எப்படி மாற்றப்போகிறது? வாருங்கள் பார்க்கலாம்.
ஹார்மூஸ் ஜலசந்தி வழி மூடப்பட்டுள்ளதால், எண்ணெய் சப்ளையில் பல சிக்கல்கள் நிலவி வருகிறது. மாற்று வழிகளில் கொண்டு வரப்பட்டாலும், அதிலும் பல சவால்கள் நிலவி வருகின்றன. இந்த சூழலில் தான் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் நிதி பரிவர்த்தனையில் ஒரு அதிரடியான அறிவிப்பை கொடுத்துள்ளன.
ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட், பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள், எண்ணெய்க்கான பணத்தை முன்கூட்டியே செலுத்துமாறு கடந்த வாரம் முதலே வலியுறுத்த தொடங்கிவிட்டன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனமும் அதன் டீலர்களுக்கு வழங்கி வந்த 5 நாள் கடன் வசதியை திங்கட்கிழமை முதல் நிறுத்தி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
எரிபொருளை பெறுவதற்கு டீலர்களுக்கு கொடுக்கப்பட்ட குறுகிய கால சலுகைகள், டீலர்களுக்கு சிக்கல்களை உருவாக்கலாம். மேற்கண்ட நிறுவனங்கள் இந்தியாவின் எரிபொருள் விநியோகத்தில் முக்கிய பங்கு வகித்து வரும் நிலையில், இந்த முடிவானது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
ஈரான் - இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக ஹார்மூஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள தடை காரணமாக, சுமார் 40% எண்ணெய் விநியோகமானது பாதிக்கப்பட்டுள்ளது. உலகின் முன்னணி இறக்குமதியாளரான இந்தியாவுக்கு பல சவால்களை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே 2027 ம் நிதியாண்டிற்குள் இந்தியாவின் பெட்ரோலிய பொருட்களுக்கான தேவை 250.8 மில்லியன் டன்களாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
பெட்ரோல் பங்க் சில்லறை விற்பனை நிலையங்கள் மட்டுமின்றி, விவசாயம், போக்குவரத்து மற்றும் தொழில் துறையை சேர்ந்த மொத்தமாக எரிபொருள் வாங்குபவர்களும் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இவர்களில் பலர் கடனை நம்பியே செயல்படுபவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து இந்திய பெட்ரோலிய டீலர்கள் கூட்டமைப்பின் (CIPD) தேசிய தலைவர் உதய லோத் கூறுகையில், மூன்று அரசு எண்ணெய் நிறுவனங்களும் முன்கூட்டியே பணம் செலுத்த கோர தொடங்கி விட்டன. இதற்கு முன்பு இந்த நிறுவனங்கள் சில நாட்களுக்கு கடன் வசதி வழங்கி வந்தன என கூறியுள்ளார்.
பொதுவாக, எண்ணெய் நிறுவனங்கள் டீலர்களுக்கு பல்வேறு கடன் வசதிகளை வழங்குகின்றன. ஒன்று அன்றைய கொள்முதலுக்கு அன்றைய தினமே பணம் செலுத்தி கொள்முதல் செய்வது. இரண்டாவது 3 முதல் 5 நாட்களுக்கு கடனாக எரிபொருள் வழங்கப்பட்டு, 6-வது நாள் பணம் வசூலித்தல். மூன்றாவது வங்கிகள் மூலம் கடன் வசதி செய்து தரப்பட்டு 15 முதல் 30 நாட்களுக்கு சலுகையும் வழங்கப்படுகிறது.
டீலர்களின் கூற்றுப்படி, முதல் இரண்டு வசதிகளும் தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், வங்கி மூலமான எலக்ட்ரானிக் டீலர் பைனான்ஸ் வசதி மட்டும் தற்போது தொடர்ந்து செயல்பாட்டில் உள்ளது. வரலாற்று ரீதியாக, இத்தகைய கடன் வசதிகளே சில்லறை விற்பனையாளர்கள் அதிக அளவில் எரிபொருளை கொள்முதல் செய்யவும், தங்களின் வழக்கமான பெரிய வாடிக்கையாளர்களுக்கு குறைந்த அளவிலான கடன் வழங்கவும் உதவியாக இருந்தன. ஆனால் தற்போது முன்கூட்டியே பணம் செலுத்த வேண்டி உள்ளதால், டீலர்களும் கடன் வழங்க முடியாது.
ரொக்கமாக பணம் கொடுத்து வாங்க வேண்டிய சூழலே உள்ளது. இது குறுகிய காலத்தில் டீசர்களுக்கு சற்று பிரச்சனையாக இருக்கலாம். ஆனால் எண்ணெய் நிறுவனங்கள் நிலவி வரும் சவால்களை சமாளிக்க இது உதவிகரமாகவும் இருக்கும். எப்படி இருப்பினும் பொதுமக்களுக்கு இதனால் பிரச்சனை ஏதும் இருக்காது.


Click it and Unblock the Notifications