அமெரிக்கா: உலகப் புகழ்பெற்ற முதலீட்டாளரான வாரன் பஃபெட்டுக்கு(Warren Buffet) சொந்தமான பெர்க்ஷையர் ஹாத்வே (Berkshire Hathaway) நிறுவனம் , பெரிய நிறுவனங்களில் முதலீடு செய்யாமல் ஏற்கனவே தாங்கள் செய்திருக்கும் முதலீடுகளை குறைத்து வருவது தெரியவந்துள்ளது. இதன்படி பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் தற்போது பங்குகளை விற்பனை செய்துவிட்டு கையிருப்பாக மட்டும் 335.2 பில்லியன் டாலர்களை கையிருப்பாக கொண்டுள்ளது.
வாரன் பஃபெட்டுக்கு சொந்தமான பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் ஆப்பிள் , ஒமாஹா ஆகிய நிறுவனங்களில் தாங்கள் வைத்திருந்த கணிசமான பங்குகளை விற்பனை செய்திருப்பதாக செய்தி வெளியிட்டுள்ளது. பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தை பொறுத்தவரை 2016 ஆம் ஆண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் 908 மில்லியன் பங்குகளை 31.1 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது. ஆனால் 2021 ஆம் ஆண்டிலிருந்து படிப்படியாக ஆப்பிள் நிறுவனத்தில் இருக்கும் தங்களுடைய பங்குகளை விற்பனை செய்து வருகிறது.

அந்த வகையில் நடப்பாண்டில் மட்டும் சுமார் 25 சதவீத பங்குகளை விற்பனை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷையர் ஹாத்வே வைத்திருந்த பங்குகளின் மதிப்பு 84.2 பில்லியன் டாலர்களாக இருந்தது அதுவே மூன்றாவது காலாண்டின் இறுதியில் 69.9 பில்லியன் டாலர்கள் என குறைக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில் மட்டும் இந்த நிறுவனம் 34.6 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை விற்பனை செய்து ரொக்க கையிருப்பாக அந்த பணத்தை சேமித்து வைத்துள்ளது.
தற்போது பெருமளவிலான தொகையை கையில் வைத்திருப்பதாக கூறும் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனம் அவற்றை எந்த சந்தையிலும் முதலீடு செய்யாமல் வைத்திருக்கிறது. இதற்கு காரணம் பல்வேறு பங்குச் சந்தைகளிலும் தற்போது அதிக மதிப்புடன் இருப்பதால் முதலீடு செய்யாமல் வைத்திருப்பதாக தெரிவிக்கிறது. கடந்த மே மாதம் நிறுவனத்தின் ஆண்டு முதலீட்டாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய வாரன் பஃபெட் கையில் இருக்கும் ரொக்கத்தை அவசரப்பட்டு எதிலும் முதலீடு செய்ய தங்களுடைய நிறுவனம் விரும்பவில்லை என கூறினார். சரியான மதிப்பீடு கொண்ட குறைந்த ஆபத்து மற்றும் அதிக லாபம் தரும் நிறுவனங்களின் பங்குகள் கண்டறியப்படும் போது இந்த தொகையை முதலீடு செய்வோம் என அவர் தெரிவித்தார்.
அதே வேளையில் நடப்பு ஆண்டில் பெர்க்ஷையர் ஹாத்வே நிறுவனத்தின் பங்கு மதிப்பு 25 சதவீதம் வரை உயர்ந்திருப்பது தெரிய வந்துள்ளது. இதன் மூலம் இந்த நிறுவனத்தின் சந்தை மூலதன மதிப்பு ஒரு ட்ரில்லியன் டாலர்கள் என்ற மதிப்பை கடந்துள்ளது. முன் எப்போதும் இல்லாத அளவிலான ரொக்கத்தை ஹாத்வே நிறுவனம் கையிருப்பாக வைத்திருப்பதால் எந்த நிறுவனத்தில் இதனை முதலீடு செய்வார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
Written by: Devika


Click it and Unblock the Notifications