உலகின் மிகப்பெரிய பங்கு முதலீட்டாளராக இருக்கும் வாரன் பஃபெட் பெரிய தாமதத்திற்கு பின்பு தான் டெக்னாலஜி துறை முதலீட்டுக்குள் வந்தார், இவருடைய பல முதலீடுகள் நல்ல லாபத்தை கொடுத்தாலும் சில பங்குகள் அதிகளவிலான நஷ்டத்தை எதிர்கொண்டு வருகிறது.
இப்படி இவர் முதலீடு செய்த முக்கியமான நிறுவனங்களில் ஒன்று HP, சமீபத்தில் உலகளவில் கம்ப்யூட்டர், லேப்டாப்-களுக்கான தேவை சீனாவில் பெரிய அளவில் குறைந்துள்ள காரணத்தால் முழு வருடத்திற்கான லாபம் பெரிய அளவில் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக அறிவித்தது.

இதனிடையில் வாரன் பஃபெட்-க்கு சொந்தமான பெர்க்ஷயர் ஹாத்வே HP நிறுவனத்தின் சுமார் 5.5 மில்லியன் பங்குகளை விற்றுள்ளது. இதன் மூலம் பர்சனல் கம்ப்யூட்டர்கள் மற்றும் பிரிட்டர் தயாரிப்பு நிறுவனமான ஹெச்பி நிறுவனத்தில் பெர்க்ஷயர் ஹாத்வே அதன் பங்கு இருப்பை 12.2% இல் இருந்து 11.7% ஆகக் குறைத்துள்ளது.
பெர்க்ஷயர் ஹாத்வே இந்த வாரம் சுமார் 158 மில்லியன் டாலர் மதிப்பிலான ஹெச்பி பங்குகளை விற்றது மட்டும் அல்லாமல் அதன் பங்கு இருப்பின் மதிப்பீட்டை 3.27 பில்லியன் டாலராக குறைத்துள்ளது என்று அமெரிக்க பங்குச்சந்தை கட்டுப்பாட்டு ஆணையமான செக்யூரிட்டிஸ் அண்ட் எக்ஸ்சேஞ்ச் கமிஷனில் புதன்கிழமை அன்று தாக்கல் செய்த அறிக்கையில் கூறியது, ஆனால் விற்பனைக்கான காரணத்தை கூறவில்லை.
ஹெச்பி நிறுவனத்தில் சுமார் 4.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குளை பெர்க்ஷயர் ஹாத்வே வைத்துள்ளதாக ஏப்ரல் 2022ல் அறிவித்தது. அப்போது முதல் நேற்றைய வர்த்தக சரிவுடன் சேர்ந்து சுமார் 19 சதவீதம் சரிந்துள்ளது. பெர்க்ஷயர் ஹாத்வே-யின் தற்போதைய பங்கு விற்பனைக்கு இதுவும் ஒரு காரணமாக உள்ளது.
பெர்க்ஷயர் ஹாத்வே பல நிறுவனங்களில் நேரடியாகவும், மறைமுகமாகவும் முதலீடு செய்துள்ளது. இதோடு BNSF RAILROAD, Geico கார் இன்சூரன்ஸ் போன்ப 12க்கும் அதிகமான வர்த்தகத்தையும் பெர்க்ஷயர் ஹாத்வே வைத்து நிர்வாகம் செய்து வருகிறது.பெர்க்ஷயர் ஹாத்வே நிறுவனத்தின் 353.4 பில்லியன் டாலர் போர்ட்போலியோவில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஆப்பிள் பங்குகள் தான்.


Click it and Unblock the Notifications