சர்வதேச அளவில் போக்குவரத்து வசதிகளை எளிமைப்படுத்தும் கண்டுபிடிப்புகள் அதிகரித்து வருகின்றன. லூப் சாலைகள் அமைத்து அதிவேக போக்குவரத்தை உறுதிப்படுத்தும் கண்டுபிடிப்புகளை அமெரிக்க நிறுவனங்கள் மேற்கொண்டுள்ளன. அதற்கு போட்டியாக இந்தியாவில் பறக்கும் படகுகள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ஐஐடி மெட்ராஸின் உதவியோடு தொடங்கப்பட்டிருக்கும் வாட்டர் ஃபிளை டெக்னாலஜி (Waterfly Technologies) என்ற ஸ்டார்ட் அப் நிறுவனம் E-flying boat எனப்படும் Wing-in-Ground (WIG) craft என்ற ஒரு புதிய பறக்கும் படகினை அறிமுகம் செய்துள்ளது. இந்த படகின் மூலம் கடல் வழியாக ஓர் இடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணிகளை ஏற்றி செல்வதும் சரக்குகளை ஏற்று செல்வதும் எளிமையாக்கப்பட உள்ளது.

வாட்டர் ஃபிளை டெக்னாலஜிஸ் நிறுவனம் இதனை electric seagliders என்றும் அழைக்கிறது . பாரம்பரியமான வான்வழிப் போக்குவரத்து மற்றும் கப்பல் போக்குவரத்துக்கு மாற்றாக இது செயல்படும் என இந்த நிறுவனம் கூறுகிறது. இதன் மூலம் ஓரிடத்தில் இருந்து மற்றோர் இடத்திற்கு வேகமாகவும் குறைந்த கட்டணத்திலும் சென்று விட முடியும்.
வாட்டர் ஃபிளை டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும் துணை நிறுவனருமான ஹரிஷ் ராஜேஷ் ,இந்த பறக்கும் படகின் மூலம் சென்னையில் இருந்து கொல்கத்தாவிற்கு வெறும் 600 ரூபாய் கட்டணத்திலேயே சென்று விட முடியும் எனக் கூறியுள்ளார்.
1600 கிலோமீட்டர் தொலைவு பயணம் 3 மணி நேரத்திலேயே முடிந்து விடும் என்றும் இதுவே ரயிலில் ஏசி வகுப்பில் சென்றால் கூட ஒரு நபருக்கு 1500 ரூபாய் டிக்கெட் செலுத்த வேண்டியிருக்கும் ஆனால் எங்களுடைய இந்த கண்டுபிடிப்பில் 600 ரூபாயிலேயே ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு சென்று விட முடியும் என கூறியுள்ளார்.
20 பேர் அமர்ந்து செல்லும் வகையில் அடுத்த ஆண்டுக்குள் பெரிய பறக்கும் படகினை தங்கள் நிறுவனம் வடிவமைத்து அறிமுகம் செய்யும் என அவர் கூறியுள்ளார். தரையில் இருந்து நான்கு மீட்டர்கள் முதல் 150 மீட்டர்கள் வரை இது பறக்கும் திறன் கொண்டதாக இருக்கிறது. முழுவதும் மின்சாரத்திலேயே இயங்கக் கூடிய வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது. தண்ணீரில் செல்ல தேவையான அனைத்து தொழில்நுட்பங்களையும் கொண்டதாக இருக்கும் என கூறப்படுகிறது.
எனவே தேவையான இடங்களில் பறக்கும், தேவையான இடங்களில் மிதக்கும் என்கின்றனர் இதன் வடிவமடைப்பாளர்கள். அதிகபட்சமாக இது ஒரு மணி நேரத்தில் 500 கிலோமீட்டர் வேகத்தில் செல்லுமாம். இந்த நவீன தொழில்நுட்பம் காரணமாக விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்பு வசதிகள் கூட நமக்கு தேவை இல்லை என அவர்கள் கூறுகின்றனர். தற்போது இந்த நிறுவனம் இதற்கான பேட்டரி திறனை அதிகப்படுத்துவதற்கான ஆய்வுகளில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications