வயநாட்டில் ஏற்பட்ட பேரழிவு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களின் கடன்களை தள்ளுபடி செய்வதாக கேரள வங்கி திங்கள்கிழமை அன்று அறிவித்துள்ளது. இருப்பினும், பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்கள் வாங்கிய கடன்களின் அளவை இன்னும் வங்கி வெளியிடவில்லை. கடந்த ஜூலை 30-ஆம் தேதி அன்று கேரள மாநிலம் வயநாட்டில் கன மழை பெய்தது. இதனால் வயநாட்டில் பல்வேறு பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது.
வயநாடு மாவட்டத்தின் முண்டக்கை, நூல்புழா, மேப்பாடி, சூரல்மலை, அட்டமலை, ஆகிய பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான நிலச்சரிவால் பல வீடுகள் அடியோடு மண்ணில் புதைந்தன. இந்த பேரழிவு நிலச்சரிவின் காரணமாக 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயம் அடைந்துள்ளனர். பல குடும்பங்கள் தங்களை உறவினர்களை இழந்தும்.. சிலர் காணவில்லை என்றும் தேடி வருகின்றனர்.

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கும், அடமானம் வைத்த சொத்துக்கள் அழிந்தவர்களுக்கும் அவர்கள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வங்கியின் இயக்குநர் குழு முடிவு செய்துள்ளதாக கேரள வங்கியின் தலைவர் கோபி கோட்டாமுறிக்கல் தெரிவித்தார்.
வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலர் தங்களுடைய சொத்துக்கள், வீடுகள் அனைத்தையும் இழந்துள்ளனர். இதனால் பலரும் அவர்களுக்கு நிவாரணங்களை வழங்கி வருகின்றனர். திரையுலக பிரபலங்கள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள மக்கள் என அனைத்து தரப்பினரும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தங்களால் முடிந்த உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது வங்கியின் கடன் தள்ளுபடி தொடர்பான அறிவிப்பு வெளியாகி உள்ளது.
ஆனால் எவ்வளவு பேர் கடன் வாங்கி உள்ளனர்.. எவ்வளவு தொகை தள்ளுபடி செய்யப்படவுள்ளது என்ற விவரங்கள் குறித்து வங்கி இன்னும் வெளியிடவில்லை. தற்போது முதற்கட்டமாக சுமார் 9 பேரின் கடன் தள்ளுபடி செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
கேரளா மாநிலத்தில் உள்ள மாவட்ட கூட்டுறவு வங்கிகளின் ஒருங்கிணைப்பான இந்த வங்கி, முதலமைச்சரின் பேரிடர் நிவாரண நிதிக்கு முன்னதாக ரூ.50 லட்சத்தை வழங்கியுள்ளது. இது தவிர, வங்கி ஊழியர்கள் 5 நாள் சம்பளத்தையும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட பின்னர், தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இதுவரை 231 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் பணிகளில் அரசு மற்றும் பல்வேறு தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.


Click it and Unblock the Notifications