சென்னை: அமெரிக்காவை சேர்ந்த நிதி சேவை நிறுவனமான வெல்ஸ் ஃபார்கோ (Wells Fargo ) சென்னையில் செயல்பட்டு வரக்கூடிய தங்களுடைய ஜிசிசி மையத்தை மூட இருப்பதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது. பல்வேறு பன்னாட்டு நிறுவனங்களும் தங்களுடைய சர்வதேச திறன் மையங்களை இந்தியாவில் அமைத்து வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த வெல்ஸ் ஃபார்கோ நிறுவனத்தின் ஜிசிசி மையம் சென்னையில் அமைந்திருந்தது .
இந்த சூழலில் சென்னை மையத்தை மூடுவதாக அறிவித்திருக்கும் வெல்ஸ் ஃபார்கோ நிறுவனம் தங்கள் நிறுவன ஊழியர்கள் 2027 ஆம் நிதியாண்டின் நான்காவது காலாண்டுக்குள் பெங்களூரு அல்லது ஹைதராபாத்தில் உள்ள அலுவலகத்திற்கு இடம்பெயர வேண்டும் என அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக வெல்ஸ் ஃபார்கோ நிறுவனத்தின் இந்தியாவிற்கான தலைமை செயல் அதிகாரியாக இருக்கும் உதய் ஊழியர்களுக்கு மின்னஞ்சல் அனுப்பி இருக்கிறார்.

அந்த மின்னஞ்சலில் சென்னையில் இருக்கக்கூடிய ஊழியர்கள் ஹைதராபாத் அல்லது பெங்களூரில் இருக்கும் அலுவலகத்திற்கு இடம்பெயர தயாராக வேண்டும் எனக் கூறியிருக்கிறார். தங்களுடைய வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்க வேண்டும், அதேபோல சிறந்த தொழில் வளர்ச்சியையும் வேலை வாய்ப்பு வளர்ச்சியையும் கொண்டு வர வேண்டும் என்பதற்காகவே சென்னையில் இருக்கும் அலுவலகத்தை மூடுவதாக இந்த நிறுவனம் தெரிவித்திருக்கிறது.
Global Capability Centre எனப்படும் ஜிசிசி மையங்கள், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களுடைய தகவல் தொழில்நுட்பம் மற்றும் அதனுடன் தொடர்புடைய வணிக செயல்பாடுகளை மேற்கொள்ள அமைக்கப்படும் திறன் மையங்கள் ஆகும். இந்தியாவில் 1700 ஜிசிசி மையங்கள் செயல்படுகின்றன. இதில் சுமார் 20 லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். இந்தியாவின் 2030 ஆம் ஆண்டுக்குள் ஜிடிபியில் ஜிசிசி மையங்கள் 2.3 சதவீத பங்களிப்பை வழங்கும் என கணிக்கப்படுகிறது .
வெல்ஸ் ஃபார்கோ நிறுவனம் இந்தியாவில் சென்னை பெங்களூர் , ஹைதராபாத் ஆகிய மூன்று நகரங்களிலும் தன்னுடைய அலுவலகத்தை அமைத்து இருக்கிறது. மொத்தமாக இதில் பத்தாயிரம் ஊழியர்கள் வேலை செய்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை அலுவலகம் மாற்றப்பட இருப்பதால் வேறு நகரங்களுக்கு இடம் பெயர விரும்பாத ஊழியர்கள் வேறு நிறுவனங்களில் வேலைத் தேட தொடங்கி விட்டனர்.
தங்கள் நிறுவனத்தின் சர்வதேச செயல்பாடுகளில் இந்தியாவும் பிலிப்பைன்ஸும் முக்கிய அங்கம் வகிப்பதாக அந்த நிறுவனம் அறிக்கை வெளியிட்டிருக்கிறது. இந்த பிராந்தியங்களில் நாங்கள் கணிசமான முதலீடுகளை மேற்கொண்டு இருக்கிறோம் இதன் மூலம் திறன்மிகு ஊழியர்கள் எங்களுக்கு கிடைத்திருக்கிறார்கள் மேலும் எங்கள் நிறுவனத்தின் செயல் திறனும் பல மடங்கு மேம்பட்டு இருக்கிறது என தெரிவித்துள்ளது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் படிப்படியாக இந்த மாற்றம் நடைபெறும் என்றும் 2027 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டுக்குள் முழுமையாக சென்னை அலுவலகம் மூடப்பட்டு பணிகள் அனைத்தும் பெங்களூரு அல்லது ஹைதராபாத்திற்கு மாற்றப்பட்டு விடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications