விவசாயத்தை நம்பி நம் நாட்டில் பல விவசாயிகள் இருக்கின்றனர். அவர்களுக்கு தேவைப்படும் உரத்தில் பெரும்பகுதி வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு விவசாயிகளுக்கு தேவையான உரங்களை பெறுவதிலேயே சிக்கல் ஏற்பட்டுள்ளது. அதோடு மத்திய அரசின் உர மானிய பட்ஜெட்டும் அதிகரிக்கப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேற்கு ஆசிய நாடுகளில் நிலவும் போர் பதற்றம் பற்றி அனைவரும் அறிந்ததுதான். இதனால் ஏற்கனவே கேஸ் விலை தாறுமாறாக உயர்ந்து மக்களை வாட்டி வதைத்து கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி பெட்ரோல், டீசல் விலையும் அதிகரித்து சாமானியர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இந்நிலையில் வெளிநாடுகளில் இருந்து இந்தியாவுக்கு வரும் யூரியா மற்றும் இதர உரங்களை இறக்குமதி செய்வதற்கான செலவும் அதிகரித்துள்ளது. ஏற்கனவே அரசு 2027-ஆம் நிதியாண்டிற்கு உர மானியத்திற்காக ரூ.1.71 லட்சம் கோடியை ஒதுக்கியது. தற்போதைய சூழலை வைத்து பார்த்தல் அரசுக்கு இன்னும் ரூ.70,000 கோடி வரை அதிகமான பட்ஜெட் தேவைப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
2026-ஆம் ஆண்டின் மே 18-ஆம் தேதி நடந்த ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய டிபார்ட்மென்ட் ஆஃப் பெர்டிலைசர்ஸ், செக்கரட்டரி அபர்ணா ஷர்மா கூறுகையில்," இந்த ஆண்டு அரசின் உர மானிய செலவுகள் ரூ.70,000 கோடி வரை அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாகத் தெரிவித்தார். இதனால் ஏற்கனவே அரசு ஒதுக்கிய ரூ.1.71 லட்சத்தை சேர்த்து ரூ.2.41 கூடுதலாக தேவைப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே இருக்கும் செலவுகளோடு இந்த கூடுதல் செலவு அரசாங்கத்திற்கு சுமையாக இருக்கலாம். ஆனால் நம் நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளுக்கு நிம்மதி செய்தியாகவே அமைகிறது. அதேபோல 2026-ஆம் ஆண்டில் காரிஃப் பயிர்களை அறுவடை செய்வதற்கு போதுமான உரம் கையிருப்பில் இருப்பதாகவும் சர்மா தெரிவித்தார். இந்த ஆண்டிற்கான மொத்த உரத் தேவை 390 லட்சம் டன் வரையில் இருக்கும். இதில் 50 சதவீதத்திற்கு அதிகமான அளவு, 200.9 டன் ஏற்கனவே கையிருப்பில் இருப்பதாகவும் ஷர்மா கூறியுள்ளார்.
பெரும்பகுதியான உரங்கள் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும் உள்நாட்டிலும் உர உற்பத்தி நடந்து வருகிறது. நாளொன்றுக்கு 80,000 டன்கள் என்ற அளவில் உரங்கள் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் மேற்காசிய போர் தொடங்கியதில் இருந்து இதுவரையில் 86.2 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. ஆனால் கடந்த ஆண்டு இதே காலகட்டத்தில் 93 லட்சம் டன்கள் உற்பத்தி செய்யப்பட்டது. அதோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு சற்று குறைவான உற்பத்தி தான் நடைபெற்றுள்ளது. இதனை ஈடுகட்ட வரும் மாதங்களில் நடவடிக்கை எடுப்போம் என்றும் ஷர்மா குறிப்பிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications