நாட்டில் கொரோனாவின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்து பரவி வரும் நிலையில், இதனால் பற்பல தொழில் துறைகளும் முடங்கியுள்ளன. எனினும் ஐடி துறை மட்டும் புத்துணர்ச்சியோடு, வழக்கத்திற்கு மாறாக வளர்ச்சி கண்டு வருகின்றன..
இதற்கு முக்கிய காரணம் கொரோனாவாகும். ஏனெனில் உலகம் முழுக்க ஐடி துறையின் தேவையானது அதிகரித்துக் கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஐடி துறையில் பல புதிய ஒப்பந்தங்கள் பதிவாகி வருகின்றன.
இதனால் ஐடி நிறுவனங்கள் தங்கள் தேவைக்கு ஏற்ப பணியமர்த்தலையும் அதிகரித்துள்ளது. கடந்த சில காலாண்டுகளாகவே ஐடி நிறுவனங்களின் பணியமர்த்தல் என்பது, கணிசமான அளவு அதிகரித்துள்ளது. அடுத்து வரும் சில காலாண்டுகளுக்கு இந்த நிலை தொடரும் என்றும் நிறுவனங்கள் கூறி வருகின்றன.
தேவை அதிகரிக்கும்
அண்மையில் ஒரு அறிக்கையில், இந்தியாவில் ஐடி துறையில் திறன் வாய்ந்த ஐடி ஊழியர்களுக்கும், தேவையும் கூடிக் கொண்டே போகிறது. இதன் காரணமாக இந்தியாவில் வரும் காலத்தில் ஐடி துறையானது வேலை வாய்ப்பு சந்தையில் முக்கிய பங்கு வகிக்க கூடும் என டிசிஎஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியும், நிர்வாக அதிகாரியுமான ராஜேஷ் கோபி நாதன் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஐடி துறை முக்கிய பங்கு
மேலும் இந்திய வேலை வாய்ப்பு சந்தையில் இந்திய தகவல் தொழில் நுட்ப துறையானது முக்கிய பங்கு வகிக்கும். எதிர்வரும் காலங்களில் ஐடி துறையானது மிக கவர்ச்சிகரமானதாக இருக்கும் என கூறியிருந்தது நினைவுகூறத்தக்கது. உண்மையில் அவர் கூறியது போலத் தான் ஐடி நிறுவனங்கள் பலவும் தங்களது அறிவிப்புகளை வெளியிட்டுள்ளன.
பணியமர்த்தலை அதிகரிக்க திட்டம்
டிசிஎஸ் நிறுவனம் நடப்பு ஆண்டில் 40000 பேரையும், இன்ஃபோசிஸ் 26,000 புதியவர்களையும் பணியமர்த்த திட்டமிட்டுள்ளன. இது மட்டும் அல்ல ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், அசென்சர், டெல் மற்றும் பல ஐடி நிறுவனங்களும் இந்த ஆண்டில் பணியமர்த்தலை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளன. எனினும் இதனை தக்கவைத்துக் கொள்ள வரவிருக்கும் ஆண்டுகளில் போடப்படும் ஒப்பந்தங்கள், மார்ஜின், விசா கொள்கைகள் உள்ளிட்டவற்றை பொறுத்து இருக்கும் என கருதப்படுகிறது.
ஒப்பந்தங்கள் அதிகரிப்பு
கொரோனாவிற்கும் மத்தியில் பல துறைகளில், ஐடி துறையில் பணியமர்த்தல் என்பது, கணிசமான அளவு அதிகரித்துள்ளது. கடந்த சில காலாண்டுகளாக ஐடி நிறுவனங்களில் ஒப்பந்தங்கள் மிகப்பெரிய அளவில் பதிவு செய்யப்பட்டன. இதனால் பணியமர்த்தலும் அதிகரித்தது. இந்த நிலையில் தற்போதும் அந்த நிலை நீடிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஹெச்1பி விசா பயன்பாடு
எனினும் தற்போது அமெரிக்காவில் ஹெச்1பி விசா மூலம் பணியமர்த்தலுக்கு பதிலாக, உள்நாட்டு பணியமர்த்தலை அதிகரிக்க நிறுவனங்கள் உந்தப்படுகின்றன. டொனால்டு டிரம்ப் ஜனாதிபதியாக இருந்த காலத்தில் ஹெச்1பி விசா முடக்கப்பட்டது. தற்போது ஜோ பைடன் தலைமையில் சில தளர்வுகள் அளிக்கப்பட்டிருந்தாலும், அங்கு கொரோனாவின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், மீண்டும் இந்த நிலை வந்தாலும் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இதுவும் ஐடி துறையில் எதிரொலிக்கலாம்.


Click it and Unblock the Notifications