பணம் கையில் இருந்தால் கரையுமே தவிர வளராது என்று நினைப்பவரா நீங்கள்? அப்படியென்றால் இந்தக் கணக்கு உங்கள் சிந்தனையை மாற்றுவது உறுதி. சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு, அதாவது 2024 டிசம்பரில் உங்கள் கையில் ஒரு 1 லட்சம் ரூபாய் இருந்திருந்தால், இன்று அதன் மதிப்பு எவ்வளவு என யோசித்து இருக்கிறீர்களா?
அதை நீங்கள் எங்கே முதலீடு செய்தீர்கள் என்பதுதான் உங்கள் இன்றைய நிலையை தீர்மானித்திருக்கிறது. வழக்கம்போல பேங்க் எஃப்டி (FD) அல்லது சேமிப்புக் கணக்கில் போட்டிருந்தால், இன்று ஒரு சிறிய லாபத்தோடு அது அப்படியேதான் இருந்திருக்கும். ஆனால் உலகம் வியக்கும் வண்ணம் வெள்ளியும், தங்கமும் காட்டிய அசுர வளர்ச்சி, பலரை இன்று லட்சாதிபதிகளாக மாற்றியிருக்கிறது. பங்குச் சந்தை, தங்கம், வெள்ளி என 2025-ம் ஆண்டு முதலீட்டு உலகில் நிகழ்த்திய அந்த மேஜிக் என்ன? வெறும் ஒரு லட்சத்தை வைத்துக்கொண்டு எப்படி லட்சக்கணக்கில் லாபம் பார்த்திருக்க முடியுமா? உங்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தப்போகும் அந்த ரிப்போர்ட் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

2024 டிசம்பரில் செய்த முதலீட்டின் இன்றைய (2025 டிசம்பர்) நிலவரம் இதோ!
கடந்த ஆண்டு இறுதியில் 1 லட்சம் ரூபாயை முதலீடு செய்திருந்தால், ஒரு வருடத்தில் அதன் மதிப்பு:
• வெள்ளியில் ரூ.2,25,000 ஆக உயர்ந்திருக்கும் (125% லாபம்)
• தங்கம் ரூ. 1,75,120 ஆக உயர்ந்திருக்கும் (75% லாபம்)
• காப்பர் ரூ. 1,40,000 ஆக உயர்ந்திருக்கும் (40% லாபம்)
• நிஃப்டி 50 ரூ. 1,10,000 ஆக இருக்கும் (+10% லாபம்)
• வங்கி வைப்பு நிதி ரூ.1,07,000 ஆக இருக்கும் (7% லாபம்)
மேற்கண்ட அம்சங்களில் முதலீட்டாளர்கள் எதிர்பாராத விதமாக வெள்ளியானது 125% லாபத்தை வாரி வழங்கியுள்ளது. அதையடுத்து தங்கம் 75% வருமானத்தை கொடுத்துள்ளது. காப்பர் 40% வருமானம் கொடுத்துள்ளது.
தங்கம், வெள்ளி இவ்வளவு உயரக் காரணம் என்ன?
நடப்பு ஆண்டின் மிகப்பெரிய ஆச்சரியம் வெள்ளி தான். இதற்கு பின்னால் உள்ள முக்கிய காரணங்கள் பின்வருமாறு..
சீனாவின் ஏற்றுமதி கட்டுப்பாடு: உலகின் மிகப்பெரிய வெள்ளி உற்பத்தியாளரான சீனா, ஏற்றுமதிக்கு சில கட்டுப்பாடுகளை ஜனவரி 1, 2026ல் இருந்து விதித்துள்ளது. இதனால் உலகளவில் வெள்ளிக்கு தட்டுப்பாடு ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. ஏற்கனவே நிலவி வரும் பற்றாக்குறைக்கு மத்தியில், இது மேற்கொண்டு விலை அதிகரிப்பை தூண்டலாம்.
தொழில்துறை தேவை: தொழில்துறை உலோகமான வெள்ளி சோலார் பேனல்கள், மின்சார வாகன பேட்டரிகள் மற்றும் எலக்ட்ரானிக்ஸ் துறையில் பயன்பாடு மிக அதிகம். இந்த துறைகளின் அபார வளர்ச்சியால் வெள்ளிக்கான தேவை விண்ணைத் தொட்டது. இது வரும் ஆண்டுகளிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலீடு என்பது வெறும் பாதுகாப்பை மட்டும் நோக்கியது அல்ல, அது சந்தையின் சுழற்சியைப் புரிந்துகொள்வது, தேவையை முன்கூட்டியே கணிப்பது மற்றும் சந்தை எதிர்வினை ஆற்றுவதற்கு முன்பே செயல்படுவது பற்றியது.மேலும் பாரம்பரிய சேமிப்பு முறைகளான எஃப்டி போன்றவை, பணவீக்கத்தை விடக் குறைந்த லாபத்தையே தரக்கூடும். ஆனால், சரியான நேரத்தில் எடுக்கப்படும் வியூகம் சார்ந்த முடிவுகள், உங்கள் முதலீட்டை வேகமாகப் பலமடங்காக பெருக்க உதவும். அதற்கு உதாரணமே இந்த பதிவு எனலாம்.
தங்கத்தின் போக்கு: தங்கமும் தொடர்ந்து பாதுகாப்பான முதலீடாக முதலீட்டாளர்களை ஈர்க்கும் என கூறும் நிபுணர்கள், உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தங்கள் அந்நியச் செலாவணி கையிருப்புக்காக அதிகளவில் தங்கத்தை வாங்கி குவித்து வருகின்றன. இந்த போக்கானது தொடரும் என்று எதிர்பார்க்கின்றனர். மேலும் உலக நாடுகளுக்கு இடையே நிலவும் போர் சூழல் மற்றும் அரசியல் நிச்சயமற்ற தன்மை காரணமாக மக்கள் தங்கம் பக்கம் திரும்புவார்கள். ஏற்கனவே இதன் காரணமாகத் தான் நடப்பு ஆண்டில் வரலாறு காணாத அளவில் விலை ஏற்றம் கண்டுள்ளது. மேற்கொண்டு அமெரிக்க டாலரின் மதிப்பு குறையும் போது, தங்கத்தின் விலை அதிகரிப்பது வழக்கம். 2026-ல் டாலர் வலுவிழக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆக இது தங்கம் மற்றும் வெள்ளிக்கு ஆதரவாக அமையலாம்.
Disclaimer: இந்த செய்தியில் இருக்கும் கருத்துகள் மற்றும் பரிந்துரைகள் தனிப்பட்ட ஆய்வாளர்கள் அல்லது நிறுவனங்களின் சொந்த கருத்துகளாகும், இவை Goodreturns.in அல்லது Greynium Information Technologies Private Limited (இவை இரண்டும் "நாங்கள்" என குறிப்பிடப்படுகிறது) ஆகியவற்றின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை. உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை அல்லது நம்பகத்தன்மைக்கு நாங்கள் எந்தவொரு உத்தரவாதம் அளிக்கவோ, அங்கீகரிக்கவோ அல்லது பொறுப்பேற்கவோ மாட்டோம். மேலும், முதலீட்டு ஆலோசனை அல்லது பங்குகளை வாங்கவோ விற்கவோ எந்த வித தூண்டுதலையும், ஊக்கத்தையும் நாங்கள் வழங்கவில்லை. அனைத்து தகவல்களும் புரிதல் நோக்கங்களுக்காக மட்டுமே வழங்கப்படுகின்றன. எந்தவொரு முதலீட்டு முடிவுகளை எடுப்பதற்கு முன்பும், அங்கீகரிக்கப்பட்ட நிதி ஆலோசகர்களிடமிருந்து தனிப்பட்ட முறையில் சரிபார்க்கப்பட வேண்டும்.


Click it and Unblock the Notifications