டெல்லி: சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்பது பெரும்பாலான இந்தியர்களின் கனவாக இருக்கிறது. எனவே தான் ஒவ்வொரு முறை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யும்போதும் சொந்த வீடு வாங்கும் நபர்களுக்கு ஏதேனும் சலுகைகள் அறிவிக்கப்படுகின்றதா என்ற எதிர்பார்ப்பு எப்போதுமே நீடிக்கிறது.
வரும் 1ஆம் தேதி நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மத்திய நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்ய இருக்கிறார். இதில் சொந்தமாக வீடு வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருப்பவர்களுக்கு ஏற்ற வகையிலான அறிவிப்புகள் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. குறிப்பாக மூன்று முக்கியமான எதிர்பார்ப்புகள் மக்கள் மத்தியில் நிலவுகிறது.

வீட்டு கடன்களுக்கு வரி சலுகை: தற்போது வீட்டுக் கடன் வாங்குபவர்கள் வருமான வரி சட்டத்தின் பிரிவு 24 bஇன் கீழ் பழைய வரி கணக்கு தாக்கல் நடைமுறையில் வீட்டு கடனுக்காக செலுத்தக்கூடிய வட்டி தொகையில் ஓர் ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை வருமான வரி கணக்கு காட்டி வரிவிலக்கு பெற முடியும்.
2014 ஆம் ஆண்டிலிருந்து இது 2 லட்சம் ரூபாய் என்ற அளவிலேயே இருக்கிறது. இதனை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை நிலவி வருகிறது. எனவே மத்திய அரசு வரக்கூடிய பட்ஜெட்டில் வீட்டு கடன்களுக்கான வட்டிக்கு வழங்கப்படும் வரி வரம்பை உயர்த்தினால் மேலும் பலர் வங்கி கடன் வாங்கி வீடு வாங்க முன் வருவார்கள்.
முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு சலுகை: முதன்முறையாக சொந்தமாக வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக சலுகைகளை அறிவிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது. குறிப்பாக முதன்முறையாக வீடு வாங்கும் நபர்களுக்கு கூடுதலான வரி சலுகைகள் வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் புதிய வரி தாக்கல் நடைமுறையில் தற்போது வீட்டு கடன்களுக்கு நாம் செலுத்தக்கூடிய அசல் மற்றும் வட்டி தொகையை காட்டி வரி விலக்கு பெற முடியாது. பழைய வரி நடைமுறையில் நாம் வீட்டு கடனுக்கான தொகைகளை கணக்கு காட்டி வரி விலக்கு பெற முடியும்.
அதனை புதிய வரி நடைமுறையிலும் கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை மக்கள் மத்தியில் வலுவாக இருக்கிறது. பெரும்பாலானவர்கள் புதிய வரி நடைமுறைக்கு மாற வேண்டும் என அரசு எண்ணுவதால் இதனை கொண்டு வந்தால் அது நடக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.
மூலப் பொருட்கள் விலை: வீட்டு கட்டுமான மூலப்பொருட்களின் விலை மற்றும் பல்வேறு நகரங்களிலும் ரியல் எஸ்டேட்டின் விலை மக்கள் எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு உயர்ந்த நிற்கிறது. இதனை குறைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என சாதாரண மக்களும் ஊதியதாரர்களும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.
குறிப்பாக கட்டுமானத் தொழிலில் ஈடுபட்டுள்ள நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட வரி சலுகை, மலிவு விலை வீடுகளை கட்டி விற்பனை செய்யும் நிறுவனங்களுக்கு சலுகைகள் உள்ளிட்டவற்றை வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications