பெங்களூரு: 2024 ஆம் ஆண்டின் இறுதியில் இருக்கிறோம் கூடிய விரைவில் புது ஆண்டு பிறக்க இருக்கிறது. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டில் இந்திய பங்குச்சந்தை எப்படி இருக்கும் என்பது குறித்து மோஜோபிஎம்எஸ் (MoJo PMS) நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான சுனில் தமானியா குட் ரிட்டர்ன்ஸுக்கு பிரத்தியேக பேட்டி அளித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் சில்லறை முதலீட்டாளர்கள் வலுவான முதலீட்டை மேற்கொண்டது இந்திய பங்குச்சந்தையின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தது என தெரிவித்திருக்கும் தமானியா , இந்தியாவில் நீண்ட கால நோக்கில் செல்வத்தை உருவாக்குவதற்கு பங்குச்சந்தை முதலீடுகள் சக்தி வாய்ந்த கருவிகளாக இருக்கின்றன என்ற விழிப்புணர்வு மக்களிடையே அதிகரித்துள்ளது என மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சில தினங்களாக இந்திய பங்குச்சந்தையில் ஏற்பட்டு வரக்கூடிய திருத்தங்கள் பற்றி கவலை கொள்ளக்கூடாது என தெரிவித்திருக்கும் தமானியா இது ஒரு தற்காலிக சரிவு தான் என தெரிவித்துள்ளார். இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை வலுவான நிலையில் இருக்கிறது எனவும் நீண்ட கால நோக்கில் இந்திய பங்குச் சந்தை உலக பங்குச்சந்தைகளைவிட வலுவான வளர்ச்சியை அடையும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கடந்த 10 ஆண்டு காலத்தில் தேசிய பங்கு சந்தை குறியீட்டு எண் நிப்டி ஆண்டுதோறும் 11 சதவீதம் என்ற காம்பவுண்டிங் விகிதத்தில் வளர்ச்சி அடைந்து வருவதையும் அவர் சுட்டிக் காட்டி இருக்கிறார். 2025 ஆம் ஆண்டினை பொருத்தவரை இந்திய பங்குச்சந்தைக்கு சாதகமான சூழலே நிலவுகிறது என்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட துறைகளை சேர்ந்த பங்குகளின் மதிப்பு அதிகரிக்கும் என்ற கணிப்பையும் அவர் வெளியிட்டு இருக்கிறார்.
முதலீட்டாளர்கள் அடிப்படை வலுவாக இருக்கக்கூடிய நிறுவனங்களை தேர்ந்தெடுத்து முதலீடு செய்தால் நல்ல வளர்ச்சியை எட்ட முடியும் எனக் கூறியுள்ளார். மத்திய பட்ஜெட் அறிவிப்பை தொடர்ந்து இந்திய ரிசர்வ் வங்கி வட்டி விகிதங்களை 75 அடிப்படை புள்ளிகள் வரை குறைக்கும் என எதிர்பார்ப்பதாக தமானியா கூறியுள்ளார். தொடர்ச்சியான உணவு பணவீக்கம் ஒரு குறிப்பிடத்தக்க அபாயமாகவே இருக்கிறது என சுட்டிக்காட்டி இருக்கும் தமானியா இந்தியாவில் காரிப் பருவத்தில் நல்ல அறுவடை நடைபெற்று உள்ளது என தெரிவித்துள்ளார். ரபி பருவத்திலும் இதே நிலை தொடரும் என நம்பிக்கை ஏற்பட்டிருப்பதாக கூறியுள்ளார்.
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து வந்தாலும் மற்ற நாடுகளின் நாணயங்களை விட இந்திய ரூபாயின் மதிப்பிழப்பு பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என கூறியுள்ளார். ரிசர்வ் வங்கியின் தலையீடே காரணம் என தெரிவித்துள்ளார். அடுத்த 12 மாதங்களில் ரூபாயின் மதிப்பு 2.5 சதவீதம் வரை வீழ்ச்சி அடையும் என எதிர்பார்ப்பதாக கூறியுள்ளார்.
இந்திய பங்குச் சந்தையை பொறுத்தவரை அடுத்த 10 ஆண்டுகளில் உலக அளவில் சிறந்த செயல் திறன் கொண்ட பங்குச் சந்தைகளில் ஒன்றாக இருக்கும் என குறிப்பிட்டுள்ள அவர் முதலீட்டாளர்கள் குறுகிய காலத்திற்கு ஏற்படும் ஏற்ற இறக்கங்களை கருத்தில் கொள்ளாமல் நீண்ட கால நோக்கில் தங்களுடைய முதலீட்டு முடிவுகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.
2024 ஆம் ஆண்டில் இதுவரை சென்செக்ஸ் 6346 புள்ளிகள் அதாவது 8.8% உயர்ந்திருக்கிறது நிஃப்டி 2000 புள்ளிகள் உயர்ந்து 9.4 % என்ற அளவில் உயர்ந்து சிறப்பாக செயல்பட்டு இருக்கிறது என்பதையே அவர் உதாரணமாக கூறியுள்ளார். ஒவ்வொரு சந்தை திருத்தத்தையும் ஒரு வாய்ப்பாக கருதி பங்குகளை வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவுரை வழங்கியுள்ளார்.


Click it and Unblock the Notifications