இந்தியாவில் ஒவ்வொரு குடிமக்களுக்கும் தனித்துவ அடையாள எண்ணாக ஆதார் எண் வழங்கப்படுகிறது. அதேபோல மற்றொரு தனித்துவமான அடையாள எண் வழங்கக்கூடிய ஒரு நடைமுறை இந்தியாவில் கொண்டுவரப்பட இருக்கிறது. இனி யாராவது உங்களின் முகவரி என்ன என கேட்டால் நீங்கள் இந்த தனித்துவ அடையாள எண்ணை வழங்கினால் போதும்.
DIGIPIN என்றால் என்ன?: ஐஐடி ஐதராபாத் மற்றும் இஸ்ரோவின் நேஷனல் ரிமோட் சென்சிங் சென்டர் ஆகிய இரண்டும் இணைந்து டிஜிபின் (DIGIPIN) என்ற ஒரு புதிய தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. Digital Postal Index Number என்பதன் சுருக்கமே டிஜி பின் என அழைக்கப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட முகவரிக்கு 10 இலக்க குறியீடு அதன் தனித்துவ அடையாள எண்ணாக வழங்கப்பட இருக்கிறது.

பின்கோடும் டிஜிபின்னும் ஒன்றா?: நாம் பொதுவாக நாம் தபால் அனுப்பும்போது பின்கோடு என ஒன்றை குறிப்பிடுவோம். இந்த பின்கோடு என்பது ஒரு குறிப்பிட்ட பகுதிக்கான பின்கோடாக இருக்கும். இந்த குறியீட்டை கொண்டு இது இந்த ஊர் என அடையாளம் காணலாம். ஆனால் டிஜிபின் என்பது ஒரு குறிப்பிட்ட முகவரிக்கான குறியீடாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது. ஓபன் சோர்ஸ் முறையில் கிரிட் அடிப்படையிலான ஒரு டிஜிட்டல் முகவரி அமைப்பாக டிஜி பின் சிஸ்டம் செயல்படும் என தெரிவிக்கப்படுகிறது.
எப்படி டிஜிபின் உருவாக்கப்படுகிறது?: எழுத்துக்கள் மற்றும் எண்கள் கொண்ட பத்து இலக்க அடையாள குறியீடாக டிஜிபின்கள் இருக்கும். ஒரு முகவரியின் லேட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூடுகளை குறிப்பிடும் வகையில் இது உருவாக்கப்படும் என தெரிவிக்கப்படுகிறது. இந்திய புவி அமைப்பை 4M X 4M என்ற அடிப்படையில் கிரிட்களாக பிரித்து குறியீடுகள் வழங்கப்படும். இந்திய தபால் துறை இதனை மேலாண்மை செய்ய இருக்கிறது.
Address-as-a-Service என்ற அடிப்படையில் முகவரி சம்பந்தப்பட்ட தரவுகளை மேலாண்மை செய்வது ,அரசு மற்றும் தனியார் துறை சார்ந்த அமைப்புகளுக்கு இந்த முகவரி சம்பந்தப்பட்ட சேவைகளை வழங்கக்கூடிய அமைப்பாக தபால் துறையின் ஒரு அமைப்பு செயல்பட இருக்கிறது. இது தான் இந்த டிஜிபின்களை மேலாண்மை செய்யும்.
நம் முகவரிக்கான டிஜிபின்னை எப்படி தெரிந்து கொள்வது?: https://dac.indiapost.gov.in/mydigipin/home என்ற இணையதளத்துக்கு சென்று நம் location enable செய்தாலே அந்த லொகேஷனுக்கான டிஜிபின் உருவாகி திரையில் உங்களுக்கு காட்டி விடும். குளோபல் நேவிகேஷன் சேட்டிலைட் சிஸ்டம் வசதி கொண்ட போன் அல்லது ஸ்மார்ட் கருவியை வைத்து தான் நம்முடைய முகவரிக்கான டிஜி பின்னை தெரிந்து கொள்ள முடியும். இதற்காகவே தபால் துறை தனி செயலியை உருவாக்கி வருகிறது.
பின்கோடு மற்றும் டிஜிபின் இடையே என்ன வித்தியாசம்?: பாரம்பரியமாக இந்தியாவில் ஒரு குறிப்பிட்ட பகுதியை பின்கோடு கொண்டே நாம் அடையாளப்படுத்துகிறோம். நம்முடைய முகவரியை குறிப்பிடுவதற்கு பின்கோடுகள் தான் முக்கிய ஒரு எண்ணாக பார்க்கப்படுகிறது. ஆனால் டிஜிபின்கள் அப்படி கிடையாது. இவை நம்முடைய முகவரிக்கான ஒரு தனித்துவ அடையாள கோடாக இருக்கும். ஜியோ லொகேஷன் முறையில் இது செயல்படுகிறது. நவீன தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப முகவரி அடையாளத்தை மாற்றவே இந்த தொழில்நுட்பம் கொண்டு வரப்படுகிறது.
டிஜிபின்களை உருவாக்க தனிநபர் தகவல்கள் எதுவும் பயன்படுத்தப்படாது என தபால் துறை கூறுகிறது, குறிப்பிட்ட இடத்தில் லேட்டிட்யூட் மற்றும் லாங்கிடியூட் மட்டுமே பயன்படுத்தப்படும் என விளக்கம் தருகிறது.


Click it and Unblock the Notifications