சென்னை : வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும்போது பெரும்பாலும் நாம் வரிகளை சேமிப்பதற்கு தான் முயற்சி செய்வோம். அந்த வகையில் இந்தியாவில் இந்து குடும்பங்களுக்கு மட்டுமே வரி விலக்கு தரக்கூடிய ஒரு சட்டப்பிரிவு இருக்கிறது. பெரும்பாலானவர்களுக்கு இது பற்றிய விழிப்புணர்வு இல்லாததால் அதனை பயன்படுத்தாமல் இருக்கின்றனர்.
ஒரு தனிநபருக்கு என்னென்ன சலுகைகள் கிடைக்குமோ அவை அனைத்துமே இந்த HUF எனப்படும் இந்து பிரிக்கப்படாத குடும்பங்கள் என்ற பிரிவிலும் கிடைக்கும். இந்துக்கள் மட்டுமல்ல ஜெயின் மற்றும் சீக்கிய மக்களுமே கூட இந்த பிரிவின் கீழ் பலன்களை பெறலாம்.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இந்தியாவில் கூட்டுக் குடும்பங்கள் தான் அதிகமாக இருந்தன. ஒரே குடும்பத்தில் பல பேர் இருந்ததால் அவர்களின் வருமான ஆதாரங்களும் வித்தியாசமாக இருந்தன. இந்தச் சூழலில் ஆங்கிலேயர்கள் வரி வசூலிப்பதில் சிரமத்தை எதிர்கொண்டனர்.
எனவே அவர்கள் ஒரு முழு குடும்பத்தையுமே ஒரு நபராக கருதி HUF என்ற ஒரு பிரிவை கொண்டு வந்தனர். இந்திய விடுதலைக்கு பிறகும் இந்த பிரிவு நமது சட்டத்தில் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இந்தியாவில் எந்த ஒரு இந்து குடும்பத்தினரும் HUF இன் கீழ் ஒரு கணக்கினை தொடங்கலாம். அதில் பணப்பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம் மற்றும் வருவாய் ஈட்டலாம். ஒரு தனி நபருக்கான வருமானங்கள் எப்படி கணக்கிடப்படுமோ அதே போல HUF கணக்குகளும் கருதப்படும்.
HUF இன் கீழ் பலன்களை பெறுவதற்கு முதலில் தனியாக HUF பெயரில் ஒரு பான் கார்டை வாங்க வேண்டும். இதில் குடும்பத்தில் ஒருவர் தலைவரகாவும் மற்ற அனைவரும் உறுப்பினர்களாகவும் கருதப்படுவர்.பிறப்பு அல்லது திருமணத்திற்கு பிறகு ஒருவர் குடும்பத்தில் சேர்ந்தவுடன் அவர்களும் உறுப்பினராக சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தனிநபராக நீங்கள் வருமான வரி செலுத்தும் அளவுக்கு வருவாய் ஈட்டுகிறீர்கள் என்றால் HUFஇன் கீழ் கணக்கை தொடங்கி அதை சேமிக்கலாம். உதாரணமாக நீங்கள் ஒரு வேலைக்கு செல்கிறீர்கள் அதன் மூலம் உங்களுக்கு ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது.
அதேவேளையில் தனியாக ஒரு தொழிலையும் செய்கிறீர்கள். அதில் உங்களுக்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வருமானம் கிடைக்கிறது. உங்களது நேரடி வருமானம் 15 லட்சம் ரூபாய் என்று கணக்கிடப்பட்டு வரி விதிக்கப்படும். இதுவே நீங்கள் HUF கணக்கை தொடங்கி உங்களது இரண்டாவது வருமானத்தை இதில் கணக்கு காட்டும் போது வரி செலுத்த வேண்டாம்.
நீங்கள் ஆயுள் காப்பீடு, நிலையான வைப்புத்தொகை, பிபிஎஃப்,சிறுசேமிப்பு திட்டங்கள், வீட்டுக் கடன் ஆகியவற்றின் மூலம் செய்யப்படும் முதலீடுகளை உள்ளடக்கிய வருமான வரியின் பிரிவு 80 சியின் கீழ் ரூ.1.5 லட்சம் ரூபாய் வரை வரி விலக்கு பெறலாம்.
பிரிவு 80டி-இன் கீழ் உங்கள் குடும்பத்தின் மருத்துவ காப்பீட்டு பிரீமியத்தில் 25 ஆயிரம் ரூபாய் வரையிலும், உங்களது வயதான பெற்றோரின் காப்பீட்டு பிரீமியத்தில் 50,000 ரூபாய் வரையிலும் வரி விலக்கு பெற்றுக் கொள்ள முடியும்.
HUF இன் வீடு வாங்குவது அந்த கடனுக்கான வட்டிக்கு வரி சலுகை பெறுவது, சொத்து வாங்குவதில் சலுகை பெறுவது என்பன உள்ளிட்ட வரி சலுகைகளையும் அனுபவிக்கலாம்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications