டெல்லி : பிரிட்டனில் சென்று பணிபுரிய வேண்டும் என விரும்பும் இந்தியர்களுக்காகவே பிரத்தியேகமான ஒரு விசா நடைமுறையில் இருக்கிறது. India Young Professionals Scheme visa என்ற பெயரில் திறன் வாய்ந்த இந்திய தொழில் நிபுணர்களுக்கு பிரிட்டன் அரசு இந்த விசாவை வழங்குகிறது. இதனை கொண்டு இரண்டு ஆண்டுகளுக்கு பிரிட்டனில் பணிபுரிய முடியும்.
இந்த விசாவிற்கு விண்ணப்பம் செய்ய விரும்புபவர்கள் இந்திய குடிமக்களாக இருக்க வேண்டும். 18 முதல் 30 வயதிற்கு உட்பட்ட இந்திய குடிமக்கள் மட்டுமே இந்த விசாவின் கீழ் விண்ணப்பம் செய்யலாம். இவர்கள் இந்த விசாவின் கீழ் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகளுக்கு தங்கி வேலை செய்யலாம்.

இந்த விசாவிற்கு விண்ணப்பம் செய்பவர்கள் அதில் குறிப்பிடப்பட்டிருக்கும் அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்தவர்களாக இருக்க வேண்டும். குறிப்பாக அவர்களிடம் 2.68 லட்சம் ரூபாய் வங்கி இருப்பாக வைத்திருக்க வேண்டும்.
குறைந்தது இளநிலை பட்டப்படிப்பினை முடித்திருக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக அவர்களுக்கு 18 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளோ அல்லது நிதி ரீதியாக அவர்களை சார்ந்திருக்கும் நபர்களோ இருக்க கூடாது. அதாவது அவர்கள் உடனிருந்து கவனித்து கொள்ள வேண்டிய கட்டாயத்தில் யாரும் இருக்க கூடாது. இந்த விசாவுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் India Young Professionals Scheme ballotஇல் முதலில் விண்ணப்பிக்க வேண்டும்.
பிரிட்டன் அரசின் விசாவுக்கான இணையதளத்திலேயே இதற்கான தகுதிகளும் விண்ணப்பங்களும் கொடுக்கப்பட்டுள்ளன. தன்னுடைய பெயர், பிறந்த தேதி, பாஸ்போர்ட் விவரங்கள் மற்றும் மின்னஞ்சல், தொலைபேசி எண் உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வேண்டும்.
ஒரு ஆண்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் பிரிட்டன் அரசு இந்த விசாவை வழங்குகிறது. எனவே India Young Professionals Scheme ballotஇல் விண்ணப்பம் செய்துவிட்டால் அதில் தேர்வு செய்து அவர்களுக்கு இரண்டு வாரங்களில் மின்னஞ்சல் அனுப்பி வைக்கப்படும்.
மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவர்கள் விசாவுக்கு விண்ணப்பம் செய்யலாம். ஒரு ஆண்டில் இரண்டு முறை இந்த பேலட்டுகள் அறிவிப்பு வெளியிடப்படுமாம். 2024 ஆம் ஆண்டில் கிட்டத்தட்ட 3 ஆயிரம் பேருக்கு India Young Professionals Scheme திட்டத்தின் கீழ் விசா வழங்கப்பட்டு இருக்கிறதாம். முதலில் பிப்ரவரியும் பின்னர் ஜூலையிலும் இந்த பேலட்டு அறிவிப்பு வெளியாகி விசா வழங்கப்பட்டிருக்கிறது.
மின்னஞ்சல் கிடைக்கப்பெற்றவர்கள் அது வந்த தேதியில் இருந்து 90 நாட்களுக்குள் விசா வேண்டி விண்ணப்பம் செய்ய வேண்டும். சுமார் 2 லட்சம் ரூபாயை விசா கட்டணமாக செலுத்த வேண்டும். விசா கிடைத்ததில் இருந்து 24 மாதங்களுக்குள் இவர்கள் எத்தனை முறை வேண்டுமானாலும் பிரிட்டனுக்கு வந்து செல்லலாம். அங்கே படிக்கலாம், வேலை செய்யலாம், சுய தொழில் புரியலாம். ஆனால் 2 ஆண்டுகளுக்கு மேல் இந்த விசா நீட்டிக்கப்படாது.


Click it and Unblock the Notifications