நீண்ட நாட்களாகவே, ஆர்பிஐ, வங்கிகளின் கடன்களை மறு சீரமைக்க (Loan restructure) அனுமதிக்க வேண்டும் எனச் சொல்லிக் கொண்டு இருந்தார்கள். அந்த கோரிக்கைக்கு தற்போது, ஆர்பிஐ செவி சாய்த்து இருக்கிறது.
கடன்களை செயல்படாத கடன்களாக (NPA) அறிவிக்காமல், ஒரு முறை மறு சீரமைக்க ஆர்பிஐ அனுமதி கொடுத்து இருக்கிறது.
இந்த கடன் மறுசீரமைப்பு, கார்ப்பரேட் கம்பெனிகள் & தனி நபர்கள் என பல தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளலாமாம். இதனால் பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கடன்கள் என்பிஏ ஆகாமல், செயல்படும் கடன்களாகவே தொடரும். சரி இந்த Loan restructuring-ல் என்ன செய்யப் போகிறார்கள்?
எதை எல்லாம் செய்யலாம்
1. கடன் தவணைகளைத் திருப்பிச் செலுத்தும் காலத்தை மீண்டும் மறுவரையறை செய்வது (Rescheduling of payments)
2. இதுவரை சேர்ந்த அல்லது சேரப் போகின்ற வட்டியை வேறு ஒரு கடன் பெசிலிட்டியில் கன்வெர்ட் செய்வது (conversion of any interest accrued or to be accrued into another credit facility)
3. மாரடோரியம் வழங்குவது (granting of moratorium) போன்றவைகளை கடன் மறுசீரமைப்புத் திட்டத்தின் கீழ் இவைகளையும் செய்து கொள்ளலாமாம்.
கூடுதலாக கடன் வழங்கலாம்
இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில், கூடுதலாக கடன் கொடுப்பதையும் ஒரு ஆப்ஷனாகக் கொடுத்து இருக்கிறார்களாம். அதே போல கடனைத் திருப்பிச் செலுத்தும் காலத்தையும் 2 ஆண்டுகள் வரை நீட்டிக்க அனுமதி கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ. இந்த 2 ஆண்டுகள் EMI Moratorium சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ இருக்கலாமாம். குறிப்பாக இதில் பர்சனல் லோன்களும் உண்டாம்.
நிபுணர்கள் கமிட்டி
முன்னாள் ஐசிஐசிஐ வங்கி தலைவர் கே வி காமத் தலைமையில், ஆர்பிஐ ஒரு நிபுணர் குழுவை அமைக்குமாம். இந்த கமிட்டி, கடன் மறுசீரமைப்பை எப்படி செயல்படுத்த வேண்டும் என வழிவகைகளை பரிந்துரைப்பார்களாம். அதோடு, 1,500 கோடி ரூபாய்க்கு மேலான கடன்களை மறுசீரமைக்கும் போது, அந்த கடன் விவரங்களை இதே கமிட்டி தான் சரி பார்ப்பார்களாம்.
கடன் நிறுவனங்கள்
கடன் மறுசீரமைப்பைச் செயல்படுத்த, நிதி நிறுவனங்களின் இயக்குநர் குழு அனுமதித்து இருக்கும் விதத்தில் கொள்கைகளை வடிவமைக்கச் சொல்லி இருக்கிறார்களாம். இந்த கொள்கைகளில், யார் எல்லாம் இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்துக்கு தகுதியானவர்கள், எதை எல்லாம் சரிபார்க்கப் போகிறார்கள் என எல்லாவற்றையும் தெளிவாக வரையறுக்க வேண்டும் எனச் சொல்லி இருக்கிறது ஆர்பிஐ.
2020 மார்ச் 01
எல்லாம் சரி, எந்த தேதியை ஒரு கட் ஆஃப் தேதியாக வைத்து கடன்களைத் தேர்வு செய்யலாம்? என்கிற கேள்விக்கு 01 மார்ச் 2020 என விடை கொடுத்து இருக்கிறது ஆர்பிஐ. 01 மார்ச் அன்று எவ்வளவு கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள் என்பதை அடிப்படையாக வைத்து கடன் மறுசீரமைப்புத் திட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா என தேர்வு செய்யலாமாம்.
பயன்கள் என்ன
வங்கிக் கடன் வாங்கி வியாபாரம் செய்யும் கார்ப்பரேட் கம்பெனிகள் மற்றும் வங்கியிடம் கடன் வாங்கி இருக்கும் தனி நபர்கள், இந்த கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை பயன்படுத்தி, தங்கள் கடன் கணக்குகள் என்பிஏ ஆகாமல் தப்பிக்கலாம். அதோடு ஒழுங்காக கடனையும் திருப்பிச் செலுத்த முடியும். ஒரு முறை வங்கிக் கடனை என்பிஏ செய்துவிட்டால், அதன் பின் கடன் வாங்குவது எளிதான காரியமாக இருக்காது என்பதும் இங்கு குறிப்பிடத்தகக்து. அந்த வகையில் இது மிகவும் பயன் தரும் திட்டம் தான்.


Click it and Unblock the Notifications