உலகில் 1997 லிருந்து 2012 ஆம் ஆண்டுக்குள் பிறந்தவர்களை ஜென் ஸீ (Gen Z) தலைமுறையினர் என அழைக்கிறோம். இந்த தலைமுறையினரின் பண்புகள், அவர்கள் முக்கியத்துவம் கொடுக்கும் விஷயங்கள் என அனைத்துமே பெருமளவில் மாறுபட்டு இருக்கின்றன. தற்போது பணியிடங்களில் எல்லாம் ஜென் ஸீ தலைமுறையினரை வைத்துக்கொண்டு வேலை வாங்க முடியவில்லை என பல்வேறு நிறுவனங்களும் புலம்புகின்றன.
இந்த நிலையில் ஜென் ஸீ தலைமுறையினர் மத்தியில் மைக்ரோ ரிடயர்மென்ட் (Micro retirement) என்ற ஒரு புதிய கருத்தாக்கம் பரவி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது ஜென் ஸீ தலைமுறையினர் குறிப்பிட்ட சில ஆண்டுகளுக்கு தங்களுடைய வேலையிலிருந்து ஓய்வு எடுத்துக் கொள்ள விரும்புகிறார்கள்.

இந்த தலைமுறையினர் ஓய்வு காலத்திற்காக 60 வயது வரை காத்திருக்க வேண்டிய தேவை இல்லை என எண்ணுகிறார்களாம். பல்வேறு இளம் தொழில் நிபுணர்களும் தங்களுடைய இளமை காலத்திலேயே ஒரு குறிப்பிட்ட காலம் வேலையில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு தங்களுடைய வாழ்க்கையை நன்றாக அனுபவித்து விட்டு அல்லது தங்களுக்கென இருக்கும் வாழ்க்கை குறிக்கோளுக்காக சில காலம் உழைத்து விட்டு மீண்டும் பழையபடி பணிக்கு திரும்ப வேண்டும் என எண்ணுகிறார்களாம். இதனைத் தான் அவர்கள் மைக்ரோ ரிடயர்மென்ட் என அழைக்கிறார்கள்.
வெளிநாடுகளில் எல்லாம் குறிப்பிட்ட சில நிறுவனங்கள் sabbaticals என்ற பெயரில் ஓராண்டு காலத்திற்கு ஊழியர்கள் சிலருக்கு ஊதியத்துடன் கூடிய விடுப்பு வழங்குகின்றன. பல்கலைகழகங்கள், ஆய்வு கூடங்களில் பணியாற்றும் நபர்கள் ஆய்வுகளை மேற்கொள்ள இதனை பயன்படுத்துவார்கள். ஆனால் இந்த மைக்ரோ ரிடயர்மென்ட் என்பது அதிலிருந்து சற்று மாறுபட்டது. அதாவது ஊழியர்கள் தானாகவே வேலையில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்வதை தான் இப்படி அழைக்கிறார்கள். இதன் மூலம் அவர்கள் வேலையை விட்டுவிட்டு சிறிது காலம் தங்களுக்கு பிடித்த இடங்களுக்கு பயணம் செய்வது அல்லது பணிச்சுமை , மன அழுத்தம் உள்ளிட்டவை இல்லாமல் சிறிது காலம் வாழ்க்கையை அனுபவித்து விட்டு மீண்டும் பணிக்கு வருவது போன்றவற்றை செய்கிறார்கள்.
தற்போது இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கக்கூடிய பல்வேறு நபர்களும் வேலை மட்டும் இல்லாமல் தங்களுடைய தனிப்பட்ட வாழ்க்கைக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்பதில் மிகவும் தீவிரமாக இருக்கின்றனர். இளமை காலத்திலேயே வாழ்க்கையும் அனுபவிக்க வேண்டும் என்பதுதான் இந்த ஜென் ஸீ ஊழியர்களின் கருத்தாக இருக்கிறதாம். இதற்கு முன்பிருந்த தலைமுறையை போல இவர்கள் இல்லை, இவர்களை சமாளிப்பது சிக்கல் தான் பல நிறுவனங்களும் கூறுகின்றன.
தற்போது சோசியல் மீடியாக்கள் ஆதிக்கம் நிறைந்திருக்கும் இந்த காலத்தில் ஜென் ஸீ தலைமுறையினர் தன்னுடைய வயதை ஒத்த ஒரு நபர் வேலையில் இருந்து சிறிது காலம் ஓய்வு எடுத்துவிட்டு மீண்டும் பணிக்கு வருவதை சமூக வலைத்தளங்களில் பகிரும்போது இவர்கள் எளிதாக அதனால் இன்ஃபுளுயன்ஸ் ஆகி விடுகின்றனர் என பலரும் கூறுகின்றனர்.
தற்போது இருக்கக்கூடிய நிறுவனங்களில் ஜென் ஸீ தலைமுறையினர் அதிக அளவில் வேலை செய்கின்றனர். அடுத்து வரும் சில ஆண்டுகளிலும் இவர்கள்தான் அதிகம் பணியில் இருக்கப் போகின்றனர். எனவே தான் நிறுவனங்கள் இவர்களுக்கு ஏற்ற வகையில் தங்களுடைய கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளன.


Click it and Unblock the Notifications