மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது 2024-25ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் உரையில், குழந்தைகளின் எதிர்கால நிதி பாதுகாப்பை உறுதி செய்ய உதவும் வகையில் முக்கியமான ஒரு திட்டத்தை அறிவித்தார். சாமானிய மக்களின் முக்கிய முதலீட்டுத் திட்டமாகத் தேசிய ஓய்வூதிய திட்டத்தின் (NPS) கீழ் "என்.பி.எஸ். வாத்சல்யா" என்னும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
NPS வாத்சல்யா என்றால் என்ன?
எதிர்காலத்தில் தங்கள் குழந்தைகள் நிதி சுதந்திரத்துடன் இருப்பதை உறுதி செய்ய பெற்றோர்களுக்கு உதவும் வகையில் இந்த புதிய திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் குழந்தைகள் 18 வயது அடையும் வரை பெற்றோர்கள் பணம் செலுத்த முடியும். இந்த காலகட்டத்தில் செலுத்தப்படும் பணம் சாதாரண என்பிஎஸ் திட்டத்தைப் போலவே சேமிக்கப்பட்டு வரும்.

குழந்தை வயது வந்த பிறகு என்ன நடக்கும்?
குழந்தைகள் 18 வயது வந்த பிறகு, இக்கணக்கில் சேமிக்கப்பட்ட தொகை, நிலையான என்.பி.எஸ். கணக்கிற்கு மாற்றப்படும். மேலும், குழந்தைகள் 18 வயதுக்குப் பிறகு, இந்தத் திட்டத்தை என்.பி.எஸ். அல்லாத திட்டமாக மாற்றிக் கொள்ளும் வசதியையும் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். இதனால் Annunity கட்டுப்பாடு இருக்காது எனத் தெரிகிறது.
எதிர்கால நிதி பாதுகாப்பை ஊக்குவிக்கும் அரசின் முயற்சி:
மத்திய அரசு குழந்தைகளின் எதிர்காலத்திற்காக முதலீடு செய்யப் பெற்றோர்களை ஊக்குவிக்கும் வகையில் என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, அரசின் நீண்ட கால நிதி பாதுகாப்பு திட்டங்களை ஊக்குவிக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.
பொதுவாகத் தேசிய ஓய்வூதிய திட்டம் (NPS) என்பது ஓய்வுக்காலத்தைப் பண நெருக்கடி இல்லாமல் நிம்மதியாக வாழ விரும்பும் அனைவருக்கும் மத்திய அரசு அளிக்கும் ஒரு சிறப்பான முதலீட்டுத் திட்டம். மக்கள் தங்கள் தேவைக்கேற்ப அவ்வப்போது தங்கள் என்.பி.எஸ். கணக்கில் பணம் செலுத்தலாம். இந்த திட்டம் மத்திய அரசின் கீழ் இயங்கும் ஓய்வூதிய நிதி ஒழுங்குபடுத்தல் மற்றும் மேம்பாட்டு ஆணையத்தால் (PFRDA) கட்டுப்படுத்தப்படுகிறது.
தேசிய ஓய்வூதிய திட்டத்தில் இரண்டு வகையான கணக்குகள் உள்ளன, டயர்-1 கணக்கு, டயர்-2 கணக்கு. தேசிய ஓய்வூதிய திட்டம் பங்குச் சந்தையுடன் இணைக்கப்பட்ட ஒரு திட்டமாகும். இதன் காரணமாக, NPS கணக்கில் முதலீடு செய்யப்படும் பணம், பங்குகள் மற்றும் கடன் பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது.
பங்குச் சந்தையின் செயல்திறனைப் பொறுத்து தேசிய ஓய்வூதிய திட்டத்தின் லாபம் மாறுபடும். இதனால் ஓய்வூதியத்தின் போது கிடைக்கும் தொகை முன்கூட்டியே தீர்மானிக்கப்படுவதில்லை. இதனால் NPS திட்டத்தில் முதலீடு செய்யப்படும் தொகைக்கு 9-12 சதவீதம் வகையில் சராசரியாக லாபத்தை அளிக்கக் கூடும். இதேபோல் என்.பி.எஸ். வாத்சல்யா திட்டத்தில் முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் முதலீடு செய்யப்பட்டு சுகன்யா சம்ரித்தி திட்டத்தைக் காட்டிலும் அதிக லாபத்தைத் தர கூடியது.


Click it and Unblock the Notifications