சென்னை: நிலம் அல்லது வீடு வாங்க வேண்டும் என்றால் இதற்கு முன்பு அது யார் வசம் இருந்தது, அந்த நிலம் எதற்காக பயன்படுத்தப்பட்டது , நன்செய் நிலமா, புன்செய் நிலமா , விவசாயம் செய்யலாமா, வீடு கட்டலாமா என்பன உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்கள் நமக்கு தோன்றும். இத்தகைய சந்தேகங்களுக்கெல்லாம் விடை தரும் வகையில் தான் அரசு சார்பாக அந்த குறிப்பிட்ட நிலம் தொடர்பான ஆவணங்கள் வழங்கப்படுகின்றன. இவை பட்டா ,சிட்டா, அடங்கல் என அழைக்கப்படுகின்றன.
புதிதாக நிலம் வாங்கும் திட்டத்தில் இருப்பவர்கள் கண்டிப்பாக பட்டா , சிட்டா உள்ளிட்ட ஆவணங்களின் முக்கியத்துவம் குறித்து தெரிந்து வைத்திருப்பது நல்லது. அந்த வகையில் இந்த கட்டுரையில் நாம் பட்டா , சிட்டா அடங்கல் ஆகியவற்றை பற்றி விரிவாக தெரிந்து கொள்ள போகிறோம்.

பட்டா : பட்டா என்பது ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை காட்டும் ஒரு ஆவணம் ஆகும். அதில் அந்த நிலத்தின் உரிமையாளர் பெயர் ,அந்த நிலம் எந்த மாவட்டத்தில் இருக்கிறது ,எந்த வட்டத்தினுள் இருக்கிறது, அந்த ஊரின் பெயர் என்ன ,அந்த பட்டாவின் எண் என்ன ,அந்த நிலத்திற்கான சர்வே எண் மற்றும் உட்பிரிவு எண் ஆகிய விவரங்கள் குறிப்பிடப்பட்டிருக்கும் . அதுமட்டுமின்றி இந்த நிலம் எவ்வளவு பரப்பளவு கொண்டது, இது நன்செய் நிலமா , புன்செய் நிலமா என்பன போன்ற விவரங்களையும் நாம் இந்த ஒரு ஆவணத்தின் மூலமே தெரிந்து கொள்ளலாம். பட்டா என்பது வருவாய் துறையினரால் நிலத்தின் உரிமையாளருக்கு வழங்கப்படும் பதிவு செய்யப்பட்ட சொத்தின் ஆவணம் ஆகும்.
சிட்டா : ஒருவருக்கு ஒரு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்பதை குறிக்கும் அரசாங்க பதிவேடு தான் சிட்டா. நீங்கள் ஒரு நபரிடம் இருந்து நிலத்தை வாங்குகிறீர்கள் என்றால் இந்த ஆவணத்தை கொண்டு உண்மையிலேயே அந்த நபருக்கு அந்த கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறது என்ற விவரத்தை தெரிந்து கொள்ள முடியும். அந்த ஆவணத்தில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், அது என்ன வகையான நிலம் ,அது தற்போது எதற்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது என்ற விவரமும் குறிப்பிடப்பட்டு இருக்கும். அதாவது பட்டா என்பது ஒரு நிலத்திற்கான உரிமை ஆவணம் , சிட்டா என்பது அந்த நிலம் குறித்த விவரங்களின் தொகுப்பு என நாம் புரிந்து கொள்ளலாம் .
அடங்கல்: ஒரு ஊரில் இருக்கும் மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு தான் அடங்கல் என சொல்லப்படுகிறது. இந்த அடங்களில் ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் எது? அந்த நிலம் யாருடைய பெயரில் இருக்கிறது, அதன் பட்டா எண் என்ன, அந்த நிலம் எதற்காக பயன்படுத்தப்படுகிறது என்பன உள்ளிட்ட விவரங்களை நாம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும். நிலம் வாங்குபவர்கள் இந்த ஆவணங்களை சரிபார்த்து கொண்டால் பின்னாளில் எந்த சிக்கலும் ஏற்படாது.
Written by: Devika


Click it and Unblock the Notifications