டெல்லி: மத்திய அரசின் நுகர்வோர் பாதுகாப்புத் துறை புதிதாக 'ரைட் டூ ரிப்பேர்' என்ற ஒரு விஷயத்தை லான்ச் செய்துள்ளது. இது நுகர்வோருக்கு மிகப் பெரியளவில் உதவியாக இருக்கும். அது என்ன ரைட் டூ ரிப்பேர் என்பதை விரிவாகப் பார்க்கலாம்
நாம் புது கார் அல்லது பைக்குகளை வாங்கும் போது, ஓர் ஆண்டிற்கோ அல்லது அதன் பின்னர் குறிப்பிட்ட காலத்திற்கோ இலவச சர்வீஸ் சேவை வழங்கப்படும். அந்த காலகட்டத்தில் குறிப்பிட்ட நாட்களுக்கு ஒரு முறை நாம் வண்டியை இலவசமாக சர்வீஸ் செய்து கொள்ளலாம்.

டூ வீலர் வாகனங்கள்: பெரும்பாலும் இந்த காலத்தில் மட்டுமே நாம் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றிருப்போம். அதன் பின்னர் ரிப்பேர் ஏதாவது ஏற்பட்டால் அங்கீகரிக்கப்பட்ட சேவை மையத்திற்கு எடுத்துச் சென்றிருக்க மாட்டோம்.
ஏனென்றால் அங்குச் சிறியளவில் பழுதானால் கூட சர்வீஸ் கட்டணம் அதிகம் செலுத்த வேண்டி இருக்கும். இருப்பினும், வெளியே மெக்கானிக்கிடம் காட்டினால் வண்டிக்கான வாரண்டி போய்விடும் என்பதால் சிலர் சின்ன சின்ன பிரச்சினைகளுக்குக் கூட வெறு வழியில்லாமல் சர்வீஸ் சென்டருக்கே எடுத்துச் செல்வார்கள். கட்டணம் அதிகம் என்றாலும் வராண்டிக்காகவே அவர்கள் இப்படிச் செய்வார்கள்.

முக்கிய நிறுவனங்கள்: ஆனால், இந்த நிலையில் விரைவில் மாறப் போகிறது. நுகர்வோர் பாதுகாப்புத் துறை 'ரைட் டூ ரிப்பேர்' என்ற ஒரு விஷயத்தைத் தொடங்கியுள்ளது. இதற்காகத் தனியாக ஒரு இணையதளத்தையும் தொடங்கியுள்ளது. இதன் மூலம் அங்கீகரிக்கப்படாத இடங்களுக்குச் சென்று நாம் வாகனத்தை சர்வீஸ் செய்தாலும் கூட வாகனத்தின் உத்தரவாதத்தைப் பாதுகாக்க முடியும். ஏற்கனவே இந்த போர்டல் லான்ச் செய்யப்பட்டுவிட்டது.
ஹீரோ மோட்டோகார்ப் மற்றும் ஹோண்டா மோட்டார்ஸ் நிறுவனங்கள் இதில் ஏற்கனவே வந்துவிட்டன. மேலும், சிறு சிறு பழுதுகள் ஏற்பட்டால் நாமாக எப்படிச் சரி செய்ய வேண்டும் என்பது குறித்த தரவுகளும் இதில் இருக்கவே செய்கிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு மெக்கானிக் விவரங்களும் இதில் இருக்கவே செய்கிறது.

பெரியளவில் உதவும்: இதன் மூலம் நாம் வாங்கிய ஒரு பொருளை எப்படி பழுது பார்க்க வேண்டும் என்ற உரிமையை நமக்கு இது வழங்குகிறது. மேலும், இதுநாள் வரை வாகனத்தின் பாகங்கள் குறித்த தகவல்களை நிறுவனங்கள் வெளியிடாது. ஆனால், இந்த ரைட் டூ ரிப்பேர் கீழ் வாகனத்தின் பாகங்கள் குறித்த முழு தகவல்களையும் மூன்றாம் தரப்பு ஊழியர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பிரச்சினைகளைக் கண்டறியும் கருவிகள் மற்றும் உதிரிப் பாகங்கள் அனைவரும் அணுகக்கூடிய ஒன்றாக மாறும். இதைப் பெரு நிறுவனங்கள் எப்படி அணுகப் போகிறது என்பதே இங்கே பெரிய கேள்வியாக இருக்கும். தற்போது, நுகர்வோர் விவகாரத் துறை முடிந்தவரைப் பல நிறுவனங்களை இதில் கொண்டு வரவே பார்க்கிறது. ரைட் டூ ரிப்பேர் என்பது நிச்சயம் சரியான ஒன்று என்றாலும் கூட ஒரே இரவில் அனைத்தும் மாறிவிடாது.
வாகனங்கள் மட்டுமில்லை: இந்த ரைட் டூ ரிப்பேர் என்பது 4 முக்கிய விஷயங்களைக் கொண்டுள்ளது. எலக்டிரானிக், நுகர்வோர் சாதனங்கள், ஆட்டோமொபைல் உபகரணங்கள் மற்றும் விவசாய உபகரணங்கள் என நான்கு முக்கிய துறைகளை இது உள்ளடக்கியுள்ளது.
அதாவது நமது வாகனங்கள் மட்டுமின்றி, தனிப்பட்ட சாதனங்கள், வீட்டு உபயோகப் பொருட்கள் ஆகியவையும் ரைட் டூ ரிப்பேர் கீழ் பாதுகாக்கப்படும்.. ஆப்பிள், சாம்சங், எல்ஜி, பானாசோனிக், ஓப்போ எனப் பல முக்கிய நிறுவனங்கள் ஏற்கனவே இதில் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications