சென்னை: வேலை வாய்ப்பு, கல்வி, தொழில் உள்ளிட்டவற்றுக்காக நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களை நோக்கி படையெடுத்த வண்ணம் இருக்கின்றனர். இவ்வாறு நகருக்கு வரக்கூடிய தனி நபர்களாக இருந்தாலும் சரி அல்லது குடும்பத்தினருடன் வந்து செட்டிலான நபர்களாகவும் இருந்தாலும் சரி வீட்டு வாடகை, மளிகை செலவு, போக்குவரத்து செலவு மற்றும் பிற செலவுகள் என ஏராளமான செலவினங்களை எதிர்கொள்ள வேண்டி இருக்கிறது.
அந்த வகையில் ஒரு ஆய்வறிக்கை ஒன்று இந்தியாவில் முதல் நிலையை நகரங்களில் மாதந்தோறும் சராசரியாக எவ்வளவு செலவாகிறது என்ற தகவலை வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக India tech & infra என்ற டிவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள தகவலின்படி பெங்களூருவில் சராசரியாக மாதாந்திர செலவினம் 20,000 - 50,000 வரை கணக்கிடப்பட்டுள்ளது. ஐதராபாத்தில் 12,000 - 50,000 ரூபாய் என்றும் , அதிகபட்சமாக மும்பையில் 30,000 - 60,000 ரூபாய் வரை செலவாகும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தலைநகர் டெல்லியை பொறுத்தவரை அதிகபட்சமாக மாதத்திற்கு 50,000 ரூபாய் தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் 15,000 ரூபாயிலிருந்து 50,000 ரூபாய் வரை சராசரியாக செலவு இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. கொல்கத்தாவில் 20,000 - 40,000 ரூபாய் வரையிலும், புனே நகரத்தில் 25, 000 - 45, 000 ரூபாய் வரையிலும் செலவாவதாக கணக்கிடப்பட்டுள்ளது. அகமதாபாத் நகரத்தில் 22,500 இல் இருந்து 42, 000 ரூபாய் வரை சராசரி செலவினம் இருப்பதாக டிவிட்டரில் வெளியிடப்பட்டுள்ள அந்த தகவல் குறிப்பிடுகிறது.
இந்த செலவினமானது நாம் வசிக்கக்கூடிய பகுதியை பொறுத்து மாறுபடும் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். பெருநகரங்களில் ஐடி நிறுவனங்கள் நிறைந்த பகுதிகள் மற்றும் நகரின் பிரதான பகுதிகளில் சூப்பர் மார்க்கெட் ,மால்கள் உள்ளிடவை இருக்கும் பகுதிகள் என்றால் வீட்டு வாடகை அதிகமானதாக இருக்கும். அதற்கு ஏற்ப செலவுகள் மாறுபடும் என்பதால் இது ஒரு சராசரி கணக்கீடு என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.
வீடு ஒரு படுக்கையறை கொண்ட வீடா, இரண்டு படுக்கை அறை கொண்ட வீடா என்பதை பொறுத்து வாடகை மாறுபடும். அதேபோல வீட்டில் இருக்கும் வசதிகளை பொறுத்து வாடகை தொகையானது மாறுபடும். மளிகை பொருட்கள் நம்முடைய வாழ்க்கை முறைகளை பொறுத்து தீர்மானிக்கப்படும். வாரத்திற்கு ஒருமுறை வெளியில் செல்வது ,ஷாப்பிங் செய்வது ,உணவு உட்கொள்வது சினிமா, பொழுதுபோக்குகளுக்கு செல்வது என்பன உள்ளிட்ட சில செலவுகளும் நகர் பகுதிகளில் கட்டாயம் ஏற்படுகிறது. அதை நாம் நமக்கு ஏற்றபடி திட்டமிட்டு கொள்ள வேண்டும்.
நகர் பகுதிகளில் வசிக்க கூடியவர்கள் தங்கள் பணி செய்யும் இடத்திற்கு அருகிலேயே வீட்டை தேர்வு செய்தால் போக்குவரத்து செலவில் அதனை குறைக்கலாம். ஆனால் அது நகரின் மையப் பகுதியாக இருந்தால் வாடகை சற்றே அதிகமாக இருக்கும், ஆனால் போக்குவரத்து செலவு மிச்சமாகும், போக்குவரத்து நெரிசலில் சிக்காமல் அலுவலகத்திற்கு சென்று வரலாம் இதன் மூலம் நீங்கள் உங்களுக்கு அதிக நேரத்தை செலவிட முடியும்.


Click it and Unblock the Notifications