இந்தியாவில் உள்ள குடும்பங்களின் சராசரி வருமானம் எவ்வளவு என்பது குறித்த கணக்கெடுப்பு தகவல் வெளியாகியுள்ள நிலையில் அதில் பல அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்திய குடும்பங்களின் சராசரி வருமானம் மிகவும் குறைவாக இருப்பதாகவும் மிகச் சிலர் மட்டுமே இந்தியாவில் ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பதாகவும் அந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் உள்ள குடும்பங்களின் சராசரி வருமானம் எவ்வளவு? என்பது குறித்து தற்போது பார்ப்போம்.
சராசரி வருமானம்
இந்தியாவில் சுமார் 60 சதவீத குடும்பங்கள் நிதி பாதுகாப்பின்மை தன்மையுடன் இருப்பதாகவும், மக்கள் அன்றாட செலவுக்கே போராடுகின்றனர் என்றும் இந்தியாவின் சராசரி வருமானம் மற்றும் செலவுகள் குறித்த Money9 என்ற நிறுவனத்தின் கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது. இந்திய குடும்பங்களின் சராசரி வருமானம் மாதத்திற்கு ரூ.23,000 மட்டுமே என்ற இந்த கணக்கெடுப்பு தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சேமிப்பு மற்றும் செலவு
Money9 என்ற நிறுவனம் எடுத்த இந்த கணக்கெடுப்பு நிதி பாதுகாப்பை இந்தியாவில் உள்ள மக்கள் எவ்வாறு சமாளிக்கின்றனர் என்பதை வெட்ட வெளிச்சமாக வெளிப்படுத்தியுள்ளது. மேலும் இந்தியாவில் உள்ள மக்கள் எவ்வளவு செலவு செய்கிறார்கள் மற்றும் சேமிக்கிறார்கள் என்பது குறித்த தகவலையும் பதிவு செய்துள்ளது.
ரூ.23,000
இந்திய குடும்பங்களின் வருமானம், சேமிப்பு, முதலீடு மற்றும் செலவினங்கள் குறித்த வரைபடத்தையும் Money9 நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி இந்திய குடும்பத்தில் சுமார் 4.2 பேர் சராசரியாக வாழ்ந்து வருகின்றனர் என்றும் ஒரு இந்திய குடும்பத்தின் சராசரி வருமானம் மாதம் 23,000 ரூபாய் என்றும் கண்டறிந்துள்ளது.
நிதி பாதுகாப்பு
46 சதவீத இந்தியர்கள் சுமார் 15 ஆயிரத்துக்கும் குறைவான வருமானம் கொண்டுள்ளனர் என்றும் அவர்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை வாழ்வதற்கு மிகவும் கஷ்டப்படுகிறார்கள் என்றும் தெரிவித்துள்ளது. நிதி பாதுகாப்பு குறித்து இந்நிறுவனம் எடுத்த கணக்கெடுப்பின்படி இந்திய குடும்பத்தினர் 3 சதவீதத்தினர் மட்டுமே ஆடம்பர வாழ்க்கையை வாழ்ந்து வருகிறார் என்றும் அவர்கள் பெரும்பாலும் அதிக வருமானம் கொண்ட உயர் நடுத்தர மற்றும் பணக்காரர்கள் என்றும் குறிப்பிட்டுள்ளது.
சேமிப்பு
மேலும் 70 சதவீத இந்திய குடும்பங்கள் வங்கியில் வைப்பு தொகை, காப்பீடு, தபால் அலுவலகத்தில் சேமிப்பு மற்றும் தங்கம் போன்றவற்றில் முதலீடு செய்து வருவதாகவும் இந்த கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டு உள்ளதாக குறிப்பிட்டுள்ளது. குறிப்பாக வங்கி மற்றும் தபால் அலுவலக சேமிப்பு அதிகமாக உள்ளது என்றும் அதனை அடுத்து ஆயுள் காப்பீடு மற்றும் தங்கம் வாங்குவதில் இந்தியர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளது.
விழிப்புணர்வு
மேலும் இந்தியாவில் 64 சதவீத சேமிப்புகள் வங்கி கணக்கில் தான் இடம் பெற்றுள்ளது என்றும் 19 சதவீத மக்கள் மட்டுமே காப்பீடு வசதியை பெற்றுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளது. இந்திய மக்கள் தொகையை கணக்கிட்டால் மிகவும் குறைவாகவே சேமிப்பு காணப்படுகிறது என்றும் இந்திய குடும்பங்களில் ஐந்தில் இரண்டு பங்கினர் மட்டுமே இதுவரை சேமிப்பு குறித்த விழிப்புணர்வை கொண்டுள்ளனர் என்றும் இந்த கணக்கெடுப்பு தெரிவித்துள்ளது.
பாதுகாப்பான வாழ்க்கை
ஆனால் அதே நேரத்தில் இந்தியர்கள் மத்தியில் தற்போது சேமிப்பு குறித்த விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது என்றும் வருங்காலத்தில் இந்தியர்கள் சேமிப்பு பழக்கத்தை அதிகப்படுத்தி பாதுகாப்பான வாழ்க்கைக்கு வித்திடுவார்கள் என்றும் இந்த அறிக்கை தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications