மாதம் பிறந்து தேதி ஒன்று ஆகிவிட்டால் போதும் வேலைக்குச் செல்லும் ஊழியர்களுக்குக் கொண்டாட்டம் தாங்காது. அன்றைய நாள் முழுவதும் அவர்களது முகத்தில் மகிழ்ச்சி தாண்டவமாடும். காரணம் அன்றைக்கு சம்பள நாள்.
வீட்டு வாடகை, பெண்டிங் கல்விக் கட்டணம், பர்சனல் கடன்கள், கிரெடிட் கார்டுகளுக்கான மாதாந்திர தவணைகள், குடும்பச்செலவு, பிள்ளைகள் எதிர்பார்த்த பொருட்கள் என உழைக்கும் வர்க்கத்தினருக்கே உள்ள பிரச்னைகளை தீர்க்கும் நாள்.

அப்படி சம்பளத்துக்காக வேலை செய்யும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் ஊதியமாக அடிப்படை சம்பளம், கையில் பெறும் சம்பளம், மொத்த சம்பளம், காஸ்ட் டு தி கம்பெனி என்று நிறுவனங்கள் அளிக்கின்றன. இந்த வகைகளில் உள்ள வித்தியாசங்கள் என்னவென்பதை இனி விரிவாகப் பார்க்கலாம்.
அடிப்படை சம்பளம் (Basic salary): ஒருவரது ஊதியத்தில் முக்கியமானது அடிப்படை சம்பளம். இதை வைத்துதான் சில படிகள், பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, கிராஜுட்டி, சோசியல் செக்யூரிட்டி பலன்கள் போன்றவற்றை நிறுவனங்கள் கணக்கிடும்.
கையில் கொண்டு செல்லும் சம்பளம் (Take home Salary): மொத்தச் சம்பளத்தில் இருந்து பிடித்தங்கள் போக ஊழியரின் கணக்கில் சேர்க்கப்படும் இந்த தொகை தான் கையில் கிடைக்கும் சம்பளமாகும். வருமான வரி, பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, தொழில் வரி மற்றும் இதர பலன்கள் ஆகியவை பிடித்தங்களில் சேரும்.
மொத்த சம்பளம் (Gross Salary): Pay Slip-ல் குறிப்பிடப்படும் இந்த தொகை தான் மொத்த சம்பளமாகும். தேசிய பென்ஷன் திட்டம், நிறுவனத்தின் பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, ஓய்வூதிய நிதி, கிராஜுட்டி போன்ற பலன்கள் இதில் அடங்கும். பல்வேறு செலவினங்களை கணக்கிட்டு மொத்தச் சம்பளத்தை நிறுவனங்கள் நிர்ணயிக்கின்றன.
காஸ்ட் டு தி கம்பெனி (CTC): சிடிசி எனப்படும் இந்தச் சம்பளம் ஊழியரின் செலவினங்களைக் கணக்கிட்டு நிர்வாகம் தரும் தொகையாகும். இந்த சிடிசியில் அடிப்படை சம்பளம், வீட்டு வாடகைப் படி, சிறப்பு படிகள், லீவு டிராவல் அலவன்ஸ், கன்வேயன்ஸ் அலவன்ஸ், பிற பிக்ஸடு காம்பொனன்ட்ஸ் மற்றும் நிறுவனத்தின் பிராவிடண்டு பண்டு பங்களிப்பு, தேசிய பென்ஷன் திட்டம், ஓய்வூதிய நிதி போன்றவை அடங்கும்.
இந்த அடிப்படை சம்பளம், கையில் வரும் சம்பளம், மொத்த சம்பளம் ஆகியவற்றில் சிடிசி தொகை தான் இருப்பதிலேயே அதிகமாகும்.
இப்போது கார்ப்பொரேட், ஐடி நிறுவனங்கள் பெரு நிறுவனங்கள் பொதுவாக சிடிசி முறையில்தான் ஊழியர்களுக்கு சம்பளத்தை நிர்ணயிக்கின்றன.
இதை மத்திய தொழிலாளர் நலத்துறையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
சிடிசியில் லீவு சம்பளம், மருத்துவச் செலவுகள், எல்டிசி, போனஸ், கிராஜுட்டி, பிராவிடண்ட் பண்டு, இன்சென்டிவ்கள், சிறப்பு படிகள், வீட்டு வாடகை, பென்ஷன் திட்டப் பங்களிப்பு, நிறுவனத்தின் பங்களிப்பு என அனைத்துமே ஊழியரின் சம்பளத்தில் இருந்துதான் கழிக்கப்படும்.


Click it and Unblock the Notifications