சென்னை: நமது நாட்டில் ரயில் பயணம் பெரும்பாலும் அனைவராலும் விரும்பப்படும் ஒன்றாகும். பேருந்து பயணத்தை அடுத்து ரயில் பயணமே எளிதில் பயன்படுத்திக்கொள்ளும் வசதியைத் தருகிறது. ரயிலில் வசூலிக்கப்படும் கட்டணங்கள் கூட எல்லாருக்கும் கட்டுப்படியாகும் பட்ஜெட்டில் இருக்கிறது. சரி, என்றாவது ரயில் பெட்டியில் இருக்கும் பச்சை மற்றும் மஞ்சள் கோடுகளைப் பற்றி கவனித்ததுண்டா.. அதற்கு என்ன பொருள் என்று தெரியுமா?
இந்திய ரயில்வே துறையானது 16.04.1853 அன்று தனது சேவையை ஆரம்பித்தது. 1951 ஆம் ஆண்டு இந்திய ரயில்வே தேசியமயமாக்கப்பட்டது. மும்பைக்கும் தானேக்கும் இடையே முதல் ரயிலானது 33 கி. மீ தூரம் வரை இயக்கப்பட்டது. இன்னொரு சிறப்பம்சம் என்னவென்றால், ஆசியாவின் மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க் மற்றும் உலகின் 2 ஆவது பெரிய நெட்வொர்க்காக இந்திய ரயில்வே உள்ளது.

இந்திய ரயில்வே துறையானது ரயில் பயணிகளுக்கென்று, பல்வேறு வசதிகளை செய்து வருகிறது. மேலும் சமீபத்திய தகவலின்படி, ரயிலில் பயணிக்கும் பயணிகளின் வசதிக்காக ரயில்வே துறையானது சூப்பர் ஆப் (Super App) என்ற பெயரில் மொபைல் செயலி ஒன்றினை விரைவில் அறிமுகம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த புதிய செயலியின் மூலமாக ரெஜிஸ்டர் செய்யப்பட்ட ரயில் டிக்கெட், ரத்து செய்யப்படும் பட்சத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் பயணிகள் தாங்கள் செலுத்திய பணத்தைத் திரும்பப் பெறமுடியும் என்று கூறப்படுகிறது.
பொதுவாக சிலர் பேருந்துகளில் பயணிப்பதைக் காட்டிலும் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர். இதற்கான முதன்மை காரணம் ரயில்வே விதிக்கும் கட்டணம் தான். இதனால் அதிக மக்கள் ரயில் பயணத்தை விரும்பினாலும் ரயிலில் உள்ள சில விஷயங்களைப் பற்றி தெரிந்து கொள்ளாமல் இருக்கின்றனர். சிலர் வேக வேகமாக ட்ரெயின் வந்து நின்றதும் அவற்றில் ஏறி அமர வேண்டும் என்ற குறியில் தான் இருப்பார்கள். எனவே இந்த பதிவில் ரயில் பெட்டிகளில் இருக்கும் பச்சை மஞ்சள் வெள்ளை நிறக் கோடுகள் எதற்காக பயன்படுத்தப்படுகின்றன என்பதை பார்ப்போம்.
பயணிகளாகிய நாம் அவற்றை பற்றிய தகவல்களை தெரிந்து வைத்திருப்பது நம் பயணங்களின் போது உதவியாக இருக்கும்.
வெள்ளை நிறக் கோடுகள்: இந்தியாவில் இயங்கிக்கொண்டிருக்கும் விரைவு ரயில் வண்டிகள் மற்றும் அதிவிரைவு ரயில் வண்டிகள் நீல நிறத்தில் இருக்கும். இந்த நீலநிற ரயில் பெட்டிகளில் உள்ள ஜன்னல்களின் மீது வெள்ளை நிற கோடுகள் இருந்தால் அதற்கு முன்பதிவு இல்லாத (Unreserved Coach) பெட்டிகள் என்று அர்த்தம்.
மஞ்சள் நிறக் கோடுகள்: அதேபோல ரயில் வண்டிகளில் உள்ள பெட்டிகளில் மஞ்சள் நிற கோடுகள் இருந்தால் அவை மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல்நலம் சரியில்லாத நபர்களுக்கான சிறப்பு பெட்டி என்று அர்த்தம் பெறும்.
பச்சை மற்றும் சாம்பல் நிறம்: இதைப்போலவே ரயில் வண்டிகளின் பெட்டிகளில் பச்சை மற்றும் சாம்பல் நிறத்திலான கோடுகள் இருந்தால் அது மகளிருக்கான சிறப்பு பெட்டியாகும்.
இத்தகைய தகவல்கள் யாவும் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியவையாகும். ரயில் பயணிகள் மட்டுமின்றி பொதுமக்களும் இதைப்பற்றிய தகவல்களை தெரிந்து கொண்டால் நல்லது தானே.


Click it and Unblock the Notifications