நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு நாட்டின் வளர்ச்சி திட்டங்களுக்கான நிதி திரட்டும் நோக்கில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துகளை விற்பனை செய்யும் திட்டம் தான் தேசிய பணமாக்கல் பைப்லைன் (National Monetisation Pipeline) திட்டம்.
இத்திட்டம் மூலம் அடுத்த 4 வருடத்தில் மத்திய அரசின் எந்தெந்த சொத்துக்கள் விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டு உள்ளது எனப் பட்டியலிடப்படும். இத்திட்டத்தை இன்று மத்திய நிதியமைச்சரான நிர்மலா சீதாராமன் வெளியிட உள்ளார். மேலும் நித்தி அயோக் சிஇஓ அபிதாப் காந்த் மற்றும் பிற உயர் அதிகாரிகள் கலந்துக்கொள்ள உள்ளனர்.
தேசிய பணமாக்கல் பைப்லைன் என்றால் என்ன..?
மத்திய அரசின் திங்க் டேங்க் அமைப்பான நித்தி அயோக் அறிவித்துள்ள படி தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டத்தில் மத்திய அரசின் பிரவுன்பீல்டு இன்பரா சொத்துக்களுக்கான திட்டமும், மத்திய அரசுக்கு அடுத்த 4 வருட காலத்திற்காக அரசு சொத்துக்களைப் பணமாக்கும் திட்டமும் இதில் அடங்கும்.
பட்ஜெட் அறிக்கையில்
இந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பல்வேறு கட்டுமான திட்டங்கள் மற்றும் முக்கியமான அறிவிப்புகளை நிறைவேற்றவும், அதற்கான நிதியை திரட்டவும் அரசு சொத்துகளை விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டத்தை உருவாக்கியுள்ளது.
6 லட்சம் கோடி ரூபாய்
மத்திய அரசு சுமார் 6 லட்சம் கோடி ரூபாய் அளவிலான அரசு சொத்துக்களை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது, இதில் தேசிய நெடுஞ்சாலை மற்றும் பவர் கிரிட் பைப்லைன் சொத்துக்களும் அடக்கம் என மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மைத் துறையின் செயலாளர் துகின் காந்த பாண்டே இந்த மாத துவக்கத்தில் அறிவித்தார்.
அரசு சொத்து விற்பனை
சொத்து விற்பனை அதாவது asset monetisation என்பது அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களில் பெரிய அளவில் பயன்படுத்தாமல் இருக்கும் அல்லது குறைவாகப் பயன்படுத்தும் சொத்துக்களைப் பணமாக்கி அதன் மூலம் அரசுக்கு வருமானத்தை ஈட்டும் வழியை உருவாக்குவது என மத்திய அரசின் முதலீட்டு மற்றும் பொதுச் சொத்து மேலாண்மை துறையின் (DIPAM) இணையத் தளத்தில் விளக்கம் அளிக்கப்பட்டு உள்ளது.
அரசு சொத்துக்கள் முக்கியம்
உலகம் முழுவதும் அனைத்து பொருளாதாரத்திற்கும் அரசு சொத்துக்கள் மிகவும் முக்கியம், ஆனால் அரசின் வளர்ச்சி திட்டங்களுக்குப் போதுமான நிதி ஆதாரங்கள் இல்லாத நிலையில் இத்தகைய முடிவுகளை எடுக்க வேண்டியது கட்டாயமாகியுள்ளது எனவும் DIPAM விளக்கம் கொடுத்துள்ளது.
உள்கட்டுமான திட்டங்கள்
தேசிய பணமாக்கல் பைப்லைன் திட்டத்திற்கு மத்திய அரசு 2021-22 நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலேயே குறிப்பிட்டு இருந்தது. இப்போது இத்திட்டத்தை நாட்டின் உள்கட்டுமானத்தை மேம்படுத்தப் புதிதான மற்றும் மாறுபட்ட நிதி திரட்டும் திட்டமாக அறிவித்தது.
நிதி ஆதாரங்கள்
இத்திட்டத்தின் மூலம் உருவாக்கப்படும் நிதி ஆதாரங்கள் நாடு முழுவதும் மேம்பாலங்கள், நெடுஞ்சாலை திட்டங்கள், சாலைகள் என நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும், பொருளாதாரத்திற்கும் வலிமை சேர்க்கும் திட்டங்களுக்காக முதலீடு செய்யப்படும் எனக் கூறப்படுகிறது.
மோடி தலைமையிலான மத்திய அரசு, மக்கள் வரி பணத்தில் உருவாக்கப்பட்ட அரச கட்டுப்பாட்டில் இருக்கும் சொத்துக்களை விற்பனை செய்து நிதி திரட்டும் திட்டம் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீங்க..?


Click it and Unblock the Notifications