ஜெனிவா: வீட்டு உதவியாளர்களை தவறாக நடத்தியது, ஆள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளை எதிர் கொண்டு இருக்கிறது இந்துஜா குடும்பம்.
வீட்டு உதவியாளர்களை விட அவர்கள் வளர்க்கும் நாய்க்கு அதிக செலவு செய்கின்றனர் என இந்துஜா குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான புகார்கள் வெளிவந்த வண்ணம் இருக்கின்றன. யார் இந்த இந்துஜா குடும்பம்? இவர்கள் சர்ச்சையில் சிக்கியதன் பின்னணி என்ன? என்பது குறித்து நாம் விரிவாக பார்க்கலாம்.

பிரிட்டனில் மிகவும் பணக்காரர்களாக அறியப்படும் குடும்பத்தினர் தான் இந்துஜா குடும்பத்தினர். இவர்கள் இந்தியாவில் பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவிலேயே ஏழாவது பணக்கார குடும்பம், ஆசியாவிலேயே 12வது பணக்கார குடும்பம் என செல்வாக்கு மிக்க குடும்பம் இது.
பரமானந்த் தீப்சந்த் இந்துஜா தற்போது பாகிஸ்தானாக இருக்கக்கூடிய பிரிட்டிஷ் இந்தியாவின் சிந்து மாகாண பகுதியின் சிக்காரப்பூர் நகரை சேர்ந்தவர். அங்கிருந்து அவர் வர்த்தகத்தில் ஈடுபட தொடங்கினார். படிப்படியாக மெர்ச்சண்ட் பேங்கிங் தொழிலில் இறங்கிய அவர் 1914 ஆம் ஆண்டு மும்பைக்கு இடம்பெயர்ந்தார்.
அங்கிருந்து தன்னுடைய தொழில்களை விரிவுபடுத்தினார். இவருக்கு நான்கு மகன்கள். 1979 ஆம் ஆண்டு இவர்களது குடும்பம் மொத்தமாக லண்டனுக்கு குடிபெயர்ந்தது. மகன்கள் நால்வருமே பிரிட்டன் குடிமகன்களாகவே இருக்கின்றனர்.
1935 ஆம் ஆண்டு மூத்த மகன் ஸ்ரீசந்த் இந்துஜா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவர் தான் இந்தஸ் இந்த் வங்கியை உருவாக்கியவர். அசோக் லேலண்ட் , இந்தஸ் இந்த் வங்கி என இந்தியாவில் இந்துஜா குடும்பம் ஆட்டோமொபைல், வங்கி, ஐடி ,சுகாதாரம், பொழுதுபோக்கு ,ரியல் எஸ்டேட் என பல துறைகளில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனங்களில் இலட்சக்கணக்கானவர்கள் பணி செய்து வருகின்றனர்.
ஸ்ரீசந்த் இந்துஜா 2023இல் உயிரிழந்ததை அடுத்து அவரது சகோதரர் கோபிசந்த் இந்துஜா குழுமத்தின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். இவரின் இளைய சகோதரர் பிரகாஷ் இந்துஜா வீட்டில் தான் தற்போது இந்த சர்ச்சை வெடித்துள்ளது.
பிரகாஷ் மற்றும் மனைவி கமல், மகன் அஜய், மருமகள் அமிர்தா ஆகியோர் சுவிட்சர்லாந்தில் வசித்து வருகின்றனர். அங்கே வீட்டு பணியாளர்களை துன்புறுத்தியதாகவும், அவர்களை தவறாக நடத்தியதாகவும் மனித கடத்தலில் ஈடுபட்டதாகவும் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் இவர்களுக்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறக்கூடும் என தகவல்கள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்தில் உள்ள இந்துஜா மாளிகையில் பணியாற்றும் இந்திய பணியாளர்களுக்கு நாள் ஒன்றுக்கு 600 ரூபாய் தான் ஊதியம். ஆனால் ஒரு நாளைக்கு 15 முதல் 18 மணி நேரம் வரை வேலை நேரம். இதேவேளையில் அவர்களது வளர்ப்பு நாய்க்கு ஒரு நாளைக்கு 2,000 ரூபாய் செலவு செய்கிறார்களாம்.
பணியாளர்களின் பாஸ்போர்ட்டை ஹிந்துஜா குடும்பத்தினரை வாங்கி வைத்திருக்கின்றனர் என குற்றம்சாட்டப்பட்டுள்ளது. ஆனால் இந்துஜா குடும்பத்தினர் இந்த குற்றச்சாட்டை மறுத்துள்ளனர்.
Story written by: Devika


Click it and Unblock the Notifications