தமிழக அரசியல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், வேட்புமனு தாக்கலில் அனைவரின் பார்வையும் கோபாலபுரம் குடும்பத்தின் மீது தான் திரும்பியுள்ளது. குறிப்பாக, தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சொத்து கணக்குகள் சமூக வலைதளங்களில் விவாதத்தை கிளப்பியுள்ளது.
கடந்த 2021 தேர்தலை விட, இந்த 5 ஆண்டுகளில் உதயநிதியின் சொத்து மதிப்பு கணிசமாக குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவரது மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்து மதிப்பு பல மடங்கு எகிறியுள்ளது தான் ஹாட் டாபிக்.

ரெட் ஜெயண்ட் நிறுவனத்தில் இருந்து வெளியேறியது முதல், புதிய முதலீடுகள் வரை இந்த ஏற்ற இறக்கங்களுக்கு பின்னால் இருக்கும் மர்மம் என்ன? கணவரின் கணக்கில் குறைந்து, மனைவியின் கணக்கில் கூடியிருக்கும் இந்த கோடிகளின் பின்னணி என்ன? விரிவாக பார்ப்போமா?
தமிழக சட்டமன்ற தேர்தல் களமானது சூடுபிடிக்கத் தொடங்கி உள்ள நிலையில், ஆங்காங்கே பிரச்சாரம் அனல் பறக்கிறது. இந்த சூழலில் திமுக இளைஞரணி செயலாளரும், தமிழக அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் இரண்டாவது முறையாக போட்டியிட வியாழக்கிழமை அன்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். 48 வயதான உதயநிதி ஸ்டாலின், தனது தேர்தல் பிரமாண பத்திரத்தில் குடும்பத்தின் மொத்த சொத்து மதிப்பு 33 கோடி ரூபாய்க்கும் மேல் என்று குறிப்பிட்டுள்ளார்.
அதில் தன்னுடைய அசையும் சொத்துக்கள் மதிப்பு 12.92 கோடி ரூபாயாகவும், அசையா சொத்துக்கள் 7.72 கோடி ரூபாய் என்றும், ஆக மொத்த மதிப்பு 20.64 கோடி ரூபாய் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த சொத்து மதிப்பானது கடந்த 2021 சட்டமன்ற தேர்தலின் போது அவர் தாக்கல் செய்த 27 கோடி ரூபாய் சொத்து மதிப்பை விட, தற்போது அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே சமயம் உதயநிதியின் மனைவி கிருத்திகா உதயநிதியின் சொத்து மதிப்பு பல மடங்கு உயர்ந்துள்ளது. அவருடைய அசையும் சொத்துக்கள் மதிப்பு 13.25 கோடி ரூபாயாகவும். அசையா சொத்துக்கள் எதுவும் இல்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இது கடந்த 2021ல் அவர் அறிவித்த 1.15 கோடி ரூபாயை விட பல மடங்கு அதிகரித்துள்ளது.
வாகனங்கள் மற்றும் வருமானம்!
உதயநிதி ஸ்டாலின் தனது அசையும் சொத்துக்களில், 2023ல் 1 கோடி ரூபாய்க்கு வாங்கிய லேண்ட் ரோவர் டிஃபென்டர் (Land Rover Defender) கார் மற்றும் 23 லட்சம் ரூபாய் மதிப்பிலான டொயோட்டா இன்னோவா காரை குறிப்பிட்டுள்ளார். அவருடைய வருமானத்தை பார்க்கும்போது கடந்த 2024-2025 ம் ஆண்டில் உதயநிதி 10,40,620 ரூபாய் ஈட்டியுள்ளார். ஆனால் அவரது மனைவி கிருத்திகாவின் ஆண்டு வருமானம் 2,92,54,570 ரூபாயாக உள்ளது.
அவரது வருமான ஆதாரங்களாக எம்.எல்.ஏ சம்பளம், சினிமா துறை ஊதியம், டெபாசிட் வட்டி, வாடகை மற்றும் டிவிடெண்ட் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
2021ம் ஆண்டு பிரமாண பத்திரத்தில், ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனத்தில் 7.3 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை உதயநிதி வைத்திருந்தார். ஆனால் தற்போதைய பிரமாண பத்திரத்தில் அந்த முதலீடு இடம்பெறவில்லை. மாறாக கிருத்திகா உதயநிதி அந்த நிறுவனத்தில் 2.63 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வைத்திருப்பதாக தி நியூஸ் மினிட் செய்தியானது குறிப்பிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications