சென்னையில் தற்போது மீனம்பாக்கத்தில் சர்வதேச விமான நிலையம் செயல்பட்டு வருகிறது. சென்னை நகர விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதி இறக்குமதிக்கு ஏற்ப இரண்டாவதாக ஒரு சர்வதேச விமான நிலையம் கட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கோரிக்கையாக இருக்கிறது. இதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் அருகே சென்னையில் இரண்டாவது விமான நிலையம் அமைக்கப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
பரந்தூரில் விமான நிலையத்தை அமைப்பதற்கு அந்தப் பகுதியை சேர்ந்த சில கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தொடர்ச்சியாக போராட்டமும் நடத்தினர். அப்போது தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் பரந்தூருக்கு சென்று விமான நிலைய திட்டத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்களை சந்தித்து ஆதரவு தெரிவித்து இருந்தார். இந்த சூழலில் விஜய் ஆட்சியில் அமர இருப்பதால் பரந்தூர் விமான நிலைய திட்டம் என்ன ஆகுமோ என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

பரந்தூர் விமான நிலைய திட்டம் தொடர்ந்து செயல்படுத்தப்படுமா , கையகப்படுத்தப்பட்ட நிலங்கள் மீண்டும் விவசாயிகளிடமே ஒப்படைக்கப்படுமா என்பது விவாத பொருளாக மாறி இருக்கிறது. சென்னையில் தற்போது செயல்பாட்டில் இருக்கக்கூடிய மீனம்பாக்கம் விமான நிலையம் கூடிய விரைவில் அதன் பயணிகள் மற்றும் சரக்குகள் கையாளும் திறனை எட்டிவிடும் என்பதால் மற்ற மெட்ரோ நகரங்களுடன் ஒப்பிடுகையில் சென்னைக்கு உடனடியாக இரண்டாவதாக ஒரு விமான நிலையம் தேவை.
இது ஒட்டுமொத்தமாக சென்னை மட்டுமில்லாமல் மாநிலத்தின் வளர்ச்சிக்கு அவசியம் என்று கூறி தான் திமுக அரசு பரந்தூர் விமான நிலைய திட்டத்தையே கையில் எடுத்தது. இதற்காக 5320 ஏக்கர் பரப்பளவில் நிலம் தேர்ந்தெடுக்கப்பட்டது. திட்டத்திற்கு மத்திய அரசின் ஒப்புதல் பெறப்பட்டு இதுவரை சுமார் 1300 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டு இருக்கிறது. தேர்தல் காரணமாக தற்போதைக்கு அந்த பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
விஜயை பொறுத்தவரை தன்னுடைய கள அரசியலையே பரந்தூரில் இருந்து தான் தொடங்கினார். விமான நிலையம் வரக்கூடாது என நான் கூறவில்லை அதிகமான மக்கள் வாழக்கூடிய இடத்தில் வரக்கூடாது என்று தான் கூறுகிறேன் என அவர் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தான் பரந்தூர் விமான நிலைய திட்டம் என்ன ஆகும் என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
பரந்தூர் விமான நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு அந்த பகுதியில் மெட்ரோ இணைப்பு போன்ற பல்வேறு உள்கட்டமைப்பு பணிகள் நடந்து வருகின்றன. நிலம் கையகப்படுத்திய உடன் ஒப்பந்தம் விட்டு பணிகளை தொடங்க வேண்டிய நிலை இருக்கும்போது தான் முக்கியமான ஆட்சி மாற்றம் என்பது அரங்கேறி இருக்கிறது. எனவே விஜய் இந்த விவகாரத்தில் என்ன முடிவு எடுக்கப் போகிறார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications

