உலகளவில் கோடிக்கணக்கான மக்கள் பயன்படுத்தும் பிரபலமான ஒரு தகவல் பரிமாற்ற செயலி வாட்ஸ் அப். இன்றையக்கு தனிப்பட தகவல் பரிமாற்றம் தொடங்கி பிஸ்னஸ் ரீதியிலான தகவல் பரிமாற்றம் வரை வாட்ஸ் அப் தான் முக்கியமான ஊடகமாக இருக்கிறது. ஆனால் திடீரென உங்களின் வாட்ஸ் அப் கணக்கு முடக்கப்பட்டால் என்ன ஆகும்? அது தான் தற்போது நடந்துள்ளது.
இந்தியாவில் உள்ள பல கணக்குகள் உட்பட உலகளவில் ஏராளமான வாட்ஸ் அப் கணக்குகளை எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென மெடா நிறுவனம் முடக்கியுள்ளது. உங்கள் வாட்ஸ் அப் கணக்கு லாக் செய்யப்பட்டுள்ளது, 24 மணி நேர Review-க்கு பிறகே பயன்படுத்த முடியும் பலருக்கும் மெசேஜ் வந்துள்ளதாம். இதனால் பயனர்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்த முடியாமல் அவதிக்கு ஆளாகினர்.

இந்திய நேரப்படி திங்கட்கிழமை இரவு 8 மணியளவில் இந்த திடீர் முடக்கம் ஏற்பட்டது. வாட்ஸ்அப் பயனர்கள் வழக்கம் போல் செயலியை ஓபன் செய்ய முயன்றபோது, அவர்களின் கணக்குகள் முடக்கப்பட்டு, எந்த செய்திகளையும் அனுப்பவோ பெறவோ முடியாதபடி அனைத்து அம்சங்களும் தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயனர்களின் வாட்ஸ்அப் திரையில் "Account in review. Date requested: 3 Aug 2026. Your account activity and device info is being checked to make sure it follows our terms of service. We will notify you of the result typically within 24 hours" என மெசேஜ் காட்டப்பட்டுள்ளது.
அதாவது உங்கள் கணக்கு மதிப்பாய்வில் உள்ளது. எங்கள் சேவை விதிமுறைகளை முறையாக பின்பற்றுவதை உறுதி செய்வதற்காக உங்கள் கணக்கின் செயல்பாடுகள் மற்றும் சாதன தகவல்கள் சரிபார்க்கப்பட்டு வருகின்றன. 24 மணி நேரத்திற்குள் இதன் முடிவை உங்களுக்கு தெரிவிப்போம் என அதில் கூறப்பட்டுள்ளது.
தங்களுக்கு எந்தவிதமான முன்னெச்சரிக்கையும் வழங்காமல் திடீரென செயலியை முடக்கியதாக பயனர்கள் பலரும் புகார் கூறியுள்ளனர். இதனால் தங்களது தொழில்கள் மற்றும் அலுவலக பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக எக்ஸ் போன்ற சமூக வலைதளங்களில் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளனர்.
இந்த திடீர் பிரச்சினை குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஸ்பேம் மற்றும் தவறான பயன்பாடுகளில் இருந்து எங்கள் சேவையை பாதுகாக்க நாங்கள் தொடர்ந்து முயன்று வருகிறோம், அதன் ஒரு பகுதியாக கணக்குகளை லாக் செய்கிறோம். சில நேரங்களில் எங்களது தானியங்கி அமைப்புகளில் தவறுகள் நடந்துவிட வாய்ப்புள்ளது. அவ்வாறு ஏதேனும் தவறு நடந்தால், பயனர்கள் உடனடியாக மீண்டும் வாட்ஸ் அப் சேவையை பெறும் வகையில் அதை விரைவாக சரிசெய்ய முயல்கிறோம் என தெரிவித்துள்ளார்.
ஸ்பேம் மற்றும் தவறான பயன்பாடுகளை தடுப்பதற்காக வாட்ஸ்அப் பயன்படுத்தி வரும் தானியங்கி மதிப்பீட்டு அமைப்பில் ஏற்பட்ட ஒரு சிறிய கோளாறு காரணமாகவே முறையான கணக்குகளும் தற்காலிகமாக முடக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. மெடா நிறுவனம் அவற்றை சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது.


Click it and Unblock the Notifications

