டெல்லி: வாட்ஸ் அப் செயலி தனிப்பட்ட முறையிலும் தொழில் ரீதியாகவும் தகவல் பரிமாற்றத்துக்கு பயன்படுத்தப்படும் முக்கிய செயலியாக மாறிவிட்டது. பலரும் தங்களின் செல்போன்கள் மட்டுமில்லாமல் கணினிகளிலும் வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். அப்படி கணினியில் வாட்ஸ் அப்பை பயன்படுத்துவோருக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
Indian Computer Emergency Response Team எனப்படும் CERT-In என்ற அமைப்பு இந்தியாவில் கணினியில் வாட்ஸ் அப் பயன்படுத்துவோரை குறி வைத்து ஹேக்கர்கள் சில லிங்குகளையும் ஃபைல்களையும் அனுப்புவதாக தெரிவித்துள்ளது. இந்த லிங்குகள் மற்றும் ஃபைல்கள் நம் கணினியில் இருக்கும் அனைத்து தகவல்களையும் திருடி ஹேக்கர்களுக்கு அனுப்புவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக விண்டோஸில் வாட்ஸ் அப் டெஸ்க்டாப் பயன்படுத்துவோருக்கு தான் இந்த எச்சரிக்கை வெளியிடபட்டுள்ளது. 2.2450.6க்கு முந்தைய விண்டோஸ் பதிப்புகளில் வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பை பயன்படுத்துபவர்களுக்கு இந்த பாதிப்பு அதிகமாக இருக்கும் என சொல்லப்படுகிறது. CERT-In வெளியிட்டுள்ள எச்சரிக்கையின்படி ஃபைல் எக்ஸ்டென்ஷனில் மிஸ்கன்ஃபிகரேசன் செய்து ஹேக்கர்கள் நம்முடைய கணினி செயல்பாட்டை கட்டுப்படுத்துகின்றனர் என கூறுகிறது.
வாட்ஸ் அப்பில் ஃபைல்கள், லிங்குகள் மற்றும் அட்டாச்மெண்ட்களை அனுப்பி ஹேக்கர்கள் இவ்வாறு தகவல்களை திருடுகிறார்களாம். நாம் தெரியாமல் அந்த ஃபைல் அல்லது லிங்கினை கிளிக் செய்துவிட்டால் நம் கணினியில் இருக்கும் அனைத்து தகவல்களும் ஹேக்கர்கள் வசம் சென்றுவிடும். அதுமட்டுமின்றி நமக்கே தெரியாமல் அவர்கள் நம்முடைய கணினிகளை இயக்குவார்களாம்., இதனால் நம்முடைய தனிப்பட்ட புகைப்படங்கள் மற்றும் முக்கிய ஆவணங்கள் களவு போக வாய்ப்புள்ளது.
இது மிகவும் தீவிரமான ஒரு பிரச்சனை என்று CERT-In எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ் அப் டெஸ்க்டாப்பை பயன்படுத்துவோர் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலுக்கு CVE-2025-30401 என பெயரிடப்பட்டுள்ளது. டெஸ்க்டாப் வாட்ஸ் அப் பயனாளர்கள் உடனடியாக தங்களின் செயலியை அப்டேட் செய்யும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹேக்கர்கள் தகவல்களை திருடுவதற்காகவே டெஸ்க்டாப் வாட்ஸ் அப் பயனாளர்களை குறி வைத்து பிரத்தியேகமாக இந்த ஃபைல்களை உருவாக்கி இருக்கிறார்களாம். தொழில் ரீதியாகவும் வாட்ஸ் அப்பை பலரும் பயன்படுத்துவதால் மிக கவனமாக இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப் நிறுவனமும் டெஸ்க்டாப் பயனாளர்கள் அவ்வப்போது தங்களின் செயலியை அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. பயனர்கள் தேவையற்ற லிங்குகள் மற்றும் ஃபைல்களை கிளிக் செய்ய வேண்டாம் என தெரிவித்துள்ளது. தெரியாத எண்களிடம் இருந்து வரும் மெசேஜ்களை படிப்பது அதில் இருக்கும் லிங்குகளை கிளிக் செய்வது போன்றவற்றை நிறுத்தி கொள்ள வேண்டும் என கூறியுள்ளது. சைபர் குற்றங்கள் அதிகரித்துள்ள இந்த காலகட்டத்தில் பயனர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளது.


Click it and Unblock the Notifications