மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான உலக புகழ்பெற்ற வாட்ஸ்அப் செயலி, வெறும் தகவல் பரிமாறும் தளமாக மட்டும் இல்லாமல், பயனர்களின் அன்றாட வாழ்க்கையை எளிதாக்கும் ஒரு பன்முக தளமாக மாற போகிறது. வாட்ஸ்அப்பின் உலகளாவிய தலைவராக பொறுப்பேற்ற குணால் ஷா, இந்த அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
உலகளவில் ஒவ்வொரு நொடியும் கோடிக்கணக்கான மக்கள் பல்வேறு தேவைகளுக்காக வாட்ஸ் அப்பை பயன்படுத்துகின்றனர். வாட்ஸ் அப்பில் கால மாற்றத்துக்கு ஏற்ப பல வசதிகள் வந்துவிட்டன. தற்போது உலகளவில் வாட்ஸ்அப் பயனர்கள் தினமும் 10 பில்லியனுக்கும் அதிகமான வாய்ஸ் நோட்ஸ்களையும், 4 பில்லியனுக்கும் அதிகமான ஸ்டிக்கர்களையும் அனுப்புகிறார்கள். இனி வாட்ஸ் அப் வெறும் தகவல் பரிமாற்ற செயலியாக மட்டுமே இருக்காது என குணால் ஷா கூறியுள்ளார்.

தற்போது பல தேவைகள் வாட்ஸ்அப் சாட்டிங்கில் தொடங்கினாலும், பில் கட்டுவது, கடன் பெறுவது அல்லது அரசின் சேவைகளை பெறுவது, பயணங்களின் போது அவற்றை டிராக் செய்வது போன்றவற்றுக்கு பயனர்கள் வேறு செயலிகளுக்கு செல்ல வேண்டி உள்ளது. இந்த நடைமுறையை மாற்ற வாட்ஸ்அப் திட்டமிட்டுள்ளது என தெரிவித்துள்ளார். இதற்காக நிதி சார்ந்த ஃபின்டெக் நிறுவனங்களுடன் இணைந்து வாட்ஸ்அப் சில வசதிகளை மேம்படுத்தி வருவதாக கூறியுள்ளார்.
எனவே பயனர்கள் வாட்ஸ் அப்பை விட்டு வெளியேறாமலேயே நிதி பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியுமாம். அதே போல கடன் பெறும் சேவைகளும் வாட்ஸ் அப்பிலேயே கொண்டு வரப்படும் என்கிறார். அதாவது பயனர்கள் வேறு செயலிகளுக்கே செல்லாமல் வாட்ஸ் அப்பிலேயே விண்ணப்பம் செய்து கடன்களை பெற முடியுமாம்.
வாட்ஸ்அப்பின் எதிர்கால திட்டங்களில் ஏஐ தொழில்நுட்பம் முக்கிய பங்காற்ற உள்ளது என்கிறார். பயனர்களுக்கு தேவையான தகவல்களை தேடவும், பணிகளை விரைவாக முடிக்கவும் ஏஐ உதவும் வகையில் மாற்றம் கொண்டு வரப்பட உள்ளது.
குறிப்பாக, அப்பாயிண்ட்மென்ட் புக் செய்வது , பயனர்கள் தவறவிடாமல் அப்பாயிண்ட்மெண்டுக்கு செல்வதை நினைவூட்டுவது உள்ளிட்ட உதவிகளை ஏஐ வழங்கும். சிறந்த தொழில்நுட்பம் என்பது உங்கள் நேரத்தை மிச்சப்படுத்த வேண்டும், அதனை மேற்கொள்ளும் ஒரு செயலியாக வாட்ஸ் அப் இருக்கும் என குணால் ஷா கூறியுள்ளார்.
புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தினாலும், வாட்ஸ்அப்பின் அடிப்படையான பாதுகாப்பில் எந்த சமரசமும் செய்யப்படாது என குணால் ஷா உறுதியளித்துள்ளார். பயனர்களின் தனிப்பட்ட மெசேஜ்கள் மற்றும் அழைப்புகள் எப்போதும் எண்ட்-டூ-எண்ட் என்கிரிப்ஷன் முறையில் பாதுகாக்கப்படும் என உறுதிப்பட தெரிவித்துள்ளார். வாட்ஸ்அப் உலகளவில் மிகப்பெரிய தகவல் பரிமாற்ற செயலியாக இருக்கும் நிலையில் விரைவில் நிதி சார்ந்த மற்றும் ஏஐ ஏஜெண்ட் வசதி கொண்ட செயலியாகவும் மாற உள்ளது.


Click it and Unblock the Notifications

