ஸ்மார்ட் ஃபோன்களின் பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து எல்லாமே விரல் நுனிக்கு வந்து விட்டது. முன்பெல்லாம் விருந்தினர்களின் வீட்டிற்கு சென்று திருமணத்திற்கு அழைத்த நிலை மாறி, இன்று வாட்ஸ்அப்பில் பத்திரிக்கையை அனுப்புகின்றனர். இது போன்ற டிஜிட்டல் வளர்ச்சி திருமண வேலைகளில் பிஸியாக இருப்பவர்களுக்கு எளிதான விஷயமாக இருக்கலாம். ஆனால் அதையே சைபர் குற்றவாளிகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
அதற்கு உதாரணமாய் பெங்களூருவில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஒரு தொழிலதிபர் தனக்கு வாட்ஸ்அப் மூலம் வந்த திருமணப் பத்திரிக்கையை திறந்துள்ளார். அடுத்த கனமே அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து ரூ.5 லட்சம் காணாமல் போய்யுள்ளது. மோசடி சம்பவம் எப்படி நடந்தது? பாதிக்கப்பட்டவர் என்ன செய்தார்? என்ற விவரங்களைப் பார்ப்போம்.
மோசடி எப்படி நடந்தது?: பெங்களூருவின் நயந்தஹள்ளியில் வசிப்பவர் 42 வயதான பாதிக்கப்பட்ட நபர். இவர் தற்போது ஃபர்னிச்சர் ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் அவருக்குத் தெரிந்த ஒருவரின் மொபைல் நம்பர் மூலம் திருமண பத்திரிகை ஒன்று வந்துள்ளது. "Wedding APK File Invitation" என்று குறிப்பிடப்பட்டிருந்த அந்த ஃபைலை உண்மையான திருமண அழைப்பிதழ் என்று நம்பி பாதிக்கப்பட்டவரும் ஸ்மார்ட்போனில் டவுன்லோட் செய்துள்ளார்.

பாதிக்கப்பட்ட நபர் ஃபைலை டவுன்லோட் செய்ததற்கு காரணம் என்ன தெரியுமா? போலியான ஃபைலை அனுப்பிவிட்டு அதற்கு கீழே "எங்களுடைய திருமணத்திற்கு உங்களை அன்புடன் அழைக்கிறோம். உங்களுடைய வருகையும் ஆசீர்வாதமும் எங்களுக்கு முக்கியம். முழு விவரங்களை தெரிந்து கொள்ள ஃபைலை டவுன்லோட் செய்யவும்" என அழகான இமோஜ்களுடன் மெசேஜ் இருந்துள்ளது. பார்ப்பதற்கு உண்மையான பத்திரிகை போலவே தோன்றியதால், பாதிக்கப்பட்டவரும் டவுன்லோட் செய்துள்ளார்.
ஃபைல் டவுன்லோட் செய்யப்பட்ட உடனே மோசடிக்காரர்கள் பாதிக்கப்பட்டவரின் மொபைலை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரத் தொடங்கியுள்ளனர். அதன் பின்னர் பாதிக்கப்பட்டவரின் வங்கி விவரங்கள், பின் நம்பர் என அனைத்தையும் திருடிய மோசடி கும்பல், அடுத்த சில நிமிடங்களிலேயே அவருடைய வங்கி கணக்கில் இருந்து ரூ.5,00,440-த்தை திருடியுள்ளனர். பணம் டெபிட் செய்யப்பட்ட பிறகு அனைவருக்கும் வருவது போல இவருக்கும் ஒரு மெசேஜ் வந்துள்ளது.
அப்போது தான் பாதிக்கப்பட்டவர் தான் ஏமாந்ததை உணர்ந்துள்ளார். உடனடியாக காவல்துறையில் புகார் அளித்துள்ளார். அங்கு பிஎன்எஸ் பிரிவு 318 மற்றும் ஐடி சட்டம் 66சி மற்றும் 66டி பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது போலீசார் இந்த வழக்கை விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். ஃபைல் எங்கிருந்து அனுப்பப்பட்டது, எந்த மொபைல் மூலம் முதலில் பகிரப்பட்டது என்பது போன்ற விபரங்கள் குறித்தும் விசாரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சைபர் குற்றவாளிகளிடமிருந்து தப்பிக்க என்ன செய்ய வேண்டும்?: தெரியாத ஃபைல்களை ஒருபோதும் டவுன்லோட் செய்யாதீர்கள். அதுவும் ".APK" என முடியும் எந்த ஒரு ஃபைலும் போலியாக இருக்கலாம் என்பதை நினைவில் கொள்ளுங்கள். இது போன்ற மெசேஜ் வந்தால் உடனடியாக டெலிட் செய்து விடுங்கள்.
உண்மையான அழைப்பிதழாக இருந்தால் PDF வடிவில் அனுப்பப்படும் அல்லது இமேஜாக இருக்கும். ஒருபோதும் ஃபைல் மூலமாக திருமணப் பத்திரிகைகள் அனுப்பப்படாது. மேலும் சிலர் அப்ளிகேஷன்களை டவுன்லோட் செய்ய ஏதேதோ லிங்குகளை பயன்படுத்துகின்றனர். அதற்கு பதிலாக கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் போன்களில் ஆப் ஸ்டோர் போன்றவற்றை மட்டுமே பயன்படுத்தினால் எந்தப் பிரச்சினையும் இருக்காது. தெரியாமல் நீங்கள் இது போன்ற மோசடியில் சிக்கிக் கொண்டால் தாமதிக்காமல் உடனே "1930" என்ற சைபர் கிரைம் உதவி எண்ணுக்கு தொடர்பு கொள்ளுங்கள்!
இது போன்ற பதிவுகளை படிக்கும் நபர்கள் சைபர் குற்றங்கள் குறித்து தெரியாமல் ஸ்மார்ட்போன் பயன்படுத்தி வரும் முதியவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள். இன்றெல்லாம் பாதி சைபர் குற்றங்கள் 30 வயதிற்கு மேல் உள்ள நபர்களை குறிவைத்து தான் நடக்கிறது. விழிப்புணர்வை தவிர இது போன்ற மோசடிகளில் இருந்து தப்பிக்க வேறு வழியே இல்லை என்பதுதான் பலரின் கருத்தாக உள்ளது.


Click it and Unblock the Notifications