பொதுவாக வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் கடன் பத்திரத்தில் எப்போது ஆவணங்கள் கொடுக்கப்படும் என்பது குறித்த விபரங்களை தெரிவித்திருக்கும், அதை முழுமையாக மக்கள் படித்து அதன் பின்பு கையெழுத்திட வேண்டும், இதை பலரும் செய்ய மறப்பது இயல்பான ஒன்றாகவே ஆகிவிட்டது.
ஆனால் உண்மையில் இது தான் வீட்டு பத்திரங்களை பெறுவதற்கான முக்கிய கண்டிஷனாக உள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி விதிகள் படி வங்கிகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட அனைத்து நிதி நிறுவனங்களும் கடன் பத்திரத்தில் அசல் சொத்து ஆவணங்கள் திரும்பப் பெறுவதற்கான காலக்கெடு மற்றும் இடம் ஆகியவை தெளிவாகக் குறிப்பிடப்பட வேண்டும்.

இப்படி குறித்த தேதியில் அல்லது குறித்த காலக்கட்டத்தில் ஆவணங்களை வங்கி நிர்வாகம் அதன் வாடிக்கையாளரிடம் கொடுப்பது இல்லை என்பதை தெரிந்துக் கொண்ட ஆர்பிஐ, இன்று வெளியிட்ட அறிவிப்பில் கடனுக்கான தொகையை முழுமையாக திருப்பிச் செலுத்தி அல்லது செட்டில் செய்த 30 நாட்களுக்குள் வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரிஜினல் ஆவணங்கள் உரிய நபரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில் ஒவ்வொரு நாள் தாமதத்திற்கும் 5000 ரூபாய் இழப்பீட்டை கடன் வாங்கியவர்களுக்கு அளிக்க வேண்டும் என்ற புதிய விதிமுறை கொண்டு வரப்பட்டு டிசம்பர் 1, 2023 முதல் நடைமுறைக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் ஒரு கடன் வாங்குபவர் அல்லது கூட்டுக் கடன் வாங்குபவர்களின் துரதிர்ஷ்டவசமாக மரணம் போன்ற நிகழ்வு நடந்தால் இதை சரி செய்ய வங்கி மற்றும் பதிவு செய்யப்பட்ட நிதி அமைப்புகள் அசல் சொத்து ஆவணங்களை சட்டப்பூர்வ வாரிசுகளுக்குத் திருப்பித் தருவதற்கு நன்கு வரையறுக்கப்பட்ட நடைமுறையை உருவாக்க வேண்டும்.
மேலும் இந்த நடைமுறையை வங்கி வாடிக்கையாளர் எளிதாக தெரிந்துக்கொள்ள ஏற்ற வகையில் இது தொடர்பான அனைத்து கொள்கைகள் மற்றும் நடைமுறைகளுடன் வங்கி அல்லது பதிவு செய்யப்பட்ட நிதி நிறுவனங்களின் இணையதளங்களில் இந்த செயல்முறை பதிவிடப்பட்டு எப்போது வேண்டுமானாலும் அணுக்க கூடியதாக இருக்க வேண்டும் என்ற விதிமுறை உள்ளது.
மேலும், வங்கி பாதுகாப்பில் இருக்கும் ஒரிஜினல் சொத்து ஆவணங்களின் இழப்பு அல்லது சேதம் (பகுதியாகவோ அல்லது முழுமையாகவோ) அடையும் பட்சத்தில், இந்த ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு வங்கி மற்றும் நிதி நிறுவனங்கள் உதவ கடமைப்பட்டுள்ளது.
இது தொடர்பான செலவுகளையும் வங்கி அல்லது நிதி நிறுவனங்கள் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும். இதுப்போன்ற சூழ்நிலையில் கூடுதலாக, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதலாக இழப்பீடு செலுத்த வேண்டும்.
மேலும் இதுபோன்ற சந்தர்ப்பங்களில், ஆவணங்களின் நகல் அல்லது சான்றளிக்கப்பட்ட நகல்களைப் பெறுவதற்கு 30 நாட்கள் கூடுதல் நேரம் கிடைக்கும். கூடுதல் தாமதத்திற்கு கூடுதல் அபராத தொகை வங்கிகள் செலுத்த வேண்டும்.


Click it and Unblock the Notifications